செவ்வாய், 27 ஜூலை, 2010

குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்'

மதுரை : ""குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்று, ரத்தத்தை மண்சட்டியில் பிடித்து வறுத்தேன். அதை, ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தேன்,'' என மதுரை குழந்தையை "நரபலி' கொடுத்த கொடூரன், பகீர் வாக்குமூலம் அளித்தான்.

மதுரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்த செரின்பாத்திமாவின் ஆண் குழந்தை காதர்யூசப்பை (1) கடத்தி கொலை செய்து, நரபலி கொடுத்த கொடூரன் அப்துல்கபூர் (30) போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் மகதூம் தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் மீராசாகிப். இவரது நான்காவது மகனான நான் (அப்துல்கபூர்), அங்குள்ள சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். தந்தை வெளிநாட்டில் வேலைக்கு சென்றார். படிப்பு வராததால் ஊர் சுற்றி வந்தேன். மது, கஞ்சா பழக்கம் இருந்தது. பத்தாண்டுக்கு முன், முத்தையாபுரத்தை சேர்ந்த அசன்மரக்காயர் மகள் சையது அலி பாத்திமாவிற்கும், எனக்கும் திருமணம் நடந்தது. பாத்திமா நஸ்ரின் என்ற மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடால், ஐந்தாண்டுகளுக்கு முன், மனைவியை விட்டு பிரிந்தேன். தாயின் பாதுகாப்பில் மகள் உள்ளார். மனைவியை பிரிந்ததால், மனம் வருத்தப்பட்டேன்.

இதனால், சமையல் வேலைக்கு செல்லவில்லை. என் மீது குடும்பத்தினர் வெறுப்படைந்தனர். எப்போதாவது வேலைக்கு சென்று, மது குடித்து வந்தேன். காசு இல்லாத நேரம் மனம் வருத்தப்படும். பட்டினியோடு திரிவேன். உடல் நிலை மோசமடைந்தது. எங்கள் ஊரை சேர்ந்தவர்கள், ஏர்வாடி தர்கா சென்றால், உடல் குணமாகும்; கெட்ட பழக்கம் மாறிவிடும் என்றனர்.

இரண்டாவது திருமணம்:ஐந்தாண்டுகளுக்கு முன், ஏர்வாடி சென்று தர்காவில் தங்கினேன். அங்கு தரும் உணவை சாப்பிட்டேன். ஒரு மாதத்திற்கு முன், என்னைப்போல் உடல் நிலை பாதிக்கப்பட்ட முத்தையாபுரத்தை சேர்ந்த, விவாகரத்து பெற்ற ரமீலாபீவி, ஏர்வாடி தர்காவிற்கு வந்தார். அவருக்கு பல உதவிகளை செய்தேன். எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. தர்காவிலேயே, நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஏர்வாடியில், 200 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம்.தர்காவிற்கு வருவோர் கொடுக்கும் காசுகளை சேகரித்து வந்தேன். அந்த வருமானத்தில் "சோமாஸ்' செய்து, ரமீலாவிடம் கொடுத்து விற்று வரச்சொல்வேன். அதில் கிடைத்த வருமானத்தில் சாப்பிட்டோம்.  தலை பிள்ளையை கொன்று ரத்தத்தை எடுத்து ஒரு குழாயில் அடைத்தும், அந்த குழந்தையின் தலையை தனியாக எடுத்து, கடற்கரையில் புதைத்து வைத்து, ரத்தத்தை பூஜை செய்து கடலில் எறிந்தால் உடல் நிலை சரியாகும் என சிலர் சொல்ல கேட்டேன்.இது குறித்து ரமீலாவிடம் கூறினேன். அவரும், இதுபோல் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். சமயம் வரும்போது செய்வோம் என முடிவு செய்தோம். ஏர்வாடியில் சோமாஸ் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை வைத்து, பல தர்காக்களுக்கு சென்று பாத்தியா ஓதி வந்தோம்.

தர்காவில் குழந்தை கடத்தல்:கடந்த ஜூன் 30ம் தேதி கோரிப்பாளையம் தர்காவிற்கு வந்தோம். அங்கு தங்குவதற்கு பதிவு செய்ய வேண்டும். அதற்காக, பணம் கட்ட வேண்டும் என்றனர். எனக்கும், ரமீலாவிற்கும் சேர்த்து தலா 150 ரூபாயை தர்காவில் செலுத்தினேன். தர்காவில் 41 நாட்கள் தங்கலாம் என்றனர். கடந்த ஜூலை 1ம் தேதி தங்கினோம். கைக்குழந்தையுடன், பெண்ணும், பாட்டி ஒருவரும் தர்காவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்தக் குழந்தையை கடத்த திட்டமிட்டோம். இதற்காக, குழந்தைக்கு அருகிலேயே நாங்களும் படுத்துக் கொண்டோம்.இரவு 10 மணிக்கு தர்காவின் கதவுகளை பூட்டினர். அதிகாலை நான்கு மணிக்கு குழந்தை அழுதது. குழந்தைக்கு தாயார் பாலூட்டினார். பின், குழந்தையை படுக்க வைத்து, அருகிலேயே அவரும், பாட்டியும் படுத்துக் கொண்டனர். அதிகாலை 4.30 மணிக்கு பாங்கு சொல்லும் போது, கதவை திறந்தனர். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தோம்.

குழந்தையை கொன்று நரபலி:மதுரையில் இருந்து பஸ்சில் திருநெல்வேலி சென்றோம். குழந்தையை வெளியில் வைத்து கொலை செய்தால் தெரிந்து விடும் என ரமீலா சொன்னார். லாட்ஜில் அறை எடுத்து, அங்கு குழந்தையை கொல்ல முடிவு செய்தோம். இதன்படி, தூத்துக்குடி அருகே ஏரல் என்ற ஊருக்கு வந்தோம். பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள லாட்ஜில் அறை எடுத்தோம். குழந்தையின் வெள்ளி கொலுசு, வெள்ளி அறைஞாண்கயிரை கழற்றினேன். அதை விற்று வரும்படி ரமீலாவிடம் கொடுத்து அனுப்பினேன். அதை, 2,000 ரூபாய்க்கு ரமீலா விற்றார்.அறையில் இருந்த பாத்ரூமில் குழந்தையை ரமீலா பிடித்துக் கொண்டார். நான், கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை ஒரு சில்வர் டப்பாவில் பிடித்தேன். உடலை ஒரு பெரிய தூக்குவாளியிலும், தலையை ஒரு சின்ன தூக்குவாளியிலும் போட்டு மூடினோம். அறையை காலி செய்து விட்டு, ஏர்வாடியில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு வந்தோம். ரத்தத்தை மண் சட்டியில் போட்டு வறுத்தோம். ரத்தம் லேகியம் போல் ஆனதும், அதை ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தோம். சில நாட்கள் கழித்து, குழந்தையின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்தோம்.எனது தாயார், சிறு வயதில் என்னை தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி தர்காவிற்கு அழைத்து செல்வார். எனவே, குழந்தையின் தலையை, தர்கா அருகிலேயே புதைக்க திட்டமிட்டோம். இதன்படி, குழந்தையின் தலையை வைத்திருந்த தூக்குவாளி, ரத்தம் அடைத்து வைத்திருந்த சில்வர் குழாய், குழந்தையின் கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை எடுத்து கொண்டு கல்லாமொழிக்கு சென்றோம். கடற்கரையில், ரத்தம் அடைத்த குழாயை, ரமீலாவின் தலையை சுற்றி கடலில் எறிந்தேன். தலை வைக்கப்பட்டிருந்த தூக்குவாளியை, ரமீலா தலையை சுற்றி கடற்கரையில் தலையை புதைத்தேன். கத்தி, வாளியை கடலில் வீசினேன்.பின், தினமும் அங்கு சென்று பூஜை செய்து தொழுது வந்தேன்.கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு, தர்காவில் தூங்கி கொண்டிருந்த என்னையும், ரமீலாவையும் போலீசார் பிடித்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.இவருக்கு உறுதுணையாக இருந்து குழந்தையை நரபலி கொடுத்தது குறித்து ரமீலாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்துதல்), 302 (கொலை), 201 (தடயங்கள், சாட்சியங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ், மதுரை தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் வழக்குப்பதிவு செய்தார்.இருவரையும், மதுரை இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி முன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, அப்துல்கபூர் மதுரை சிறையிலும், ரமீலா திருச்சி சிறையிலும் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: