புதன், 7 செப்டம்பர், 2011

யாழ் மர்ம மனிதன் பீதி கிராம மட்டத்தில் குழுக்கள்!

யாழ்.குடாநாட்டில் அதிகரித்திருக்கும் மர்ம மனிதன் பீதி தொடர்பில் கிராம மட்டங்களில் குழுக்களை அமைப்பதற்கு பாதுகாப்புக்கென கிராம மட்டத்தில் குழுக்கள்!


யாழ். குடாநாட்டில் அதிகரித்திருக்கும் மர்ம மனிதன் பீதி தொடர்பில் கிராம மட்டங்களில் குழுக்களை அமைப்பதற்கு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிராம சேவகர் தலைமையில் கிராம மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. வடமாகாண ஆளுநர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவினர் அடுத்தவாரம் சந்தித்து இது பற்றிக் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் மர்ம மனிதனின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக வெளியான தகவல்களையடுத்து மக்கள் மத்தியில் பீதி நிலை தோன்றியது.

இது தொடர்பாக ஆராய்வதற்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்த்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இந்த உயர்மட்ட பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சேவகர் தலைமையில் குழுக்களை நியமித்து பாதுகாப்புக் குறித்து உயர்மட்டக் குழுவினருடன் வாராந்தம் ஆராய்வதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிராம மட்டக் குழுக்களில் யார் யாரை உள்ளடக்குவது என்பது பற்றி இன்றையதினம் மீண்டும் கூடி ஆராய்வதற்கும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்குடன் ஒவ்வொரு வாரமும் கூடி ஆராய்வார்கள்.

யாழ். மாவட்ட மக்கள் மத்தியில் தற்பொழுது நிலவும் மர்ம மனிதர்கள் தொடர்பான பீதி ஆரம்பத்தில் நாட்டின் தென்பகுதியிலேயே தோற்றம்பெற்றது.

இந்த மர்ம மனிதர்கள் தொடர்பான பீதி யாழ். மக்கள் மத்தியில் தற்பொழுதும் அதிகரித்துள்ளது என்பதை நாம் அறிவோம். இதற்கு உடனடித் தீர்வு காணும் வகையில் கெளரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே நான் இங்கு வந்துள்ளேன்.

இந்த யாழ். மாவட்ட மக்களின் பீதியைப் போக்குவதற்கு மத குருமார்கள், சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர், இராணுவத் தளபதி, அரசாங்க அதிபர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய உயர் மட்ட அதிகாரிகள் குழு ஒன்றினை ஏற்பாடு செய்யவுள்ளோம் என்றார்.

குடாநாட்டில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் கவலைக்கிடமான முறையில் உள்ளதைச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனைவிட ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் பிரதேச செயலாளர்கள், பொலிஸார், பொதுமக்கள் உள்ளிட்ட விழிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றினூடாக சகல குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தி மக்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என்றார்.

இந்த நிகழ்வில் கற்றுக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள், யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக விளக்கமளித்தனர்.

பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் குடாநாட்டில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் கவலைக்கிடமான முறையில் உள்ளதை சுட்டிக்காட்டினர்.

மேலும் தமது பாதுகாப்பினை உடனடியாக உறுதி செய்து தருமாறும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் தடுத்து வைத்துள்ள நாவாற்துறை மக்களை விடுதலை செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர். இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றும் பொழுது இந்தப் பிரச்சினைகளினை தீர்ப்பதற்கு பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் பொதுமக்கள் தமக்கிடையே வதந்திகளைப் பரப்பி இயல்பு நிலையினைக் குழப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதில் கலந்துகொண்ட சர்வ மதத் தலைவர்கள் பொதுமக்களும் இராணுவத்தினரும் பெலிஸாரும் ஒற்றுமையாக, சமாதானமாக வாழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட கட்டளைகத் தளபதி மேயர் ஜெனரல் ஹத்துருசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான மு. சந்திரகுமார், சில்வெஸ்திரி அலன்ரின், சர்வ மதத் தலைவர்கள், சிரேஷ்ட பெலிஸ் மா அதிபர், அரசாங்க அதிபர்கள், யாழ். நகர மேயர், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்பினர், பெண்கள் அபிவிருத்தி நிலைய அதிகாரிகள், புத்திஜீவிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: