செவ்வாய், 24 டிசம்பர், 2019

ஜமால் கசோகி படுகொலை : சவுதியில் 5 பேருக்கு, 'தூக்கு'


தினமலர் :  ரியாத்: பிரபல பத்திரிகையாளரான ஜமால் கசோகி படுகொலை வழக்கில், ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை விதித்து, மத்தியக் கிழக்கு நாடான சவுதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், மூன்று பேருக்கு, 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக, அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகைகளில், பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோகி கட்டுரை எழுதி வந்தார்.
சவுதியில் பிறந்த அவர், கடந்தாண்டு, அக்டோபரில், துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்குச் சென்றார். விவகாரத்து தொடர்பான ஆவணங்களில் ஒப்புதல் வாங்கச் சென்ற அவர் திரும்பவில்லை.அவர் கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இது, உலகெங்கும் மிகப் பெரும் பிரச்னையாக வெடித்தது.

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தூண்டுதலால் இந்தக் கொலை நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த கொலை தொடர்பாக, இஸ்தான்புல் அரசு விசாரித்து வருகிறது.இந்நிலையில், சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள நீதிமன்றத்தில், கசோகி படுகொலை தொடர்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில், தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில், ஐந்து பேருக்கு தூக்கு தண்டனையும், மூன்று பேருக்கு, 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர்.இந்த வழக்கு தொடர்பாக, சவுதி அரசக் குடும்பத்துக்கு நெருக்கமான இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.ஆனால், போதிய ஆவணங்கள் இல்லை என, அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: