சமுகம் : விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரும் வெடிமருந்துகள் தொடர்பில் நிபுணத்துவம் கொண்டவருமான ஒருவர் அபுதாபியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கைது செய்யப்பட்டவர் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் தலைமையிலான பொலிஸ் குழு வொன்று அபுதாபிக்குச் சென்று விடுதலைப்புலி உறுப்பினரை அபுதாபியிலிருந்து சிறப்புப் பாதுகாப்புடன் விமானத்தில் இலங்கைக்கு (11) அழைத்து வந்தனர்.
அபுதாபியில் தங்கியிருந்த புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். கைதான இராசநாயகம் தவநேசம் என்ற இந்த பிரபல புலி உறுப்பினர் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவரென பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு யுத்தத்தின் போது, கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற பல குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பிரதான சந்தேக நபராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 48 வயதான இவர், யுத்தம் முடிவடைந்தவுடன் நாட்டை விட்டு வெளியேறிய புலிகளில் ஒருவராவார்.
புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் பிரபல நபரிடம் தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவரை நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக