வெள்ளி, 31 மே, 2019

ஸ்டாலினை அழைப்பது சொந்தக் காசில் சூனியம் வைப்பது போல!

stalin modinakkheeran.in - ஆதனூர் சோழன் ; நாடாளுமன்றத்தில் எந்த பங்களிப்பும் இல்லாதவர்களுக் கெல்லாம் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லை. அவருக்கு அழைப்பு விடுக்காததால் திமுக எம்.பி.க்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்பதை தவிர்த்திருக்கிறார்கள். பாஜகவின் இந்த முடிவுக்கு என்ன காரணமாக இருக்கும்?
வேறு என்ன..?  தனக்குக் கிடைத்த பிரமாண்டமான வெற்றியின் பெருமிதத்தை காவுகொடுக்க வேண்டியிருக்குமோ என்பதுதான் காரணம். ஒருவேளை ஸ்டாலினுக்கு அழைப்புக் கொடுத்திருந்தால் விழாவின் லைம்லைட் ஸ்டாலின் மீதுதானே விழுந்திருக்கும்? தென் மாநிலத்தில் பாஜகவை துடைத்தெறிந்த கூட்டணியின் தலைவர் என்று ஸ்டாலினுக்கு மீடியாக்கள் வர்ணனை கொடுத்திருக்கும். அது உலகம் முழுவதும் பரவியிருக்கும்.

ஸ்டாலின் வெறுமனே ஒரு கட்சித் தலைவர் மட்டுமல்ல. தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அந்த வகையிலேனும் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.



stalin modi

ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தால், அவர் பங்கேற்றால் பாஜக பெற்ற மிகப்பெரிய வெற்றி கொஞ்சமேனும் திசைதிருப்பப்படும். மோடியை முதன்முதலில் சேடிஸ்ட் மோடி என்றும், பாசிஸ்ட் மோடி என்றும் பட்டம் சூட்டி, அதுவே ஹேஸ்டேக் ஆகி ட்ரெண்டானதை மோடி மறக்கவில்லை என்கிறார்கள் திமுகவினர்.

கோபேக் மோடி என்ற ஹேஸ் டேக்கும், கருப்புக்கொடி போராட்டமும், சாலைப் பயணத்தை தவிர்த்து காம்பவுண்ட் சுவரையெல்லாம் இடித்து பயணம் செய்த அவலமும் மோடியை கடுப்பேற்றியிருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

தென்னிந்தியாவில் பாஜக எதிர்ப்பை வலுப்படுத்தியதில் ஸ்டாலினின் பங்கு முக்கியமானது என்பதை உணர்ந்ததால்தான், ஸ்டாலினைப் பார்த்தால் அவருக்கு பழசெல்லாம் நினைவு வரும் என்பதால்தான் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு அனுப்பவில்லை என்று டெல்லியில் உள்ள பத்திரிகையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: