சனி, 18 ஆகஸ்ட், 2018

முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது. ஆதாரங்களை என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்.பென்னி குக் பேத்தி டயானா ,

பென்னிகுவிகின் அண்ணன் வழி பேத்தி டயானா.vikatan.com;எம்.கணேஷ்- வீ.சக்தி அருணகிரி : “முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது. அதற்கான ஆதாரங்களை என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார். இப்படி பொய்யான செய்திகளைப் பரப்பும்போது இரு மாநில மக்கள் மனதில் வெறுப்பு உணர்வு உருவாகும்” கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் அண்ணன் வழி பேத்தி வேதனையுடன் கூறினார்.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் அண்ணன் வழி பேத்தியான டயானா ஜீப் நேற்று தேனி வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரலாறு காணாத அளவுக்குக் கேரள மாநிலம் மழையைச் சந்தித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதை நானும் நேரில் பார்த்தேன். கொச்சின் சென்று அங்கிருக்கும் மக்களுடன் பேசிவிட்டு வந்தேன். மீண்டு வந்திடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
மகிழ்ச்சியாக இருக்கிறது. இடுக்கி மாவட்ட மக்களுக்காக 4 டன் காய்கறிகள் வாங்கிக்கொடுத்திருக்கிறோம். அதற்காகப் பலர் உதவி செய்திருக்கிறார்கள். மேலும் உதவி செய்துவருகிறார்கள்.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் விழுந்துவிட்டதாகவும், அணை உடையப்போகிறது, மக்கள் அழியப்போகிறார்கள் என்றும் வதந்திகள் பரவி வருகிறது. இது முற்றிலும் பொய்யானது.
 அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அணையைப் பற்றி வதந்தி பரப்புபவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை, வலுவாக இருக்கிறது. அதற்கான ஆதாரங்களை என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார். இப்படி பொய்யான செய்திகளைப் பரப்பும்போது இரு மாநில மக்கள் மனதில் வெறுப்பு உணர்வு உருவாகும். அதற்கு நாம் எப்போதும் இடம் கொடுக்கக் கூடாது.
சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும். அதுதான் என் விருப்பம். இது குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்டக் கலெக்டர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்” என்றார்.
முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் விழுந்துவிட்டது எனச் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவது குறித்து
கேரள அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது. எனவே, அணை குறித்து பரப்பப்படும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
vikatan.com

கருத்துகள் இல்லை: