திங்கள், 1 ஆகஸ்ட், 2022

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

News18 Tamil : Kallakurichi : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள, கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில், பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி கடந்த மாதம் 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம் எழுப்பி இருந்த நிலையில் மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேரையும் கடந்த 17ஆம் தேதி போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் கடந்த 28ஆம் தேதி விழுப்புரத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீதான விசாரணை கடந்த 29ஆம் தேதியன்று நடைப்பெற்ற போது சின்னசேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆரை கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் சென்று விட்டதால் சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரை கொண்டு ஜாமீன் மனுவை தாக்கல் செய்யவும் பள்ளி தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுரை வழங்கியது.
உங்கள் நகரத்திலிருந்து(கள்ளக்குறிச்சி)

மேலும், மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு விவரங்களை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணையை இன்று நடைபெறும் என விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இன்று (ஆகஸ்டு - 1ம் தேதி) மீண்டும் ஜாமீன் மனு மீதான விசாரணை, விழுப்புரத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. அப்போது பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த பள்ளி மாணவியின் தாய் மனு தாக்கல் செய்தார். இம்மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதி திருமதி.சாந்தி, ஜாமீன் மனு மீதான விசாரணை நடத்தினார்.

சின்னசேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண்களைக் கொண்டே தற்போது விசாரணையை நடத்தி வருவதாகவும், விசாரணைக்கு பிறகே குற்ற எண்களை மாற்றுவது குறித்து தெரிய வரும் என்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சிபிசிஐடி விசாரணை தற்போது தொடக்க நிலையில் தான் உள்ளது என்றும் விசாரனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஜாமீன் வழங்க கூடாது எனவும், ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களின் அறிக்கை உயர்நீதிமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில் ஜாமின் வழங்கக்கூடாது எனவும் மாணவி தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.  இதனையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி திருமதி.சாந்தி உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் குழுவினரிடம் இதுவரை வழங்கியதாக தெரியவில்லை. அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதியிடம் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம் என மாணவி தரப்பு வழக்கறிஞர் திரு.காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

செய்தியாளர் - ஆ.குணாநிதி.

கருத்துகள் இல்லை: