வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

கைது வளையத்தில் இரு தமிழக அமைச்சர்கள்?

 மின்னம்பலம் : கைது வளையத்தில் இரு தமிழக அமைச்சர்கள்: அமித் ஷாவின் அமலாக்க அஜெண்டா!
மொபைல் டேட்டா ஆன் செய்ததும், யூட்யூபில் ஒரு ஷார்ட் வீடியோ வந்து விழுந்திருந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும் காரசாரமாக பேசிக் கொள்கிறார்கள்.
செந்தில்பாலாஜியை பற்றி பேசும்போது அண்ணாமலை, ‘வெயிட் பண்ணுங்க. அமலாக்கத்துறை இப்ப பிசியா இருக்கற மாதிரி தெரியுது. அவங்க கொஞ்சம் ஃப்ரியாயிட்டு இந்தப் பக்கம் வருவாங்க. அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்’ என்று சொல்லியிருக்கிறார். இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘ஒன்றிய அரசின் ஆளுங்கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் அமலாக்கத்துறை என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார் என்றால், அமலாக்கத்துறையை தங்களது அரசியல் விருப்புவெறுப்புக்காக பாஜக எப்படி பயன்படுத்துகிறது என்று இதிலிருந்தே தெரிகிறது. அண்ணாமலை எப்போது அமலாக்கத்துறை இயக்குனர் ஆனார்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.



“பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அமலாக்கத்துறை என்பது பிரபலமான துறையாகிவிட்டது. சட்டத்துக்கு முரணான பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி அரசு திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி இந்த சட்டப்படி குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்யவும் அந்த வழக்குகளை நடத்தவும் அமலாக்கத்துறைக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்துதான் அமலாக்கத்துறை கூடுதல் வேகத்தோடு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்குத் தொடுத்தது. அதாவது 2019 ஆம் ஆண்டுக்கு முன்பே நடந்த பல விவகாரங்களிலும் அமலாக்கத்துறை புதிய வழக்குகளைப் பதிவு செய்து, விசாரணையை வேகப்படுத்தியது. இவர்கள் அனைவருமே அரசியல் ரீதியாக பாஜகவுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச் சாட்டும் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது.

இந்த சட்டத் திருத்தம் அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படுவதற்குதான் பயன்படும் என்றும் இந்த திருத்தத்தை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் நாடு முழுவதிலும் இருந்தும் சுமார் 250 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி உச்ச நீதிமன்றம், ‘இந்த சட்டத் திருத்தம் செல்லும்’ என்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்குப் பிறகுதான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘அமைச்சர் செந்தில்பாலாஜி விரைவில் அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்கு வருவார். அமலாக்கத்துறை இப்ப பிசியா இருக்கிற மாதிரி தெரியுது., வெயிட் பண்ணுங்க, வருவாங்க’ என்று பாஜகவின் தூதுக்குழுவை போல அமலாக்கத் துறையை ஜஸ்ட் லைக் தட் டாக பேசியிருக்கிறார்.

அமலாக்கத்துறை ஏற்கனவே தமிழக அமைச்சர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும், செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், அண்மையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குகள் நடந்து வருகின்றன என்பதும் அறிந்த விஷயம்தான். அமலாக்கத்துறை இப்போது பிசியாக இருக்கிறது என்று அண்ணாமலை சொன்னது டெல்லியில் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மகாராஷ்டிராவில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், இதையெல்லாம் தாண்டி மேற்கு வங்காளத்தில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி விவகாரம் ஆகியவற்றை வைத்துதான்.


டெல்லியில் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல் வைத்த அமலாக்கத்துறையினர் அடுத்து சோனியா, ராகுலை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே மகாராஷ்டிராவில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வர் மம்தாவின் அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அந்த அமைச்சரை கைது செய்தது. இதையடுத்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் மம்தா.

மேற்கு வங்காளத்தைப் போலவே தமிழகத்திலும் வரும் எம்பி தேர்தலுக்குள் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களையாவது கைது செய்ய வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பேரில் மத்திய உளவுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவை இது தொடர்பான தீவிர கண்காணிப்பில் இருக்கின்றன, தமிழக அமைச்சர்களின் பணப் பரிமாற்றம் என்ன, எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பது பற்றிய விவரங்களை தீவிரமாக விசாரித்து வருகிறது உளவுத்துறை. அமைச்சர்கள் மட்டுமல்ல, அமைச்சர்களைச் சுற்றியிருக்கக் கூடியவர்களும் கண்காணிப்பு வளையத்தில்தான் இருக்கிறார்கள். ’தகுந்த ஆதாரங்களோடு மேற்கு வங்காளத்தில் சிக்கியதுபோல கட்டுக் கட்டாக கணக்கில் வராத பணத்தோடு தமிழக அமைச்சர்கள் இருவரையாவது கைது செய்ய வேண்டும். அதை வைத்தே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்திவிடலாம்’ என்பதுதான் அமித் ஷாவின் அஜெண்டா.

அமித் ஷாவின் திட்டப்படி தீவிரமாக வேலைகள் நடந்து வருகின்றன. அமைச்சர்களை சுற்றியிருப்பவர்களை கையிலெடுத்து சில அமைச்சர்களின் மூவ் மென்ட்டுகளை போட்டோ, வீடியோ ஆதாரமாகவும் சேகரிக்கத் தொடங்கிவிட்டது உளவுத்துறை என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். இந்த அடிப்படையில்தான் சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அமலாக்கத் துறை பிசியாக இருக்கிறது, விரைவில் தமிழகத்துக்கு வரும் என்று தனது அரசியல் ஆயுதமாகவே ED (Enforcement Directorate) ஐ வெளிப்படையாகவே எறியத் தொடங்கிவிட்டார் அண்ணாமலை’ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: