சனி, 13 ஆகஸ்ட், 2022

ஜாக்கி வாசுதேவின் ஈஷா BSLN பாக்கி 2.5 கோடியை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

மின்னம்பலம்  - பிரகாஷ் : ஈஷா யோகா மையம் மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகியவற்றுக்கு இடையேயான வழக்கு விவகாரத்தில் புதிதாக விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் உள்ள ஈஷா பவுண்டேசன் அமைப்புக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் தங்கள் இணைப்பை பயன்படுத்தியதில் ரூ.2.5 கோடி கட்ட வேண்டும் என்று பில் அனுப்பியது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோக மையம் தொடர்ந்த வழக்கு இசைவு தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த இசைவு தீர்ப்பாயம், “44 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்” என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, பிஎஸ்என்எல் நிறுவன கோவை முதன்மை பொது மேலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 12) விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, “ஈஷா யோகா மையம் 44 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும்” என்ற தீர்ப்பை ரத்து செய்ததுடன், ”இதுகுறித்து ஏற்கனவே இசைவு தீர்ப்பாயம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று

உத்தரவிட்டார்.

பி.எஸ்.என்.எல். பயன்பாட்டு விவகாரம் குறித்து, ஈஷா யோகா மையம் அறிக்கை ஒன்றை இன்று (ஆகஸ்ட் 12) வெளியிட்டுள்ளது. அதில், “டிசம்பர் 2018ஆம் ஆண்டு, ஜனவரி 2019 காலத்தில் வெறும் 25 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி பயன்பாட்டிற்கு ரூ.2.5 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தவறாக பில் அனுப்பி இருந்தது.

ஈஷா யோகா மையத்தின் மாத உச்ச வரம்பே (Credit limit) வெறும் ரூ.66,900 ஆக இருக்கும் நிலையில், இந்தக் கட்டண விதிப்பு தவறானது என பி.எஸ்.என்.எல்லிடம் ஈஷா முறையிட்டது. இதற்கு முன்பு, கடந்த 10 ஆண்டுகளாகவே ஈஷா யோகா மையத்தின் மாதாந்திர தொலைபேசி கட்டணம் வெறும் ரூ.22,000க்கும் குறைவாகவே இருந்துள்ளது.

ஆனால், மேற்குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என பி.எஸ்.என்.எல் அச்சுறுத்தியதால், ஈஷா யோகா மையம் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை தனி நபர் ஆர்பிட்ரேட்டராக நியமித்து இதனை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையின் முடிவில் பி.எஸ்.என்.எல்லின் வாதத்தை ஏற்க மறுத்த ஆர்பிட்ரேட்டர் பத்மநாதன், டிசம்பர் 2018 – ஜனவரி 2019 ஆகிய இரண்டு மாதங்களுக்கு சராசரி மாத கட்டணமாக தலா ரூ.22,000 செலுத்த உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.எஸ்.என்.எல் மேல்முறையீடு செய்தது. இன்று (ஆகஸ்ட் 12) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய விசாரணையிலும் மீண்டும் நீதி நிலை நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

கருத்துகள் இல்லை: