Rajasangeethan : நடிகர் விஜய் கட்சியைத் தொடங்கி காலத்தில் அவரும் உத்தி வகுக்கும் ஜான் ஆரோக்கியசாமியும் புஸ்ஸி ஆனந்தும் பல ஊடகவியலாளர்களை சந்தித்துக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது.
சந்திப்புகளில் கலந்துகொள்ளும் ஊடகவியலாளர்களிடம், கட்சியில் இருக்கும் அனைவரும் ரசிக மனப்பான்மையிலும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவும் இருப்பதாகவும் அவர்களை அரசியல்படுத்தி அமைப்பாக்குவதற்கான யோசனைகளும் உதவிகளும் கேட்கப்பட்டது.
தமிழ்நாடு அரசியலுக்குள் ஒரு Untested Crowd-ஐ நடிகர் விஜய் கொண்டு வந்தார். தேர்தலோ அரசியலோ பேசாமல் 'ஓடுகிற பாம்பையும் மிதிக்கும்' சாகச வயதுகளில் இருந்தவர்கள்தான் அதில் 95 சதவிகித பேர். அரசியலையே பேச விரும்பாத அவர்கள், அரசியல் களத்துக்குள் விஜய் மூலம் வந்தது நல்ல விஷயம்தான். அரசியலே அறியாமல் ஒரு சமூகத்தின் பெருங்கூட்டம் இருப்பது ஆபத்து.
விஜயின் கட்சிக்குள் வந்து பிற கட்சியினருடன் விவாதிக்கவேனும் எதையேனும் தெரிந்து கொள்வது, வாசிப்பது என்கிற வழியில் அரசியல்வயப்படும் வாய்ப்பு அவர்களுக்கு தமிழ் அரசியல் சூழலிக் இருந்தது. ஆனால் நடந்ததா?
ஊடகவியலாளர்களும் அரசியல் விமர்சகர்களும் ரசிகர்களை அரசியல்படுத்தவென சொன்ன யோசனைகள் நடைமுறை ஆவதற்கான அடையாளமேதும் தென்படவில்லை.
மாநாடுகள் தொடங்கி எல்லா நிகழ்வுகளிலும் தவெக தொண்டர்கள் நடந்து கொண்ட விதமும், அவர்களை தலைமையில் இருப்பவர்கள் கையாண்ட விதமும் பொது சிந்தனை கொண்டிருந்த பலரையுமே துணுக்குற செய்தது.
குடிநீருக்கு கூட முறையான ஏற்பாடு இன்றி ஒருங்கிணைப்பது, மாலை தொடங்கவிருக்கும் கூட்டத்துக்கு காலையிலிருந்து வெட்டவெயிலில் வந்து நின்று காத்திருப்பது, குடிநீர் பாட்டில்களை ரசிகர் திரளில் தூக்கி எறிவது, ட்ரோன் காட்சிக்காக கூரைகள் இன்றி அரங்கை வடிவமைப்பது, தரையில் இருக்கும் கார்ப்பெட்டுகளை உருவி எடுத்து ரசிகர்கள் வெயிலிலிருந்து தங்களை காத்துக் கொள்வது, நாற்காலிகளை உடைப்பது, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது, புஸ்ஸி ஆனந்த் அதட்டியும் கேட்க மறுப்பது என. தொடர்ந்து தவெக தலைமைக்கும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கும் இடையே ஒரு தொடர்பற்ற நிலை இருந்து வந்தது.
இவற்றை தாண்டி பவன் கல்யாண் போல சினிமாத்தனமாகவே ஆக்ரோஷ பஞ்ச் வசனங்களும் அரசியலற்ற 'ஒத்தைக்கு ஒத்த பார்க்கலாமா' பாணியிலான பேச்சுகளையே மேடையின் பேச்சுமொழியாக விஜய்யும் உருவாக்கிக் கொண்டார். ரசிக மனநிலையில் இருப்பவர்களை இன்னும் தூண்டி விட்டு, தன்னுடைய பிம்பத்தை உச்சத்தில் வைத்திருப்பதற்கான பேச்சுகள் அவை.
விக்கிரவாண்டி மாநாடு முதலே விஜயின் பேச்சு, அரசியல் ஆகியவற்றை தாண்டி அவரது ramp ஓட்டத்துக்குதான் திரண்டவர்கள் ஆர்வமாக காத்திருந்தார்கள். வாய்ப்பு கிடைக்கும்போது நெருக்கத்தில் பார்த்துவிட மாட்டோமா என்கிற விருப்பமும் சாகச உணர்வும்தான் மேலோங்கி இருந்தது.
மறுபக்கத்தில் தலைமையில் இருப்பவர்களோ ரசிகர்கள் நெருங்காமல் இருப்பதற்கான கட்டுப்பாடுகளையோ கடும் உத்தரவு அல்லது நடைமுறைகளையோ வழங்காமல், ramp கம்பிகளுக்கு க்ரீஸ் பூசிக் கொண்டிருந்தார்கள். அவர்களையும் விஞ்சி தன் இலக்கை அடைந்து விடும் நோக்கில் நாற்காலிகளை உடைத்து ஒன்றன் மீது ஒன்றாக போட்டு, க்ரீஸ் கம்பியிலும் லாவகமாக நடந்து சென்று ramp-ல் வரும் விஜயை பார்த்து விட வேண்டுமென முனைப்பு காட்டத் தொடங்கினார்கள் ரசிகர்கள். இறுதியில் விஜயின் மெய்க்காப்பாளர்கள், தூக்கி ramp-க்கு வெளியே ரசிகர்களை வீசும் வாய்ப்பை ரசிகர்கள் கொடுத்தார்கள்.
விஜயை காண கூடியவர்களிடம் விஜய் மீதான கண்மூடித்தனமான பக்தி நிலை இருந்தது என்றால் ramp-ல் நடந்து முடிந்து மேடையில் நின்று அந்த பெருங்கூட்டத்தை பார்க்கும் விஜயின் கண்கள் பூரிப்பில் நனையும் நிலை இருந்தது.
ஒரு monstrous crowd-ஐ எப்படி ஒருவர் ரசிக்க முடியும்?
விஜயகாந்த் கூட்டங்களிலும் இத்தகைய சினிமா ரசிக கூட்டம் வரும். ஆனால் அவர்கள் மீதான எரிச்சலை விஜயகாந்திடமே நீங்கள் பார்க்கலாம். மேடையில் பேசுகையில் இடையூறு செய்யும் ரசிகர்களை அதட்டுவது, திட்டுவது என்றெல்லாம் விஜயகாந்த் அவர்களை ஒழுங்காமைக்க முயன்ற எந்தவொரு முயற்சியும் விஜயிடம் தென்படவே இல்லை. மாறாக அவர் அத்தகைய நிலையை ரசித்தார்.
விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் கூட, அவர் நின்று பேசும் பேருந்தின் அருகிலேயே ஒரு பேனரில் தொங்கியபடியோ மரத்தில் தொங்கியபடியோ அவர் பார்க்கும் தூரத்திலேயே ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களின் பாதுகாப்பு கருதி, அவர் அதட்டியது கூட இல்லை. 'தம்பி இறங்குப்பா' என்கிற தன்மையில் அவர் அவ்வப்போது சொல்வார். அதை மீறி அவர்கள் அந்த பாணியில் நின்று கொண்டிருந்தாலும் அப்படியே தன் பேச்சை தொடர்வார். நேற்று காலை நடந்த கூட்டத்தில் கூட, விஜய்க்கு வைக்கப்பட்ட பேனரே கிழிந்து அதன் மீது ரசிகர்கள் அமர்ந்திருக்க, அவர்களை பார்த்துக் கொண்டுதான் விஜய் பஞ்ச் வசனங்கள் பேசிக் கொண்டிருந்தார்.
தவெக தொண்டர்களின் ரசிக மனநிலையை போக்கி அரசியலாக்கும் வகையிலான பேச்சும் விஜய் பேசவில்லை. நரம்பு புடைக்க கத்தி, எள்ளல் பேசி, தவறான தகவல்களை சொல்லி, சவால் வசனங்கள்தான் பேச்சில் நிரம்பியிருந்தன. அவரின் பேச்சுகள் 'இவர்கள் ரசிகர்கள், எனவே இவர்களை அதே இடத்தில் வைத்திருப்போம். இவர்களுக்கு இது போதும்' என்கிற தன்மையில்தான் இருந்தன. கூடுதலாக ரசிக மனப்பான்மையை தனக்கு ஆதரவாக ஏற்றி விடும் வகையில், நீதிமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகியவை, தவெக கூட்டங்களுக்கு வழங்கும் கட்டுப்பாடுகளை எந்த பொறுப்புணர்வும் இன்றி எகத்தாளம் பேசினார்.
கட்டுக்கடங்காமலும் விஜயின் சொல்லுக்கு அடங்காமலும் திரளும் கூட்டத்திடம், பொது ஒழுங்குக்கு கட்டுப்படுவது தவறு எனப் பேசுவது எத்தனை ஆபத்தை விளைவிக்கக் கூடிய விஷயம்?
விஜய் செய்தார். அல்லது அவருக்கு எழுதி கொடுப்பவர்களும் யோசனை சொல்பவர்களும் அப்படி செய்ய சொல்லி இருக்கிறார்கள். இவரும் செய்திருக்கிறார்.
நேற்று நடந்த துயரம், தூக்கத்தை பறித்த துயரம். ஆனால் அந்த நிலையிலும் 'ஏங்க கவர்ன்மெண்ட் வேணும்னே காலி ஆம்புலன்ஸ் அனுப்பி கூட்டத்தை டிஸ்டர்ப் பண்றாங்க?' என்கிறார் ஒரு விஜய் ரசிகை. 'அரசாங்கத்தோட சதிதான் இது' என்கிறார்கள் இன்னும் சில ரசிகர்கள். 'நாங்க கேட்ட இடத்துக்கு ஏங்க பெர்மிஷன் கொடுக்கலங்க!" என்கிறார்கள் இன்னும் பல ரசிகர்கள்.
குறைந்தபட்சமாக மூன்று மணி நேரம் தொடங்கி, அதிகபட்சமாக ஆறேழு மணி நேரங்கள் வரை மக்கள் விஜயை காண காத்திருக்கிறார்கள். ஒரு தம்பி, 'விஜய பார்க்கணும்னு நைட்டே வந்து படுத்துட்டோம்!' என்கிறார். சாலை டிவைடர்கால் தொடங்கி பள்ளி கூரைகள் வரை விஜயை காண வருபவர்கள் ஏற்படுத்தும் சேதங்களால், கூட்டங்கள் நடக்கும் இடங்களுக்கருகே கடைகள் திறந்து வைக்கப்படுவதில்லை. இத்தகைய சூழலில் விஜயை காணவென பல மணி நேரங்களாக காத்து கிடக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்குவது யார், உணவு வழங்குவது யார்? 10,000 பேர் திரளுவார்கள் என காவல்துறைக்கு அனுமதி கோரி மனு கொடுப்பவர்கள், அந்த கூட்டத்தை கட்டுப்படுத்தவும் ஒழுங்கமைக்கவுமென ஆயிரம் பேரையேனும் கட்சியிலிருந்து களம் இறக்கியிருக்க வேண்டாமா?
நெரிசல் அதிகமாகி நிலவரம் கலவரமானதும் விஜய் உடனே பேருந்துக்குள் செல்கிறார். பேருந்து கிளம்புகிறது. உயிரிழப்பு செய்திகள் வெளியாகின்றன. கரூரிலிருந்து கிளம்புகிறார் விஜய். பத்திரிகையாளர்களை சந்திக்காமல், சென்னைக்கு வந்து விடுகிறார். அவரை சொல்லி ஒன்றும் குற்றமில்லை. அவ்வளவுதான் அவர்.
நடிகர் விஜய்யை காண வரும் கூட்டத்தின் மீது எந்த வகையான கட்டுப்பாடையும் கொண்டிராதவர்தான் விஜய். கட்டுப்பாடு மட்டுமல்ல, அக்கறையும்தான்.
அரசியலற்ற பெருங்கூட்டத்தை மாடத்தில் இருந்து கையசைத்து மட்டுமே கையாண்டு முதலமைச்சர் பொறுப்புக்கு வந்து விட முடியுமென விஜய் நம்பியதன் விலையை இன்று விஜய் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
பொறுப்பு என்றால் முதலமைச்சர் பதவி என்பதாக மட்டுமே விஜய் புரிந்து வைத்திருக்கிறார்.
'விஜய் கடவுள் மாதிரி' எனவும் 'கடவுள் அடிக்கடி ஊருக்கு செல்லக் கூடாது, திருவிழா வரும்போது மட்டும்தான் செல்ல வேண்டும்' எனவும் தந்தக் கோபுர உச்சியில் விஜயை அமர வைத்து வழி நடத்தியவர்கள், தந்தக் கோபுரம் சரிவதை காணுவார்கள்.
விஜய் பயணம் தொடங்கும் காலை முதல் விஜயை காட்டி தின்று கொண்டிருந்த ஊடகங்கள் இனி அவரை பிய்த்து தின்றி பசியாறத் தொடங்கும்.
கரூர் சம்பவத்தைக் கொண்டு இனி அரசியல் நகர்வுகள் ஆடப்படும். மோடி முதல் ஆளாக இரங்கல் தெரிவித்திருக்கிறார். யோகி தொடங்கி அண்ணாமலை வரை கருத்து தெரிவித்திருக்கிறார்கள். தனக்கு கூடாத கூட்டத்தையும் வரவேற்பையும் பெறும் விஜயை, இந்த சிக்கலை வைத்து தன் பக்கம் முழுமையாக கொண்டு வந்துவிட பாஜக முகாம் முயற்சிக்கத் தொடங்கும். அண்ணாமலை திமுக அரசை விமர்சித்து இந்த அரசியல் ஆட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
கரூர் சம்பவத்திலிருந்து எத்தகைய விளைவும் நேரலாம். அடுத்தடுத்த அரசியல் சூழல்கள் மாறலாம். ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான்.
"தத்துவம் இல்லாத தலைவர்கள், ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள்…"
Rajasangeethan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக