ஞாயிறு, 26 மே, 2019

விஜயகாந்த், கமல், சீமான்: மாற்று அரசியல் மாய்மாலங்கள்!


விஜயகாந்த், கமல், சீமான்: மாற்று அரசியல் மாய்மாலங்கள்!மின்னம்பலம் ; தனியன் தமிழக அரசியலில் கமலோ, சீமானோ விஜயகாந்த் அளவுக்குக்கூடச் செல்வாக்கில்லாதவர்கள் என்பதையே இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் காண்பித்திருக்கின்றன.
விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கிறார். அடுத்த ஓராண்டில் (2006) அவரது கட்சி போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 8.4% வாக்குகளைப் பெறுகிறது.
அடுத்து அவர் 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 10.3%.
இதற்கு மாறாக இந்தத் தேர்தலில் சீமான் கட்சி பெற்ற வாக்குகள் 3.87%.
கமல்ஹாசன் கட்சி பெற்ற வாக்குகள் 3.78%.
இதே தேர்தலில் “மற்ற” கட்சிகள் 4.94% வாங்கியிருக்கின்றன.
NOTAவுக்கு 1.28% வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

அதாவது “மற்ற” கட்சிகளை விட கமலும் சீமானும் குறைவாகத்தான் வாக்குகள் வாங்கியிருக்கிறார்கள். NOTAவை விட மூன்று மடங்கு வாக்குகளை அதிகம் வாங்கியிருக்கிறார்கள் என்பதுதான் இவர்களுக்கான ஒரே ஆறுதல்.
இதுதான் தமிழக அரசியலின் யதார்த்தம்.

விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்துத் தேர்தல்களைத் தனியாகச் சந்தித்தபோது ஒருபக்கம் கலைஞர், மறுபக்கம் ஜெயலலிதா என்கிற இரு பெரும் ஆளுமைகளை எதிர்த்துத் தன்னந்தனியாக 8.3% முதல் 10.3% வாக்குகளை வாங்கினார்.
பாமகவின் கோட்டையாகக் கருதப்பட்ட பகுதியில் அவரே நின்று, வென்று சட்டமன்ற உறுப்பினராகவும் சட்டசபைக்குச் சென்றார்.
கமலோ, சீமானோ ஒரே ஒரு தொகுதியில்கூட வெல்லவும் இல்லை. கட்டுத்தொகையைக்கூடக் காப்பாற்றிக்கொள்ளவும் இல்லை.
விஜயகாந்த் அளவுக்குக்கூட இவர்களால் வாக்குகளை வாங்க முடியாமல் போக என்ன காரணம்?
ஒரே காரணம் நம்பகத்தன்மை.
தமிழக அரசியலில் கமலோ, சீமானோ நம்பத்தகுந்த தலைவர்கள் அல்ல என்பதையே மக்கள் அளித்திருக்கும் இந்த வாக்குகள் காட்டுகின்றன.
கமல் பாஜகவின் மாயக்குதிரையாகவும் சீமான் அதிமுக, பாஜக இரண்டுக்குமான அடியாளாகவுமே தமிழக அரசியலில் பார்க்கப்படுகிறார்கள். தனித்து இயங்கும் தலைமைகளாகப் பார்க்கப்படவில்லை.
மாறாக விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோதும் 2006 மற்றும் 2009 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான மூன்றாவது கட்சியாகத் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார். அதை மக்களும் நம்பினார்கள். அதனாலேயே அவருக்கு இரட்டை இலக்க வாக்கு சதவிகிதம் கிடைத்தது.
ஆனால், மக்கள் தன் மீது வைத்த அந்த அதீத நம்பிக்கையை விஜயகாந்த் 2011 தேர்தலில் தானாகவே குலைத்துக்கொண்டார். தன்னையும் தன் கட்சியையும் ஜெயலலிதாவிடம் நல்ல விலைக்கு அவரே விற்றுக்கொண்டார், சோ ராமசாமி மூலம். அன்றே போனது விஜயகாந்த் மீதான மக்கள் நம்பிக்கை.

விளைவு, அந்தச் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி வென்று அவர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வானாலும் அவரது கட்சியின் அரசியல் எதிர்காலம் அந்தத் தேர்தலோடு முடிந்துபோனது. கட்சியின் வீழ்ச்சியும் தொடர்கதையானது. இந்தத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் வெறும் 2.19%. இனி, அந்தக் கட்சிக்கு அரசியலில் மீட்சியில்லை.
இரட்டை இலக்க வாக்கு சதவிகிதத்தையும் மாநிலம் தழுவிய கட்சி அமைப்பையும் கொண்டிருந்த விஜயகாந்த் கட்சியின் கதையே அதுவென்றால் அந்த இரண்டும் இல்லாத கமலும் சீமானும் தான் தமிழக அரசியலின் அடுத்த மாற்றுச் சக்திகள் என்கிற மாய்மாலமெல்லாம் சிரிப்பைக்கூட மூட்டாத நமுத்துப்போன நகைச்சுவைகள்.
மாற்று என்பது புதிய முழக்கம் அல்ல
உண்மையில் தமிழக அரசியலில் இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று அரசியல் உருவாக வேண்டும் என்பது புதிய கோரிக்கையே அல்ல. மிகவும் பழைய கோரிக்கை.
திமுக, அதிமுக இரண்டையும் “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று காமராஜர் சொன்னதாகக் கூறப்படும் 1970களிலிருந்து அந்த மூன்றாவது மாற்றுக்கான முயற்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.
முதலில் அதை காமராஜரே முயன்றார். பின்னர் மூப்பனார் முயன்றார். சிவாஜி முயன்றார். வைகோ முயன்றார். விஜயகாந்த் முயன்றார். இவர்கள் தவிர வாழப்பாடி, டி ராஜேந்தர் என வேறு பலரும் முயன்றார்கள். ஒருவருமே தேறவில்லை.
கட்டக் கடைசியாக மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் கட்சி 1989 சட்டமன்றத் தேர்தலில் வாங்கிய 21.8% வாக்குகள்தான் திமுக, அதிமுக ஆகிய இரண்டுக்கும் மாற்று அரசியல் கட்சி வாங்கிய அதிகபட்ச வாக்குகள். அந்தச் சாதனையை வேறு எந்த மாற்று அரசியல் கட்சியும் இன்றுவரை தாண்டவில்லை என்பது மட்டுமல்ல இரட்டை இலக்க வாக்கு சதவிகிதத்தைக்கூட எட்டிப்பிடிக்க முடியவில்லை. எல்லாம் ஒற்றை இலக்கில் வாக்குகள் வாங்கி ஒட்டுமொத்தமாய் கட்டுத்தொகையைப் பறிகொடுக்கும் அரசியல் ஒற்றை ரோசாக்கள்தான்.
என்ன காரணம்?
மாற்றுச் சக்தி எது, மாய்மால கும்பல் எது என்பதைத் தமிழர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். மாற்று அரசியல் சக்தி என்று அவர்கள் கட்டக்கடைசியாக அடையாளம் கண்டது எம்ஜிஆரை. அது நடந்தது 1977ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில். 42 ஆண்டுகளாக அப்படியொரு மாற்று அரசியல் தலைமையைத் தமிழர்கள் இன்னும் அடையாளம் காணவில்லை. கிடைத்தால் ஏற்கத் தயாராகவே இருக்கிறார்கள். அதுவும் ஜெயலலிதா இல்லாத அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும் என்கிற குழப்பம் தொடரும் சூழலில் மாற்று அரசியலுக்கும் மாற்று அரசியல் தலைமைக்குமான வெற்றிடம் இருப்பதாகக் கருதுவதில் தவறில்லை.
ஆனால், அரசியலில் உண்மையான மாற்றுச் சக்திகளுக்கும் நிழல் மனிதர்களுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தமிழக வாக்காளர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு சாட்சியம்.

கருத்துகள் இல்லை: