தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்கினால் முதல்வர் ஜெயலலிதா தான் பொறுப்பு:ராஜீவ் காந்தி கொலையில் தண்டனை பெற்றவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்
சென்னை: தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலை தூக்கினால் அதற்கு முதல்வர் ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். ராஜீவ் காந்தி கொலையுண்டபோது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டும், 3 பேருடைய தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரியும் அண்ணாசாலையில் உள்ள தலைமை மின்வாரியம் அலுவலகம் பின்புறம் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
எம்.எஸ்.திரவியம், ஜோதி ராமலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:
ராஜீவ் காந்தி கொலையில் தண்டனை பெற்றவர்களுக்கு தூக்கு தண்டனையை விட அதிக பட்சமான தண்டனையை கொடுக்க வேண்டும். அந்த தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் தமிழக சட்டபேரவையில் தூக்கு தண்டனை பெற்றவர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தைரியத்துக்கு பெயர் போன ஜெயலலிதா யாருடைய அச்சுறுத்தல் காரணமாக இப்படி தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்?
தமிழக மக்களை திசை திருப்ப இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா முழுவதும் தீவிரவாதம் தலைதூக்கியுள்ளது. இந்த தீர்மானத்தை ஜெயலலிதா உடனே வாபஸ் பெற வேண்டும். அப்படி வாபஸ் பெறாவிட்டால் தமிழகத்தில் ஏற்படும் தீவிரவாதத்திற்கு ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும். ராஜீவ் காந்தியின் நண்பர் எம்ஜிஆர் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் அந்த தீர்மானத்தை அவர் வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
உண்ணாவிரதத்தில், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் கோவை நஞ்சப்பன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சைதை ரவி, வாழப்பாடி சுகந்தன், சி.டி. மெய்யப்பன், கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ, ஜெ.சதீஷ்குமார், ராஜ மகாலிங்கம், வில்லிவாக்கம் சுரேஷ், முன்னாள் எம்எல்ஏக்கள் வசந்தகுமார், முருகானந்தம், கவுன்சிலர் ஜெயகலா பிரபாகர் மற்றும் பாதிக்கப்பட்ட 5 குடும்பத்தினர் உள்பட 500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக