செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

பிகார் அதிரடி தேஜஸ்வி லாலுவின் கட்சியோடு ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் உரிமை உரிமை கோரினார்

 நக்கீரன் செய்திப்பிரிவு :  பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியேறியது. இதையடுத்து,
தனது முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை, நிதிஷ்குமார் அம்மாநில ஆளுநர் பகு சௌஹானை நேரில் சந்தித்து வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ்குமார், "ஐக்கிய ஜனதா தள கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினோம்" என்று தெரிவித்துள்ளார்.


அதைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ்வை நேரில் சந்தித்த நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தினார். பின்னர், தேஜஸ்வி யாதவுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற நிதிஷ்குமார், ஆளுநரிடம் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததும் நாளையே முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 243 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 பேரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 79 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 19 பேரும், இடதுசாரிகளுக்கு 12 பேரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளனர். எனவே, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சிக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், புதிய கூட்டணிக்கு சுமார் 160 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.  

 

கருத்துகள் இல்லை: