tamil.oneindia.com -Vigneshkumar : கரூர்: கரூரில் கடந்த வாரம் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். செந்தில் பாலாஜி குறித்துப் பேச ஆரம்பித்தவுடன் தான் செருப்பு வீசப்பட்டதாகவும்,
அதன் பிறகே குழப்பம் ஏற்பட்டதாகவும் தவெகவினர் கூறி வரும் நிலையில், அதை செந்தில் பாலாஜி ஆதாரத்தோடு மறுத்துள்ளார்.
தன்னை பற்றி கடைசி சில நிமிடங்கள் மட்டுமே விஜய் பேசியதாகவும் அதற்கு முன்பு விஜய் பேச ஆரம்பித்த 3வது நிமிடத்திலேயே செருப்பு வீசப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கரூரில் விஜய் கடந்த வாரம் பிரச்சாரம் செய்தார். பல மணி நேரம் கரூருக்கு தாமதமாகச் சென்ற விஜய் இரவு அங்குப் பிரச்சாரம் செய்தார். அப்போது திடீரெனக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜய் வாகனம் வந்த போது திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்தால் நிலைமை மோசமானது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தில் சதி நடந்துள்ளதாகவும் தவெகவினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். குறிப்பாக செந்தில் பாலாஜி பற்றிப் பேச ஆரம்பித்தவுடனேயே செருப்புகள் வீசப்பட்டதாகக் கூறுகின்றனர். இது இணையத்தில் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கிடையே கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
அதாவது விஜய் மொத்தம் 19 நிமிடங்கள் கரூரில் பேசியதாகவும் அதில் தன்னை பற்றி விமர்சனம் செய்தும் பாட்டுப் பாடியதும் கடைசி சில நிமிடங்களில் மட்டுமே என அவர் குறிப்பிட்டார். ஆனால், விஜய் பேச ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்திலேயே முதல் செருப்பு வீசப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார். மக்கள் மயங்கி விழுவதால் உதவி கேட்கவே மக்கள் செருப்பு உள்ளிட்ட கையில் கிடைக்கும் பொருட்களை வீசியதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் அவர் போட்டுக் காட்டினார். அதில் விஜய் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே செருப்பு உள்ளிட்ட சில பொருட்கள் வீச ஆரம்பிக்கப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. அதாவது விஜய் பேச ஆரம்பித்த போது அங்குக் கூட்ட நெரிசலால் மக்கள் மயங்கி விழுக ஆரம்பித்துவிட்டனர். இதனால் உதவி கேட்டு கவனத்தை ஈர்க்கவே அவர்கள் கையில் கிடைத்ததை எல்லாம் வீசியதாகக் கூறப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி கேள்வி
இத்தனை ஆயிரம் தவெகவினர் கூடியிருக்கும் போது, ஒரு சில வெளியாட்கள் நுழைந்து எப்படிப் பிரச்சினை செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், அதுபோல ஊடுருவியிருந்தால் அதை அப்போதே தவெகவினர் கேள்வி எழுப்பி இருப்பார்களே என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அவர் மேலும், "விஜய் கூட்டத்திற்கு வந்தவர்கள் கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தால் எதாவது ஒரு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்றிருக்க வேண்டும் அல்லவா? இது உண்மையாக இருந்தால் அதற்கான ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கட்டும்.
வேலுச்சாமிபுரத்தில் போய் பாருங்கள். அங்கு 1000 செருப்புகள் வீதியில் கிடந்தன, ஆனால் ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லை, இதிலிருந்தே தெரிகிறது, மக்களுக்கு குடிநீரோ, பிஸ்கட் பாக்கெட்டோ வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியே அதை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
கூட்டநெரிசல் அதிகமாகும்போது, ஜெனரேட்டர் அறை தடுப்புகளை உடைத்து உள்ளே போக தொடங்கினர், அப்போதுதான் ஜெனரேட்டர்கள் ஆஃப் ஆகியிருக்கிறது. யாரும் ஆஃப் செய்யவில்லை. மேலும் அப்போது கூட சாலை விளக்குகள் எரிந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் கூடுதலாக அமைத்த விளக்குகள் மட்டும் ஆஃப் செய்யப்பட்டது வீடியோவில் எல்லாமே தெளிவாக தெரிகிறது. எங்கும் மின் விநியோகம் தடைப்படவில்லை" என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக