திங்கள், 22 ஜூலை, 2019

ஈரான் பிடித்த கப்பலில் இந்தியர்கள் உள்பட 23 மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர் - வீடியோ


தினத்தந்தி :  ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருக்கும் இந்தியர்கள் உள்பட 23 மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளதாக துறைமுக அதிகாரி தகவல் தெரிவித்தார். டெஹ்ரான், ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானால் சிறை பிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பலில் இருக்கும் இந்தியர்கள் உள்பட 23 மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக அந்த நாட்டு துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுவீடன்  நாட்டின் ஸ்டீனா பல்க் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டீனா இம்பெரோ என்ற எண்ணெய் கப்பல் இங்கிலாந்து கொடியுடன் கடந்த 19-ந்தேதி பாரசீக வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த போது ஈரான் திடீரென சிறைபிடித்தது. சர்வதேச கடல்வழி விதிகளை மீறியதால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. குறிப்பாக தங்கள் நாட்டு மீன்பிடி படகில் மோதிவிட்டு, அபாய அழைப்புக்கு செவிமடுக்காமல் சென்றதால்தான் சிறை பிடித்ததாக அந்த நாடு குறிப்பிட்டு இருக்கிறது.


இந்த எண்ணெய் கப்பலில் 23 மாலுமிகள் உள்ளனர். இதில் கப்பலின் கேப்டன் உள்பட 18 பேர் இந்தியர்கள் ஆவர். மீதமுள்ளவர்களில் 3 பேர் ரஷியாவையும், தலா ஒருவர் லாத்வியா, பிலிப்பைன்சையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த கப்பல் தற்போது பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மாலுமிகள் அனைவரும் அதிலேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இங்கிலாந்து போர்க்கப்பல் பாதுகாப்புடன் சென்றபோதும் இந்த கப்பலை ஈரான் சிறைபிடித்தது சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. குறிப்பாக ஈரானின் இந்த நடவடிக்கை இங்கிலாந்துக்கு பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கப்பலையும், மாலுமிகளையும் உடனடியாக விடுவிக்குமாறு ஈரானை அந்த நாடு வலியுறுத்தி இருக்கிறது.

முன்னதாக சிரியா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பொருளாதார தடையையும் மீறி அந்த நாட்டுக்கு எண்ணெய் கொண்டு சென்ற ஈரானின் ‘கிரேஸ் 1’ கப்பலை கடந்த 4-ந்தேதி மத்திய தரைக்கடல் பகுதியில் இங்கிலாந்து சிறைப்பிடித்தது. அதன் காவலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்த நிலையில், ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

எனவே இதை ஒரு பழிக்குப்பழி நடவடிக்கையாகவே ஈரான் மேற்கொண்டு இருப்பதாக கூறியுள்ள இங்கிலாந்து, இது முற்றிலும் ஏற்க முடியாதது எனவும் கூறியுள்ளது. மேலும் ஸ்டீனா இம்பெரோ கப்பலை ஓமன் நாட்டு கடற்பகுதியில் வைத்து ஈரான் சிறை பிடித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கும் இங்கிலாந்து கடிதம் எழுதியுள்ளது.

இதைப்போல ஈரானின் செயலுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளும் கவலை வெளியிட்டு உள்ளன.

இந்த நிலையில் கப்பலில் இருக்கும் இந்தியர்கள் உள்பட 23 மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாண துறைமுகம் மற்றும் கடல்வழி ஆணைய தலைமை இயக்குனர் அல்லா மொராத் அபிபிபுர் கூறியிருப்பதாவது:-

ஸ்டீனா இம்பெரோ கப்பலில் உள்ள 23 மாலுமிகளும் முழு ஆரோக்கியத்துடன் பாதுகாப்பாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கப்பலுக்குள் இருக்கின்றனர். கப்பல் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருக்கிறது. மாலுமிகளின் தேவைகளை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால் கப்பல் தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. கப்பல் ஊழியர்களின் ஒத்துழைப்பை பொறுத்தே இந்த விசாரணை அமையும். கடவுள் விரும்பினால் விசாரணை தொடர்பான அனைத்து தகவலும் விரைவில் சேகரிக்க முடியும் என நம்புகிறோம். இவ்வாறு அல்லா மொராத் கூறினார்.

இதற்கிடையே கப்பலில் இருக்கும் மாலுமிகளை மீட்க அவர்களின் சொந்த நாட்டு அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அந்தவகையில் இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஈரான் அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை: