ஞாயிறு, 31 ஜூலை, 2022

சித்தராமையா : ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது.. கர்நாடக முன்னாள் முதல்வர்

மின்னம்பலம்  : ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது: சித்தராமையா
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்” என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும், தமிழகம் மற்றும் இந்திய அளவில் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகள் இன்று மாலை (ஜூலை 30) கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர் ‘ விருது வழங்கப்பட உள்ளது.


இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள சித்தராமையாவை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இன்று (ஜூலை 30) சென்னை வந்த சித்தராமையாவை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வரவேற்றனர். அவர்களுடன் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் சென்ற சித்தராமையா, மரியாதை நிமித்தமாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

முதல்வர் சிறப்பாகச் செயல்படுகிறார்

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து சித்தராமையா கேட்டறிந்தார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா,

“விசிக சார்பாக விருது பெறுவதற்காக தமிழகத்துக்கு வந்துள்ளேன். விருது பெறுவது மிகவும் மகிழ்ச்சி. முதலமைச்சர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன். தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக இருக்கிறது. தமிழக முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பெரியார், அம்பேத்கரை பின்பற்றுகிறார் திருமாவளவன். கர்நாடாகாவில் நுழைந்த பாஜகவால், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நுழைய முடியாது. பாஜகவை வீழ்த்த முயன்று வருகிறோம். வரும் தேர்தலில் பாஜக, ஆர்எஸ்எஸ்ஸை வீழ்த்துவோம்” எனத் தெரிவித்தார்.

ஜூன் 28., 29 தேதிகளில் பிரதமர் மோடி சென்னை வந்து சென்றபோது தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மோடிக்கு எதிராக போராட்டம் அறிவித்ததால் முன்னெச்சரியாக வீட்டுக் காவலில் வைத்தது தமிழக போலீஸ். பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காக செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவையும் தமிழக காங்கிரஸ் புறக்கணித்தது.

இந்நிலையில் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.

ஜெ.பிரகாஷ்
 

கருத்துகள் இல்லை: