சனி, 18 ஆகஸ்ட், 2018

மூத்த பத்திரிகையாளர் திரு.பகவான்சிங் : ஒரு குற்றவாளியின் ஆட்சியை அம்மாவின் ஆட்சி உத்தமியின் ஆட்சி ....


சிங்கராயர் ஆரோக்கியசாமி : கேட்டானய்யா ஒரு ஒரு வார்த்தை நாக்கைப் பிடுங்கிக்கொள்வது மாதிரி என்று பெரியோர் பலபேர் சொல்ல நானே கேட்டிருக்கிறேன். அப்படியான வார்த்தைகளைக் கேட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டது என்பது உண்மைதான்.
ஆனால் இன்று ஒரு மூத்த பத்திரிகையாளர் திரு.பகவான்சிங் கேட்டாரே ஒரு வார்த்தை. ஆம். இதுவரை நடந்த பொதுக்கூட்டங்களில் பெரும்பாலும் பேசுபவர்கள் கூட்டத்தைப் பார்த்து கேள்விகளைக் வைப்பார்கள் அல்லது கூட்டத்தில் இருந்து எதிர்கேள்வியாக பேசுபவரை நோக்கி கேள்விக் கணைகள் எழும்,எழுந்திருக்கிறது.
இன்று கேட்டாரய்யா ஒரு கேள்வி. அதுவும் மேடையைப் பார்த்து,சக பத்திரிகை நண்பர்களைப் பார்த்து. ஆம் நண்பர்களே, தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பத்திரிகை,ஊடகங்கள் சார்பில் திருச்சியில் அஞ்சலிக்கூட்டம் நடத்தப்பட்டது. பெரும்பாலும் சில குறைகள் இருந்தாலும் ஒத்து ஊதாத ஊடக,பத்திரிகை ஆசிரியர்கள்,நிறுவனர்கள் என பழுத்த அனுபவம் உள்ளோர் அனைவரும் வந்திருந்தனர். அதில் யார் பேச்சையும் குறைசொல்ல முடியாது. இருந்தாலும் திரு.திருமாவேலன் அவர்களும், திரு.அருணன் , திரு.குணா அவர்களின் பேச்சு என்னை ஈர்த்தது எனச் சொல்லலாம். மற்றவர்கள் அனைவரும் அவரவர் பார்வையில் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

இதைப் பெரும்பாலும் நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதேசமயம், டெக்கான் குரோனிக்கல் ஆசிரியர் திரு.பகவான்சிங் சக நண்பர்களைப் பார்த்துக் கேட்டாரே... ..... நாம் எவ்வளவோ எழுதியிருக்கிறோம். ஆனால்,நாமும் தவறு செய்திருக்கிறோமே இதைப் பற்றி நாம் பேசியிருக்கிறோமா, அதைப்பற்றி எழுதியிருக்கிறோமா? என்றதும் ஒரு நிசப்தம். ஆம், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, அதுவும் சிறைத் தண்டனையோடு, மிகப்பெரிய அபராதத் தொகையோடு பகிரங்கமாகக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் புகைப்படத்தை வைத்து இது எங்கள் அம்மாவின் ஆட்சி. உத்தமியின் ஆட்சி என்று ஒவ்வொரு மந்திரியும், முதல்வர் உட்பட நம் கண்முன்னே காண்பிக்கிறார்களே அதை நாம் எதிர்த்தோமா? எதிர்த்திருக்க வேண்டாமா? அப்படி என்றால் நாமும் தவறு செய்திருக்கிறோம் என்றுதானே பொருள் என்றாரே பார்க்கலாம்.
நம் தளபதிக்கு ஒரே ஆச்சரியம். குழுமியிருந்த மக்களுக்கும் ஆச்சரியம். இப்படிப் பட்டப் பகலில், தொலைக்காட்சி நேரலையில், ஒருவர் பேசியிருக்கிறார் என்றால் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த பத்திரிகையாளர் அவர்தான் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. இது ஏதோ நமக்கு ஆதரவாகத் திரு.பகவான்சிங் பேசியிருக்கிறார் என்பதற்காக நான் இதை வெளிக்கொணரவில்லை. ஆனால் பத்திரிகைத் தர்மம், பத்திரிகைத் தர்மம் என்று எங்கே என்று நம்மில் பலரே கடுமையாக விமர்சித்து எழுதி, பேசிவரும் இச்சூழலில் இவரின் நியாயமான பேச்சு ஊடகத்துறையினர்மீது ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படத் துவங்கியிருக்கிறது. இது ஆரோக்கியத்தின் வளர்ச்சி. தவறு செய்பவர்களுக்கு ஒரு சம்மட்டி அடி. வாழ்க. உங்களின் தைரியத்திற்கு உங்களின் நேர்மைக்கு எனது சல்யூட் திரு.பகவான்சிங் சார்.
எழுதியவர்: சிங்கராயர் ஆரோக்கியசாமி.

கருத்துகள் இல்லை: