வெள்ளி, 9 செப்டம்பர், 2011

பாலசந்தர்: இளம் கலைஞர்களின் சாதனை என்னை மேலும் சாதிக்கத் தூண்டுகிறது


தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் கே. பாலசந்தரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார் முத்தமிழ்ப் பேரவை இரா. முகுந்தன்.
புது தில்லி: செப்.8: திரைத்துறையில் இளைய தலைமுறையினர் செய்து வரும் சாதனைகள் என்னை மேலும் மேலும் சாதிக்கத் தூண்டுகிறது என இயக்குநர் கே.பாலசந்தர் கூறினார்.இந்தியத் திரையுலகின் உயரிய விருதான பால்கே விருது பெறும் இயக்குநர் கே.பாலசந்தர் மற்றும் தேசிய விருது பெறும் திரைக்கலைஞர்கள் ஆகியோருக்கு தினமணி நாளிதழும் தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து தில்லியில் வியாழக்கிழமை பாராட்டு விழாவை நடத்தின.
நிகழ்ச்சியில் பேசுகிறார் கவிஞர் வைரமுத்து.
இந்த நிகழ்ச்சியில் கே.பாலசந்தர் பேசியதாவது:தமிழர்கள் பொதுவாக புத்திசாலிகள்; தில்லித் தமிழர்கள் அதிபுத்திசாலிகள். அரசு எங்களுக்கு விருதும் பாராட்டும் வழங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே தினமணி நாளிதழும் தில்லித் தமிழ்ச் சங்கமும் எங்களைக் கௌரவித்துப் பாராட்டு விழா நடத்துவதுதான் அதற்குச் சாட்சி.இங்கு பேசியவர்கள் அனைவரும் என்னைப் பாராட்டியே பேசிக்கொண்டிருந்தார்கள். நான் மட்டுமா விருது வாங்கியிருக்கிறேன். பல இளம் கலைஞர்களும் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் இந்த முறை தமிழ்க் கலைஞர்களுக்கு மிக அதிக எண்ணிக்கையிலான விருதுகள் கிடைத்திருப்பது, தமிழ் சினிமாவின் வீச்சு அதிகரித்திருப்பதைக் காட்டியுள்ளது."ஆடுகளம்' படத்திற்காக வெற்றிமாறன் சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் ஆகியவற்றுக்காக இரண்டு தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். நான் அப்படி இதுவரை இரண்டு விருதுகள் வாங்கியதேயில்லை. தனியாக சிறந்த திரைக்கதைக்கோ, இயக்கத்துக்கோ பெற்றிருக்கிறேனே தவிர ஒரே நேரத்தில் இரண்டு விருதுகளைப் பெற்றதில்லை. இதை நான் வெற்றிமாறனிடமும் சொல்லி நானும் இதுபோல ஒரே நேரத்தில் இரு விருதுகளை வாங்கிக் காட்டுகிறேன் பார் என்று சவால் விட்டிருக்கிறேன்.

நல்ல படைப்புகளுக்காக இளம் கலைஞர்கள் விருது பெறும்போது "அட, இப்படி நாம் எடுக்கவில்லையே' என அவர்கள் மீது எனக்கு உண்மையிலேயே பொறாமை ஏற்படுகிறது. இதைச் சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. ஏனென்றால் அவர்களைப் போல நல்ல படைப்பை நாமும் தரவேண்டுமே என்ற நல்ல எண்ணம்தான் காரணம். இளம் திரைக்கலைஞர்களின் சாதனை என்னை மேலும் மேலும் சாதிக்கத் தூண்டுகிறது என்பதுதான் உண்மை.தனுஷ் சிறந்த நடிகர் விருது பெற்றிருக்கிறார். அது ஏதோ விளையாட்டுக்குக் கிடைத்த விருதல்ல. அவருடைய திறமையான நடிப்புக்குக் கிடைத்த விருது. இந்த சிறு வயதில் தேசிய விருது பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. "உனக்கு தேசிய விருது வாங்கும் எண்ணமே இல்லையா' என நான், ரஜினியிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் "ஜனங்களின் விருது போதும்' எனக் கூறிவிட்டார். ரஜினிக்குக் கிடைக்க வேண்டிய தேசிய விருது தனுஷுக்குக் கிடைத்ததாகவே நான் கருதுகிறேன்.இங்கு எல்லோருக்கும் நடைபெற்ற இந்த சிறப்பான பாராட்டு விழாவில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். என்னை விட்டுவிடுங்கள்... இளைய தலைமுறையினரின் திறமையை அங்கீகரித்து அவர்களை வாழ்த்துங்கள். அவர்கள் உயர்ந்தால் தமிழ் சினிமா உயரும்.தமிழ்த் திரைப்படத்துறையிலிருந்து மேலும் பல புதியவர்கள் விருதுகளைப் பெறவும் இங்கு விருது பெற்றவர்கள் இன்னும் பல சாதனைகளைப் படைக்கவும் வாழ்த்துகிறேன் என்றார் பால்கே பாலசந்தர்.

கருத்துகள் இல்லை: