செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

கர்நாடக சித்தகங்கா சிவண்ணா என்கிற‌ சிவகுமாரசுவாமிகள் வயது 102! ...1000 குழந்தைகள் ..ஒருவர் கூட காணாமல் போகவில்லை

May be an image of 1 person

 Arivazhagan Kaivalyam  : முதன்முதலாக அவரது படத்தை ஒரு அலுவலகத் தோழியின் வீட்டில் பார்த்தபோது வழக்கமான ஒரு வெறுப்புணர்வு எனக்குள் பரவியது, முழுக்க காவி போர்த்திய பழுத்த முகத்தில் திருநீறு நிறைந்திருந்தது.
தோழியின் வீட்டில் இருந்து வெளியே‌ வரும்போது படத்தை மறுபடி‌ ஒருமுறை‌ கூர்ந்து பார்த்தபடி அவளிடம் கேட்டேன்,
"இந்த சாமியாரின்‌ பெயர் என்ன?", உணர்வுப்பூர்வமாக அவள்‌ படத்தையும் என்னையும் பார்த்தபடி
"இவரது பெயர் சிவகுமாரசுவாமிகள்" சிவகங்கே மடத்தின் மடாதிபதி, வீரசைவர்கள் எனப்படும்‌ கௌடாக்களின் வழிகாட்டி." என்றாள்.
வழக்கமாக கர்நாடகாவில் வசிக்கும் பல்வேறு இனக்குழுக்களின் வீடுகளில் ஏதாவது ஒரு சாமியாரின் படமிருக்கும், மதநம்பிக்கைகளிலும், பக்தியிலும் வடவர்களுக்கு எந்த விதத்திலும் சளைக்காதவர்கள் கர்நாடக மக்கள்.


கர்நாடக கிராமங்கள் பக்தி மயமானவை, அங்கிருக்கும் கோவில்களில் வாரத்தின் இறுதி நாட்களில் பஜனைகள் நடக்கும், இசைக்கருவிகளை‌ இசைத்தபடி பெரியவர்கள் சிறுவர்களை அமர்த்திக் கொண்டு பழங்கதைகளைப் பாட்டாகப் பாடுவார்கள், வருடந்தோறும் பெருவிழாக்களை நடத்துவார்கள்.
இத்தகைய மதநம்பிக்கைகளால் சூழப்பட்டு அரசியல் விழிப்புணர்வை இழந்தவர்கள் கர்நாடக ஊரகப்பகுதி மக்கள், இன்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல், கல்வி மற்றும்‌ வேலை வாய்ப்புகளை இழந்து, சரியான குடிநீரும், சாலைகளும் இல்லாமல் அங்கிருக்கும் இளைஞர்கள் சில பத்தாண்டுகள் பின்தங்கிக் கிடக்கிறார்கள். ஆனால், மதநம்பிக்கைகள் என்று வந்து விட்டால் அனைத்தையும் புறக்கணித்து விட்டு பூனைகளுக்கு முன்வரிசையில் அமரக்கூடியவர்கள்.
அவர்களில் பலரோடு உங்கள் மதநம்பிக்கைகளால் நீங்கள் இழந்தவை ஏராளம் என்று சொல்லியபடி அரசியல்வாதிகள் குறிப்பாக வலதுசாரி அடிப்படைவாத அரசியலில் நம்பிக்கை கொண்டவர்கள் எப்படி உங்கள் மதநம்பிக்கைகளைப் உணர்ச்சிகரமான பொருளாக்கி அரசியல் அதிகாரங்களில் திளைக்கிறார்கள்‌ என்று‌ கோபப்படுவேன். அதிலிருக்கும் உண்மையை உணர்ந்து‌ அமைதியாக இருப்பார்கள், சாமியார்களின் படங்களின் மீதும் அப்படித்தான் ஒரு வெறுப்புணர்வு எனக்கு உருவானது.
சிவகுமார‌சாமிகளின் படத்தைப் பார்த்து அத்தகைய ஒரு கோபத்தோடுதான் இவர் பெயர்‌ என்னவென்று தோழியிடம் கேட்டேன். இது நிகழ்ந்தது 2011 ஆம் ஆண்டின் இறுதிக் காலம் என்று நினைக்கிறேன், காலம் சிவகுமார சுவாமிகளின் வாழ்விடத்தை நோக்கி என்னை அழைத்துப் போனது.
எந்த மத அடையாளங்களும் இல்லாத முழுமையான ஒரு நாத்திகக் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான், பெரியாருடன் நெருங்கிய தோழராக இருந்த சங்கரைய்யாவின் நிழலில் பிறந்தவன். சின்னஞ்சிறுவனாக இருந்தபோதே மார்க்ஸின், எங்கெல்ஸின், டால்ஸ்டாயின் புகைப்படங்களையும், நூல்களையும் வாசிக்கக் கிடைத்த வீட்டில் வளர்ந்தவன்.
முதன்முதலாக ஒரு திருமணத்துக்காக தும்கூர் சென்றபோது காலைப் பொழுதில் நிறைய நேரமிருந்தது, அலுவலகத் தோழன்‌ ஒருவனிடம்
"நாம் சித்தகங்கா மடத்துக்குப் போய் வரலாமா?"
மகிழ்ச்சியோடு அழைத்துப் போனான், நாங்கள் மடத்தின் உள்ளே நுழைந்த போது அதன் பிரம்மாண்டம்‌ எனது உணர்வுகளை‌ அசைத்துப் பார்த்தது, வழக்கம் போல எனக்குள்ளிருந்த வெறுப்புணர்வு மண்டத் துவங்கியது, நாங்கள் ஒரு பரந்து விரிந்திருந்த மேடையை நோக்கி நடக்கத் துவங்கினோம்.
பழைய‌ கற்களால் கட்டப்பட்டிருந்த நீண்ட மண்டபத்தின் முன்பாக நாங்கள் நின்ற போது நுழைவாயிலில் ஒரு பல்லக்குப்‌ போலிருந்த மரக்கட்டிலில் அந்த 100 வயதைக் கடந்த மனிதர் உடலைச் சாய்ந்தபடி அமர்ந்தும் படுத்துமாய் இருந்தார், அவரைச்‌ சுற்றி பெரும் கூட்டம் சூழ்ந்திருந்தது.
அனிச்சையாக அவரது கால்களில் அமர்ந்து மனிதர்கள் வணங்கிக் கொண்டிருந்தார்கள், அவர் யாரையும் சட்டை செய்ததாக நினைவில்லை, சொகுசுக் கார்களில் வந்திருந்த அரசியல்வாதிகள், பக்கத்து கிராமத்து உழைக்கும் மக்கள் என்று பலரும் அவரது கவனத்தைத் திருப்ப முயற்சித்தபடி இருந்தார்கள், அவர் சலனமற்றவராக பேரமைதியில் உறைந்தவராக அமர்நாதிருந்தார்.
எப்போதாவது சில குழந்தைகளின் நெற்றியில் திருநீறு‌ பூசி ஒரு புன்னகை புரிந்தார். அலுவலக நண்பன் கூட்டத்தில் கரைந்து அவரது காலடியைத் தொட்டு வணங்கி உணர்ச்சிமிக்கவனாக மாறி இருந்தான். நான் வழக்கம்போல வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு சாமியார்களின் மீதான மதிப்பீடுகள் எதுவும் இல்லை, சக‌ மனிதர்களின் கடவுள் நம்பிக்கையை ஏளனம் செய்பவனில்லை என்றாலும் கூட, அவர்களின் சாமியார் நம்பிக்கைகளில் எனக்கு உடன்பாடில்லை.
நாங்கள் அங்கிருந்து விடைபெற்று வலது பக்கமாகப் போனோம், அது ஒரு மழைக்காலத்தின் காலை, அங்கிருக்கும் மலைக்குன்றுகள் பெரிய படிகங்களைப் போல நீர்வழிகிற தடங்களோடு கண்களைக் கவர்ந்திழுத்தன, சூழ்கொண்ட மேகங்கள் மெல்ல நகர்ந்து காற்றோடு உரையாடியபடி பசியமரங்களை அழகாக்கிக் கொண்டிருந்தன.
அந்தக் குளிர்காற்றில் ஒற்றி எடுக்கப்பட்ட மனிதர்கள் மிக அழகானவர்களாக‌ நடமாடிக் கொண்டிருந்தார்கள், அந்தக் கணத்தில் திடீரென்று நான் கண்ட காட்சி என்னை அச்சமுறச் செய்தது.
ஒரு மிகப்பெரிய திடலில் ஏறத்தாழ 10,000 மாணவர்கள் ஒன்று கூடி ஏதோ ஒரு பாடலை இசைத்துக் கொண்டிருந்தார்கள், நான் முதன் முறையாக அவ்வளவு பெரிய இளம் மாணவர்களின் கூட்டத்தைப் பார்க்கிறேன், அவர்கள் அனைவரும் கட்டம் போட்ட ஊதாவும் வெள்ளையும் கலந்த சீருடை அணிந்திருந்தார்கள்.
மெல்லத் திரும்பி அலுவலக நண்பனிடம்
"யார் இவர்கள்? இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்?" என்று கண்கள் விரியக் கேட்டேன்.
"இவர்கள் அனைவரும் இங்கு இலவசமாகக் கல்வி கற்கிறார்கள், அதோ அந்தக் குன்றின்‌ கீழாகப் பரவிக் கிடக்கிற கட்டிடங்கள்‌ முழுவதும் இவர்கள்‌ தங்கிக் கொள்வதற்கான விடுதிகள். இடதுபுறமாக இருக்கிற கட்டிடங்கள் முழுதும் பள்ளி கல்லூரிகள், நகரில் மடத்தின் சார்பில் இயங்குகிற பல்கலைக்கழகம் இருக்கிறது, இங்கிருந்து போகிற மாணவர்கள் முழுக்க முழுக்க இலவசமாகக் கல்வி கற்கிறார்கள், மூன்று‌ வேளையும் உணவு‌, மடத்துக்கு சொந்தமான நிலத்தில் பகுதி நேரமாக விவசாயம் செய்கிறார்கள்".
அமைதியாக நான் அவன் பேசியதைக் கேட்டபடி வழிபாட்டுக் கூடம் முடிந்து திரும்புகிற அந்த மாபெரும் மாணவக்‌ கூட்டத்தைப் பார்க்கிறேன், நண்பன் கொஞ்ச நேரம் அமைதியாக இருநுதுவிட்டு சொன்னான்,
"சார், இந்த மடமும் சாமியும்‌ இல்லையென்றால், நாங்கள் எல்லாம் விவசாய நிலங்களில் கூலிகளாகவோ, பண்ணை அடிமைகளாகவோ, கல்வி அறிவற்ற கூகைகளாகவோதான் இருந்திருப்போம்".
இடது பக்கமாகத் திரும்பி நாங்கள் மீண்டும் நடந்து மண்டபத்தின் வாயில் வழியாக உள்ளே நுழைந்த போது ஒருமுறை‌ திரும்பிப் பார்த்தேன், அந்தப் பெரியவர் சலனமின்றி‌ அப்படியே தான் அமர்ந்திருந்தார்.
நாங்கள் மண்டபத்திற்குள் நுழைந்து மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருந்த அரிசி‌ மூட்டைகளையும், காய்கறிக்குவியல்களையும் கடந்து அந்த மாபெரும் வெளியில் கண்களைப்‌ படரவிட்டால் ஆயிரக்கணக்கில் மாணவர்கள், பொதுமக்கள் என்று பேதமில்லாமல் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அமைதியாக இப்போது‌ நான்‌ அலுவலக நண்பனைப்‌ பின்தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன், நாங்கள் எங்களுக்கான தட்டுக்களை எடுத்துக்  கொண்டு அமர்ந்தோம், உலோகத்தாலான டிராலிகளில் குழைந்த சோறும், பல காய்கறிகளாலான குழம்பும் பரிமாறுகிறார்கள்.
"கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த மேதமுமின்றி இங்கு வந்தமர்பவர்களின் பசியாற்றுகிற அட்சயபாத்திரமாக இந்தக் கூடம் இருக்கிறது" என்கிறான் தோழன்.
எனக்கு இடது பக்கத்தில் வரிசையாக இளம் குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள், வயிராற சாப்பிடுகிறார்கள், மெல்லத் திரும்பி எனக்கருகில் அமர்ந்திருக்கும் மாணவனிடம் நான் கன்னடத்தில் கேட்டேன்,
"ஏனு ஓதித்திதியா மகா? மனே‌ எல்லி? அப்பா ஏனு மாடுத்திதாரே? (என்ன படிக்கிற தம்பி? வீடு எங்க இருக்கு? அப்பா என்ன பன்றாரு?)
என் கண்களைப் பார்த்தவன் "ஏழனே கிளாஸ் ஓதுத்தீனி அண்ணா, மனே‌ இரோது எலதொட்லு, அப்பாஜி இரடண்ணே கிளாஸ் ஓதுவாகலே தீரோதுரு" (ஏழாவது படிக்கிறேண்ணே,  வீடு எலதொட்லு கிராமத்துல இருக்கு, அப்பா நான் ரெண்டாவது படிக்கும்போது இறந்துட்டாரு"
"நம்‌ அண்ணானு‌ இல்லே ஓதுத்தானே" (எங்கண்ணனும் இங்கதான் படிக்கிறான்) கூடுதலாக அவன் சொன்னது‌ என்னை நெகிழ வைத்தது. சுற்றி‌ இருக்கிற பல கிராமத்தின் குழந்தைகள் இங்குதான் கல்வி கற்கிறார்கள், மூன்று வேளையும் வயிராற சாப்பிடுகிறார்கள், தங்குவதற்கு நல்ல வசதியான அறைகளோடு அவர்களுக்கான உடைகளையும் மடம்தான் கொடுக்கிறது.
நான் எனது வழக்கமான ஒரு அலட்சியத்தோடு கூடிய வெறுப்புணர்வில் இருந்து வெளியேறி இருந்தேன், இப்போது எனக்குள் அமைதியும், பேரொளியும் சுடர்விட்டது. அலுவலக நண்பன் "வீராப்புராவின் எளிமையான விவசாயக் குடும்பத்தில் எட்டாவதாகப் பிறந்த சிவண்ணா எப்படி இப்படி ஒரு பேதமற்ற கல்விக் கூடங்களைத் தனியொரு மனிதராக உருவாக்கினார்" என்கிற கதைகளை என்னிடம் சொல்லிக் கொண்டிருக்க நாங்கள் சாப்பிட்டு முடித்தோம்.
கண்ணுக்கெட்டிய தொலைவில் குன்றின் மேல் கோவிலிருக்கிறது, போகிற வழியில் ஒரு குறுகிய பழைய மடம், அங்குதான் சிவகுமாரசுவாமிகள்‌ வசிக்கிறார். நான் அவரை‌ அங்கு பார்த்தபோது அவருக்கு வயது 102 என்றார்கள்.
நாங்கள் திரும்பி வந்தோம், குன்றின்‌ மேலிருந்த கடவுள்‌ இறங்கி வந்து இங்கு அமர்ந்திருப்பது போலத் தோன்றியது‌ எனக்கு, மானுடர்களின் பசி‌ நீக்கி அவர்களைக்‌ கல்வியின் மூலமாக அறிவுள்ள மனிதர்களாக மாற்றுகிற பணியை விடவும்‌ ஆகச்சிறந்த ஆன்மீகப் பணி என்னவாக இருக்க முடியும்.
10000 குழந்தைகளை‌ அவர் பொத்தி பொத்தி வளர்த்திருக்கிறார். அங்கிருந்து போனவர்கள்‌ யாரும் காணாமல் போய்விடுவதில்லை, நன்றியோடு அவரது காலடியில் மீண்டும் வந்தமர்ந்து கொள்கிறார்கள்.
நுழைவாயிலுக்கு நாங்கள் மறுபடி‌ வந்தபோது நான் முண்டியடித்து‌ அந்தப் பெரியவருக்கு அருகில் போய் நின்று அவரது காலடியை‌த் தொட்டு வணங்கினேன். அவர் முகத்தில் எந்த சலனமுமில்லை, மடியில் இருந்த அவரது கைகள் மெல்ல நகர்ந்து எனது‌ தலைமுடியை வருடிப்‌ பின் கீழிறியங்கியது. பிறகு ஒரு மாலையில் நிறைமொழியை அழைத்துக் கொண்டு போய் அவரது‌ காலடியில் அமர்த்திக் கொண்டேன். இப்போது தோழியின் வீட்டிலிருந்த அவரது படமொன்று என் வீட்டிலுமிருக்கிறது.
சிவண்ணா என்கிற‌ சிவகுமாரசுவாமிகள் ஆன்மீகத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிக் காட்டிய உண்மையான காவி. அவரது நிழலில் மனிதர்கள்‌ பேதங்களற்று வளர்ந்து செழித்திருக்கிறார்கள்.
கை.அறிவழகன்

கருத்துகள் இல்லை: