திங்கள், 13 ஆகஸ்ட், 2018

அரசியல் முகப்பு > செய்திகள் > அரசியல் கலைஞர் ஒரு சமூகநீதி சகாப்தம் : கி.வீரமணி, திராவிடர் கழக தலைவர்

  தினகரன் : 1967ல் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன்
தந்தை பெரியாரின் அறிவுரைப்படி பல சமூக  சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்து, அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று பிரகடனப்படுத்தினார். முதல்வர் அண்ணாவிடம்  இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த உடனே முயற்சி எடுக்க கேட்டுக்கொண்டார் தந்தை பெரியார். அதை ஏற்று  முயன்றபோது அண்ணா மறைந்து விட்டார். முப்பெரும் சாதனைகளைச் செய்துவிட்டு அந்தக் காலக்கட்டத்தில் பதவியேற்ற நமது கருணாநிதி பெரியார் அறிவுரைப்படி, அண்ணா துவக்கிய பணியைத் தொடர்ந்தார். சட்டநாதன் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று தந்தை பெரியார் விருப்பத்திற்கு ஏற்ப, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 16 சதவிகிதத்தை 18 ஆக உயர்த்தியும், பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்து வந்த 25 சதவிகிதத்தை 31 ஆகவும் உயர்த்தினார். இதன்மூலம் இடஒதுக்கீடு 49 சதவிகிதத்தை எட்டியது. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ9000 வருமான வரம்பு என்ற ஆணை முறை ஒழிந்தவுடன், அவர் 31 சதவிகித பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டினை 50 சதவிகிதமாக உயர்த்தியதால் தமிழ்நாட்டின் மொத்த இடஒதுக்கீடு 68 (50+18)  சதவிகிதம் ஆனது.


மீண்டும் கருணாநிதி 1989-91இல் ஆட்சி அமைத்து முதல் அமைச்சரான உடனேயே, மலைவாழ் - மக்களுக்கு ஒரு சதவிகிதம் (அவர்கள் எண்ணிக்கை 1 % கூட இல்லாத நிலையில்) தனியே ஒதுக்கீடு தர வேண்டுமென்ற உயர் நீதிமன்ற ஆணையை செயல்படுத்தினார். எம்.ஜி.ஆர் அரசு கொண்டு வந்த நுழைவுத் தேர்வு என்ற பெயரில் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளுக்கு இருந்த தடையை தி.க.வும் தி.மு.க.வும் தொடர்ந்து 21 ஆண்டுகள் எதிர்த்து வந்தன. நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பதை கல்வி நிபுணர் குழு போட்டு, சட்டம் கொண்டு வந்து  கிராமப்புற மாணவர்கள் முதல் தலைமுறையினருக்கு பெருவாய்ப்பினை மருத்துவம்  - பொறியியல் படிப்புகளில் கதவைத் திறந்துவிட்டார். இஸ்லாமியருக்கு பிற்படுத்தப்பட்டோர் கோட்டாவிலிருந்து 3 சதவிகிதமும், அதேபோல அருந்ததியினருக்கு 3% தாழ்த்தப்பட்டோர் கோட்டாவிலிருந்தும் அளித்து, அவர்களுக்கு  மறுக்கப்பட்ட சமூகநீதி கிட்டும்படி செய்தார். பிற்படுத்தப்பட்டோருக்கு தனி அமைச்சகம் துறை கிடையாது, அதை உருவாக்கி என்.வி.நடராசனை அமைச்சராக்கினார்.

110 ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்றில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட உயர் நீதிமன்ற நீதிபதியாக ஏன் வரவில்லை என்று தந்தை பெரியார் கேட்டார். உடனே கலைஞர் ராக்கெட் வேகத்தில் செயல்பட்டு தலைமை நீதிபதி கே.வீராசாமியின் ஒப்புதலைப் பெற்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட நீதிபதியாக 9வது வரிசையில் இருந்த ஏ. வரதராசனை சமூகநீதிக்கு முன்னுரிமை என்ற சரியான காரணம் காட்டி, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, சட்ட அமைச்சர் மாதவனை டில்லிக்கு அனுப்பி, உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவர் ஒப்புதல் வரை பெற்று உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கச் செய்தார். முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் அவரே செல்லும் வாய்ப்பினைப் பெற்றார்.  மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடே இல்லாத குறை போக்க நியமிக்கப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயலாக்கினார்.இதுபோல் பெண்களுக்கும் சொத்துரிமை, பணிகளில் இடஒதுக்கீடு, ஆசிரியைகளாக நியமனத்தில் முன்னுரிமை போன்ற பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி சரித்திரம் படைத்தவர் மானமிகு கலைஞர். திருக்குவளையில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து திக்கெட்டும் புகழ் மணக்க பெருமை பெற்ற அந்த சுயமரியாதைச் சுடரொளியின் ஒளிக்கதிர்களின் வீச்சு உலகெல்லாம் பரவி வருகிறது. திராவிடர் இயக்கம் பூரித்துப் பெருமை கொள்கிறது. கலைஞர் தனி மனிதரல்ல. அவர் ஒரு சமூகநீதி சகாப்தம்.

கருத்துகள் இல்லை: