தெற்கே உசிலம்பட்டி கணவாய் அருகே சாஸ்தா கோவில் வாசலில் பன்னீர் ஆதரவாளரும் அதிமுக மாசெவுமான சையது கான் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த படம். வடக்கே சென்னையில் அதிமுகவின் பழம்பெரும் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று சசிகலா சந்தித்த படம். இந்த படங்களை அனுப்பி விட்டு வெய்ட்டிங் என்று ஒரு குறிப்பும் கொடுத்திருந்தது இன்ஸ்டா, அந்தப் படங்களுக்கு பதிலாக மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். “அதிமுக மீண்டும் பரபரப்பின் மையத்துக்கு வந்திருக்கிறது. ஒரே நாளில் இருவேறு சந்திப்புகள் அதிமுக கூடாரத்துக்குள் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. தேனிக்கு சென்றுகொண்டிருந்த டிடிவி தினகரனை அதிமுகவின் தேனி மாசெவாக இருக்கும் பன்னீர் ஆதரவாளர் சையது கான் உசிலம்பட்டியில் சந்தித்தார். உடனே, ‘பாருங்கள். தினகரனும் பன்னீரும் இன்னும் நெருங்கியத் தொடர்பில்தான் இருக்கிறார்கள்’ என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எதிர்ப்பேச்சு பேசினார்கள்.
அதேநாளில் எம்.ஜி.ஆரின் மிக நெருங்கிய நண்பரும் அதிமுகவின் சட்ட விதிகளை
கரைத்துக் குடித்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை தேடிச் சென்று
சந்தித்துள்ளார் சசிகலா. கடந்த ஜூன் 23 பொதுக்குழுவுக்கு முன்பு
சர்ச்சைகள் வெடித்தபோது பன்னீர்செல்வமும் பண்ருட்டியாரை தேடிச் சென்று
சந்தித்தார் என்பது ஞாபகம் இருக்கலாம்.
இந்த நிலையில் பிரதமர் மோடி விசிட்டுக்குப் பின் பன்னீர் -சசிகலா தரப்பில் வேகவேகமாக சில மாற்றங்கள் நடந்துவருகின்றன.
சென்னை வந்த பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி கடுமையாக முயற்சித்தார். ராஜ்பவனில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தமிழக பாஜக நிர்வாகிகளை சந்திக்க முடிந்த மோடிக்கு, ‘ஒரு பதினைந்து நிமிடம் தாருங்கள் போதும்’ என்ற எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோள் காதில் விழவே இல்லை. அதனால்தான் மோடி வரும்போது அவரை வரவேற்க விமான நிலையத்துக்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம் ஓ.பன்னீர் செல்வம், உடல் நிலை சரியில்லாததால் மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்.
அதனால்தான் அவர் மோடி செல்லும்போது வழியனுப்ப விமான நிலையம் சென்றார். தனது கட்சிப் பணிகள், ஆட்சிப் பணிகள் குறித்து மோடியின் பார்வைக்கு செல்லும்படி ஆங்கில செய்தித் தாளில் விளம்பரமும் கொடுத்தார்.
‘பன்னீரை சேர்த்து வைத்து எடப்பாடியின் ஆட்சியை நிலை நிறுத்தியது
பாஜகதான். ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியாக பாஜகவுக்கு சாதகமாக
நடந்துகொள்ளவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர கவனம் செலுத்தாமல்
19 தொகுதிகளில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தன் ஆட்சியைக்
காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி தீவிர முயற்சி செய்தார். அமைச்சர்கள்
அனைவரும் நாடாளுமன்றத் தேர்தலை விட சட்டமன்ற இடைத்தேர்தலிலேயே அதிகம்
செலவிட்டனர். அதனால் தனது ஆட்சிக்கு வேண்டிய பெரும்பான்மையை பெற்றுக்
கொண்டார். ஆனால் எம்பி தேர்தலில் பாஜகவுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
பன்னீர் மட்டுமே தேனியில் அதிமுகவை வெற்றிபெற வைத்தார். இதேபோல 2021
சட்டமன்றத்
தேர்தலில் பாஜக குறிப்பாக அமித் ஷா கூறிய ஆலோசனைகளையே எடப்பாடி
ஏற்கவில்லை. அப்படி ஏற்றிருந்தால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு
வந்திருக்கும்.
இவ்வாறு 2019, 2021 ஆகிய தேர்தல்களில் தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் பாஜக கூறிய யோசனைகளை எடப்பாடி ஏற்கவில்லை. இந்தப் பின்னணியில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடியின் ஒற்றைத் தலைமையால் அதிமுகவில் இப்போது குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. எனவே வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியால் பாஜகவுக்கு ஏதும் சாதகம் ஏற்படப் போவதில்லை என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அதன் சிக்னல்தான் எடப்பாடிக்கு பதினைந்து நிமிடங்கள் கூட மோடி ஒதுக்காமல் மறுத்தது.
அதேநேரம் கடந்த சில வாரங்களாக டிடிவி தினகரன் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார், ஒவ்வொரு மாவட்டமாக செயல் வீரர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறார். தன்னை திகார் சிறைக்கு அனுப்புவதற்கு காரணமானவர்களில் ஒருவரான எடப்பாடி சிறைக்கு செல்வார் என்று பேசி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் இன்னொரு பக்கம் தன் இயல்புக்கு மாறான அதிரடி அரசியலை கையிலெடுத்திருக்கிறார்,, தனது ஆதரவாளர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமித்து தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து அதிமுக தன்னிடமே இருப்பதாக கடிதம் எழுதி வருகிறார்.
இந்த நிலையில்தான் சசிகலா பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பு நடந்திருக்கிறது. இந்த சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ‘ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என்பதும் முக்கியமில்லை. ஒற்றை தலைமை வந்து என்ன சாதித்துவிட்டார்கள்? இடைக்காலம் என்பது தற்காலிகம். நிரந்தரம் கிடையாது. பொதுச்செயலாளர் யார் என்பது முக்கியமல்ல. மக்கள் யார் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்? என்பதே முக்கியம். ஓ.பன்னீர்செல்வம் தனிமைப் படுத்தப்படுகிறாரா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆற்றில் நுரை போல மேலே இருப்பதை பார்க்கிறோம். கீழ்மட்டத்தில் என்ன முடிவு எடுக்கிறார்கள்? என்பதே முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி ராமச்சந்திரனோடு தற்போதைய அதிமுகவின் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளது குறித்து ஆலோசித்த சசிகலா அடுத்து செய்ய வேண்டியது பற்றியும் விவாதித்துள்ளார். இந்த சந்திப்பில் மேலும் சில முக்கிய விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. இதுபற்றி விசாரித்தபோது கூடுதல் தகவல்கள் கிடைத்தன.
‘பன்னீர் எப்போதுமே தலைமை பதவிக்கு ஆசைப்படுபவர் அல்ல. அவர் இரண்டாம் இடத்தில் இருந்தே பழகிவிட்டவர். அந்த இரண்டாம் இடத்தை எப்போதும் நிறைவாக கருதுபவர். ஆனால் எடப்பாடி அப்படி அல்ல. இரண்டாம் இடத்தில் இருந்து கட்சியில் முதலாம் இடத்தை நோக்கி வருவதற்காக கே.பி.முனுசாமி உள்ளிட்டோரின் ஆலோசனைகளைக் கேட்டு இப்படி ஆகிவிட்டார். பாஜகவுக்கும் நமக்கும் சித்தாந்த ரீதியான முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இருப்பதை விட அதிக முரண்பாடுகள் இல்லை.
எனவே சசிகலா, பன்னீர், தினகரன் ஆகியோர் சேர்ந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும். எடப்பாடியிடம் தொண்டர்கள் இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. மேலும் பாஜகவின் கோபத்துக்கு ஆளான எடப்பாடி எப்போது வேண்டுமானாலும் சிறை செல்லலாம். அதிலிருந்து சமாளிப்பதற்காகத்தான் தன்னை ஒற்றைத் தலைமையாக காட்டி தப்பிக்கப் பார்க்கிறார். ஆனால் அவர் சிறை செல்லப்போவது உறுதி. அதற்கான வலிமையான அறிகுறிகள் தெரிகின்றன.
எனவே எம்.ஜி.ஆர். காலத்தில் காங்கிரஸோடு போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி மக்களவைத் தேர்தலில் 29 தேசிய கட்சிக்கு 11 அதிமுகவுக்கு என்ற அடிப்படையில் பாஜகவோடு கூட்டணி வைக்கலாம். 1991 இல் ஜெயலலிதா கூட இதே ஃபார்முலாவைதான் பின்பற்றினார். 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலில் பட்ட அடியால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவையே பாஜக விரும்புகிறது. சில ஆயிரம் ஓட்டுகளில் பெற்றாலும் தேர்தலில் வெற்றி வெற்றிதான் தோல்வி தோல்விதான். எனவே 24 இல் வெற்றியே முக்கியம். அதற்கான ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க எடப்பாடி தயாராக இல்லை.
இன்று எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால் அவருடன் நெருக்கமாக இருக்கும் வேலுமணி போன்றவர்கள் கூட இந்தப் பக்கம் வந்துவிடுவார்கள். இன்றுவரை வேலுமணி சசிகலாவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. எனவே எடப்பாடி இல்லாத ஒன்றுபட்ட அதிமுகவை உண்டாக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாக பன்னீரை மட்டுமே ஆதரித்தால் சாதி முத்திரையாகிவிடும். எனவே வெளியே இருவரும் ஒன்றுதான் என்று சொல்லிக் கொண்டிருங்கள். ஆனால் தொடர்ந்து தன் பண பலத்தால் சசிகலா, ஓபிஎஸ், மோடி என தான் நம்பிய அனைவரையும் எதிர்க்கத் துணிந்த எடப்பாடிக்கு பாடம் புகட்ட வேண்டும். அதனால் எடப்பாடி இல்லாத அதிமுகவை உருவாக்க வேண்டும். அதற்கு பாஜகவின் ஒத்துழைப்பு அதிகமாகவே இருக்கும்.
ஏனென்றால் அண்ணாமலை சொன்ன மாதிரி தலைவர்கள் முக்கியமல்ல அதிமுக என்ற கட்சியோடுதான் கூட்டணி என்பதை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்’ என்பதுதான் பண்ருட்டியாரின் வீட்டில் நடந்த பலே ஆலோசனை. பாஜகவின் சிக்னலுக்கு பிறகே இந்த ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது என்பதும் உபரித் தகவல்” என்ற மெசேஜை செண்ட் செய்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக