மேலூர் : பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை, மதுரை - மேலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் வீசப்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நான்கு வழிச்சாலையில் மேலூருக்கு திரும்பும் இடத்தில் உள்ள வாழை தோட்டத்தில் கிணறு தோண்டியபோது எடுக்கப்பட்ட கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை அதற்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். இரு புறமும் பாறாங்கற்கள் வைக்கப் பட்டு, அதன் நடுவில் குழந்தை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி பார்த்த போது, எறும்புகள் மொய்த்த நிலையில் காயங்களுடன், ஒல்லியான பெண் சிசு இருந்தது. அரசின் "108' இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சுரேஷ், விமல், சரவணன் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர்.
டாக்டர்கள் கூறியதாவது: இக்குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆகி உள்ளது. மேற்புறமாக கல் அழுத்தி உள்ளதால் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் உடைந்துள்ளதாக தெரிகிறது. முதலுதவி சிகிச்சைக்கு பின், மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை அனுப்பப் பட்டுள்ளது, என்றனர்.
மனிதாபிமானமற்ற பெற்றோர் யார்?: நான்கு வழிச்சாலையில் வழியாக பயணம் செய்த யாரோ தான் இப்படி குழந்தையை போட்டு விட்டு சென்றிருக்க வேண்டும். குழந்தையின் கை மற்றும் காலில் கண்மை இடப்பட்டு உள்ளது. ஆசையுடன் கொஞ்சிய பச்சிளம் குழந்தையை இப்படி வீசியதற்கு பதில் அரசு தொட்டிலில் சேர்த்து இருக்கலாமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக