மின்னம்பலம் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டதால், இரண்டு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக, கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி, கண்ணூர், வயநாடு ஆகிய 9 மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துவருகிறது.
அதுபோல் தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.
இந்த தொடர் கனமழையின் காரணமாக காவிரிக் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், தமிழகத்தில் சிறுசிறு அணைகளும் வேகமாய் நிரம்பிவருகின்றன. இதனால் பல இடங்களில் அதிகளவில் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துவருகிறது.
கேரள முதல்வர் கடிதம்
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர், இன்று (ஆகஸ்ட் 5) எழுதியிருக்கும் கடிதத்தில், “கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் இடுக்கி உட்பட கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியாக அதிகரித்துள்ளது. இதுபோன்று கனமழை தொடர்ந்தால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயரும்.
இந்தச் சூழலில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை எதிரொலியாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைத்து பாதுகாப்பான அளவிற்கு நீர்மட்டத்தை பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நீங்கள் (தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) உடனடியாக தலையிட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதை கருத்தில் கொண்டு, அணையின் நீர்வரத்தைவிட அதிக அளவு நீரை அணையிலிருந்து வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
கரையோரம் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக கேரள மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என அதில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக