வியாழன், 30 மே, 2019

அதிமுக ஆட்சிக்கு வந்த ஆபத்து இப்போது நீங்கியிருக்கிறது”

  மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் லைனில் இருந்தது. அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ் வந்தது.
டிஜிட்டல் திண்ணை:  ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?“மக்களவைத் தேர்தல் முடிவுகளில் திமுக தமிழ்நாட்டை ஸ்வீப் செய்ததோடு, சட்டமன்ற மினி இடைத்தேர்தலில் 22 இல் 13 தொகுதிகளில் ஜெயித்தது. இது தமிழகம் முழுதும் திமுகவுக்கு ஆதரவு ட்ரெண்டை உருவாக்கியிருந்தது. ஆனாலும் எடப்பாடி அரசு தேவையான எம்.எல்.ஏ.க்களைப் பெற்று தப்பிப் பிழைத்தது. இதை அடிப்படையாக வைத்து விரைவில் எடப்பாடி அரசை ஸ்டாலின் கலைத்துவிடுவார் என்று திமுகவினர் பகிரங்கமாக பேச ஆரம்பித்தனர். இது ஒரு பக்கம் என்றால் இன்னொருபக்கம் திமுக நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் இருந்து சில எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து எடப்பாடி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வேலைகளிலும் தலைமையின் அறிதலோடு தீவிரமாக ஈடுபட்டனர்.

இப்போது இருக்கிற திமுக எம்.எல்.ஏ.க்களில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சிக் கலைப்பையும் உடனடி தேர்தலையும் விரும்பவில்லை என்று ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் திமுக தொண்டர்கள் உடனடியாக இந்த ஆட்சியை அப்புறப்படுத்திவிட்டு பொதுத் தேர்தலை எதிர்கொண்டால் திமுக மக்களவை போலவே சட்டமன்றத்தையும் ஸ்வீப் செய்யலாம் என்று ஆவலோடு காத்திருந்தார்கள். எம்.எல்.ஏ.க்களின் விருப்பமா, தொண்டர்களின் விருப்பமா என்றால் தொண்டர்களின் விருப்பம்தான் என்று முடிவெடுத்த ஸ்டாலின், அதிமுக ஆட்சியைக் கவிழ்க்கும் ரகசிய ஆபரேஷனுக்கு ஓ.கே. சொல்லிவிட்டார் என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் சந்தோஷமாகினர்.
ஓஎம்ஜி களமிறங்கி சில அதிமுக எம்.எல்.ஏ.க்களோடு பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டிருந்தது. இப்போது சட்டமன்றத்தில் எடப்பாடியை எதிர்த்து ஆட்சியைக் கவிழ்த்தால் மீண்டும் சீட், அடுத்து அமையப் போகும் திமுக ஆட்சியில் வாரியத் தலைவர் பதவி வழங்கப்படும் என்றெல்லாம் ஓஎம்ஜி தரப்பில் அதிமுக எம்.எல்.ஏ.க்களோடு பேசிவந்தனர். இன்னொரு பக்கம் திமுக மாவட்டச் செயலாளர்களும் தங்களது மாவட்டங்களில் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை இந்தப் பக்கம் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இப்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கைப்படி தமிழக சட்டமன்றத்தில் 234 உறுப்பினர்களில் 233 பேர் இருக்கிறார்கள். நாங்குநேரி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினராக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றதால் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்நிலையில் திமுகவுக்கு முன்பிருந்த 88 உறுப்பினர்கள், இப்போதைய இடைத்தேர்தல் மூலம் கிடைத்த 13 உறுப்பினர்கள் என 101 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். காங்கிரசுக்கு வசந்தகுமார் நீங்கலாக 7, முஸ்லிம் லீக் 1 என திமுக கூட்டணியில் மொத்தம் 109 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
அதிமுக தரப்பில் இடைத்தேர்தல்களில் ஜெயித்த 9 பேர், சபாநாயகர் தனபால் என மொத்தம் இப்போது அதிமுகவுக்கு 123 பேர் சட்டமன்றத்தில் இருக்கிறார்கள் . இந்த 123 பேரில் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோரும் அடக்கம். ஆனால் இந்த ஆறு பேரில் நான்கு பேர் திமுகவோடு இணக்கமாக இருக்கிறார்கள்.
தமிமுன் அன்சாரி,கருணாஸ் ஆகிய இருவரிடமும், ஆட்சியைக் கவிழ்க்க உதவினால் மீண்டும் திமுகவில் சீட் தருகிறோம் என்று பேசியிருக்கிறார்கள். இதேபோல அண்மையில் சபாநாயகரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரில் பிரபு தவிர இருவரும் உச்ச நீதிமன்றம் சென்றார்கள். கோர்ட்டுக்குப் போக வேண்டாம் என்று தினகரன் சொல்லியும் அவர்கள் இருவரும் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்து அதற்கு திமுகவின் உதவியையே நாடியிருக்கிறார்கள். உடனடியாக இருவரும் சபாநாயகருக்கு எதிரான மனு தாக்கல் செய்ததற்கும், அதற்கான வழக்கறிஞர் கட்டணம் உள்ளிட்ட நீதிமன்ற செலவுகளுக்கும் 70 லட்சம் ரூபாய் ஆனதாம். இதை திமுகதான் செலவு செய்தது என்கிறார்கள் டெல்லி வழக்கறிஞர்கள் வட்டாரத்தில். அந்த வகையில் கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய இருவரும் திமுகவோடு இணக்கமாகத்தான் இருக்கிறார்கள்.
எனவே அதிமுகவுக்கு 123இல் இந்த 4 பேர் போக 119 பேர்தான் இருக்கிறார்கள். அமமுக சார்பில் தினகரன் ஒரு உறுப்பினர் இருக்கிறார். அவரும் நிச்சயமாக அரசுக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்.
ஆக அதிமுக அரசுக்கு எதிரான மொத்த வாக்குகள் திமுக கூட்டணி 109 + 4 அதிமுக உறுப்பினர்கள் + தினகரன் என 114 இருக்கின்றன. அதிமுக அரசுக்கு ஆதரவான வாக்குகள் 119 இருக்கின்றன. இதில் அதிமுகவில் இருந்து வெறும் நான்கு பேரை இழுத்தாலே அரசுக்கு எதிரான வாக்குகள் 118 ஆகி அரசு கவிழ்ந்துவிடும். ஆனால் அவ்வளவு கணக்காக இழுக்க வேண்டாம் என்று குறைந்தபட்சம் பத்து எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்காக திமுகவினர் கடந்த ஒரு வாரமாகவே தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
28 ஆம் தேதி திமுகவின் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்த நிகழ்ச்சி முடிந்து தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் ஸ்டாலின். அப்போது சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, ‘சட்டமன்றம் கூடும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொறுத்திருந்து பாருங்கள்’ என்று பதிலளித்தார்.
திமுக தலைவரின் இந்த பதில் ஏற்கனவே தாங்கள் நடத்தி வரும் ஆட்சிக் கவிழ்ப்பு ஆபரேஷனுக்கு ஊக்கமான வார்த்தைகளாக இருப்பதாக அதில் ஈடுபட்டிருந்த மா.செ.க்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அன்று மாலை அந்த மாசெக்களுக்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து ஒரு செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
‘ஆட்சிக் கவிழ்ப்பு வேலையெல்லாம் அப்படியே நிறுத்தி வையுங்க. யார்கிட்டயும் பேச வேண்டாம். எடப்பாடி ஆட்சி ஏற்கனவே மக்கள்கிட்ட கெட்ட பெயரை நிறைய சம்பாதிச்சிருக்கு. இந்த ஆட்சி பதவிக் காலம் முழுசா இருந்து இன்னும் அதிக கெட்ட பெயரை சம்பாதிக்கட்டும். அப்பதான் தேர்தலை சந்திக்க நமக்கு இன்னும் ஈசியா இருக்கும். அதனால அந்த பேச்சுவார்த்தையெல்லாம் கைவிட்டுடுங்க’ என்பதுதான் மாசெக்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் தகவல். ஆவலாக
அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் பேசிக் கனிய வைத்துக் கொண்டிருந்த மாசெக்களுக்கு இது அதிர்ச்சியாகிவிட்டது.
’பொறுத்திருந்து பாருங்கள்னு பதில் சொன்ன தலைவருக்கு அதுக்குள்ள என்ன ஆச்சு? ஏன் ஆட்சிக் கவிழ்ப்பு ஆபரேஷனை நிறுத்தச் சொல்லிட்டார். தொண்டர்கள் எல்லாம் இந்த ஆட்சி எப்போ போகும்னு இருக்காங்க. இந்த நிலைமையில வேகமாக ஆபரேஷனை நடத்தச் சொன்ன தலைவருக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யாரா இருக்கும்?’ என்றெல்லாம் திமுக மாசெக்கள் மத்தியில் இரண்டு நாட்களாக பேசி வருகிறார்கள். அதில் ஒரு சிலர், ‘ஒரு வேளை டெல்லிலேர்ந்து தலைவரை தொடர்புகொண்டு எடப்பாடி ஆட்சி தொடரணும்னு பேசியிருப்பாங்களோ... ’ என்றும் கூட விவாதித்து வருகிறார்கள். ஆக எடப்பாடி ஆட்சிக்கு வந்த ஆபத்து இப்போது நீங்கியிருக்கிறது” என்ற செய்திக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.
இதை ஷேர் செய்துகொண்டது ஃபேஸ்புக்.
.

கருத்துகள் இல்லை: