ஞாயிறு, 26 மே, 2019

தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? அஜய் அகர்வால்.. பாஜக மூத்த தலைவர்!

sathiyam.tv  : அஜய் அகர்வால் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மோடி மீது பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கியுள்ளார். அத்வானி குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படவேண்டும் என நாடே எதிர்பார்த்த நிலையில் ராம் நாத் கோவிந்தை குடியரசு தலைவர் வேட்பாளாராக பாஜக தலைமை அறிவித்தது.
அதன் பின்னணியில் குஜராத் தேர்தல் இருந்தது என்று கூறியுள்ள அகர்வால், குஜராத்தில் பாஜக படுதோல்வி அடையும் என்ற நிலை இருந்தபோது ராம்நாத்தை குடியரசுத் தலைவராக்கி கோலி சமுதாய வாக்குகளை அறுவடை செய்தது பாஜக.
அதோடு, குஜராத் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற தான்தான் காரணம் என குறிப்பிட்டுள்ள அஜய் அகர்வால், குஜராத் தேர்தலின்போது ஜங்க்புராவில் மணி சங்கர் அய்யர் வீட்டில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானிய அதிகாரிகள் இடையே சந்திப்பு நடைபெற்றது என்பதை கூறியது நான்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை குறிப்பிட்டு தேசப் பாதுகாப்பு குறித்தும் பிரச்சார மேடைகளில் மோடி பேசி வந்தார். இதன் காரணமாகவே குஜராத்தில் படு தோல்வியடைய இருந்த பாஜக அங்கு வெற்றி பெற்றது என்று கூறியுள்ளார்.
இந்த விவரங்களை அஜய் வெளியிட்டதால்தான் குஜராத்தில் பாஜக வென்றதாக ஆர்எஸ்எஸ்எஸ் அமைப்பு ஒப்புக் கொண்டதாகவும், அதற்கு ஆதாரமாக தன்னுடன் ஆர்எஸ்எஸ்எஸ் தலைவர் தத்தத்ரேயா ஹோசபலே பேசிய ஆடியோ ஆதாரம் உள்ளதாகவும் அஜய் குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் கூறிய அஜய், மோடியை ஒரு நன்றி கெட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலை பொறுத்தளவில் நியாயமாக நடைபெற்றால் பாஜக வெறும் 40 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றிபெறும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மோடியை தனக்கு 28 ஆண்டுகளாக தெரியும் என்று குறிப்பிட்டவர், அவருடன் பாஜக அலுவலகத்தில் ஒன்றாக அமர்ந்து பலமுறை உணவு உண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் பண மதிப்பிழப்பு குறித்து குறிப்பிட்டுள்ள அஜய் குறைந்தது 5 லட்சம் கோடிகளாவது திரும்பி வராது என்று நீங்கள் (மோடி ) எதிர்பார்த்தீர்கள் ஆனால் 99 மூ பணம் திரும்பி வந்துவிட்டது. அதில் பெருமளவு கள்ள நோட்டுகளும் இருந்தன. அது குறித்து எந்த விசாரணையும் நடத்தப் படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டிலேயே நீங்கள்தான்(மோடி) புத்திசாலி அதனால்தான் யாரையும் கலந்தாலோசிக்காமல் அரசையும் தயார் நிலையில் வைக்காமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தீர்கள் என்றும் எந்த கட்சிப் பணியாளர்களை மோடி மதிப்பதில்லை என்றும் கடுமையாக அந்த கடிதத்தில் அஜய் அகர்வால் கூறியுள்ளார். இந்த கடிதம் பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: