ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

இசைக்கு யார் ஓனர் ? ஷாலின் மரியா லாரன்ஸ்


www.hixic.com/shalinmarialawrence/isaikku-yar-owner-shalin-maria-lawrance
இந்த வாரம் கிறிஸ்தவ சமுகத்தின் மீது ஒரு கொடுமை
இழைக்கப்பட்டுள்ளது. தீண்டாமை கொடுமை. மாநிலமெங்கும் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கும் மனிதர்கள் கூட இந்த விஷயத்தில் கண்டும் காணாமல் இருக்கும் இந்த நேரத்தில் சில விஷயங்களை ஓங்கி கன்னத்தில் அறைந்தார் போல் சொல்ல வேண்டி இருக்கிறது .
யார் மண்ணில் யார் எந்த பாடலை பாட வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையை மூன்று சதவிகித சிறுபான்மையினருக்கு இங்கு யார் தந்தது..? Privileged இசை வித்தர்களுக்கு சாதிய வழிப்படி இசை கற்றுக் கொடுக்கப்படுகிறது என்கிற ஒற்றை நீச தகுதியை தவிர்த்து, இசையைப் பற்றி இந்த தமிழ் மண்ணில் பேச என்ன தகுதி இருக்கிறது..?
தமிழ் மரபு இசையின் மும்மூர்த்திகள் பற்றி தெரியுமா..?
தமிழிசைக்கு அருந்தொண்டாற்றிய என் முப்பாட்டன்களின் வரலாறு தெரியுமா உங்களுக்கு ?
1.வேதநாயக சாஸ்திரிகள்
2.சாமுவேல் (மாயவரம் ) வேதநாயக பிள்ளை
3.ஆபிரஹாம் பண்டிதர்  .
தெரியுமா உங்களுக்கு..?
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இசையை அதுவும் தங்களுக்கு மறுக்கப்பட்ட இசையை கற்று, தேர்ந்து, பண்டிதர்களாகி, கர்நாடக சங்கீதத்தை பிய்த்து, ஆராய்ந்து, கீர்த்தனைகள் ஆயிரம் செய்து, நூல்கள் பல பதிந்து, தமிழ் மரபு இசைதான் கர்நாடக சங்கீதத்தின் வேர் என்று கண்டுபிடித்து அறிவியல் ரீதியாக நிரூபித்தவர்களின் வரலாறு தெரியுமோ ஒய்..?


வேதநாயக சாஸ்திரிகள் திருநெல்வேலி கிறிஸ்தவர். பிறந்தது 1774ம் ஆண்டு. தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் இறையியல் பயின்ற இவர் பல நூறு கீர்த்தனைகளை இயற்றி பாடினார். சாத்ரிய சங்கீதத்தில் தேர்ச்சி பெற்று தெலுங்கு கர்நாடக சங்கீதத்துக்கு எதிர் புரட்சியாய் தமிழ் மொழியில் பல கீர்த்தனைகளை புனைந்து, தமிழிசை சார்ந்த பல இலக்கியங்களை உருவாக்கினார். மொத்தம் 120 நூல்களை எழுதிய இவர் மிகவும் பெயர் பெற்றது இவரின் ’வேத சாஸ்திர கும்மி’ (1819 இல் வெளிவந்தது ) என்கிற இசை இலக்கியத்திற்கு, முழுக்க முழுக்க பகுத்தறிவு பேசிய அந்த பாடல்கள் 3 சதவிகித்தினரின் எதிர்ப்புகளுக்கு பின் தடை செய்யப்பட்டன.
அந்த புத்தகத்தில் வரும் ஒரு பாடல் உதாரணம்:
மாட்டைத் தொட்டுத் தலைமுழுகாத             நீ மனுஷனைத் தொட்டு ஸ்நானம் செய்தாய்                                                                                                 மாட்டைப் பார்க்க மனுஷன் இளப்பமோ    மறுமொழி கொடு ஞானப் பெண்ணே
மாட்டு மூத்திரத்தைக் குடித்தே அந்த மாட்டுச் சாணியைப் பூசிக் கொண்டு                                                                                                   மாட்டைத் தானே கும்பிட்டு நின்ற வுன் மாட்டுப் புத்தியோ ஞானப் பெண்ணே.’
நாயைத் தொட்டுத் தலை முழுகாத நீ  நரனைத் தொட்டுத் தலை முழுகப்                                                                                                           பேயைக் கும்பிட்ட புத்தியினால் வந்த  பேதைமைப் புத்தியோ ஞானப் பெண்ணே.
மிருகத்திலும் மனுஷனை இப்படி மெத்தவும் நிஷிதப் படுத்து வது                                                                                                         அருவருக்கப் படத்தக்க பாவ மென றறிந்த தில்லையோ ஞானப் பெண்ணே.
ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..? 1819ம் ஆண்டு இப்படி ஒரு பாடலை இயற்றி விட்டு ஒரு மனிதன் வாழ்ந்துவிட முடியுமா..? வாழ்ந்தார் வேத நாயக சாஸ்திரியார்.
அவர் பாடல்களின் சிறப்பம்சமே அவர் பாடல் வரிகள்தான். அப்படி ஒரு தமிழை நீங்கள் பாகவதர் பாடல்களில் கூட கேட்டிருக்கமாட்டீர்கள். இயேசுவைப் பற்றி போதிக்கும் போதெல்லாம் சாஸ்திரிகள் சாஸ்திரிய சங்கீதத்தில் இயற்றி பழந்தமிழ் பாடல்களேயே பாடினார்.
உதாரணமாக பெத்லகேம் குறிஞ்சி என்கிற தொகுப்பில் இந்த பாடல்:
தேசு மாதர்கள் பாசமாய் வாச மேவு விலாச மரக்கிளை  மாசிலாது எடுத்து ஆசையா                                                                                  யோசன்னா, பவ நாசன்னா என ஓசையாய் கிறிஸ்தேசுவே
 நீச வாகன ராசனே எங்கள் நேசனே எனப் பேசவே - பவனி
எவ்வளவு அழகு தமிழ் பாருங்கள் .
பாரதியாருக்கு நூறு வருடங்கள் முன்பு தோன்றிய மாபெரும் கலைஞன் சாஸ்திரிகள்; ஆனால், அவர் பின்பற்றிய மதத்தின் காரணமாக இன்று அவர் யார் என்று கூட தெரியாது பொது சமூகத்திற்கு..!
இன்னொரு அதி முக்கியமான விஷயம் என்னவென்றால், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனின் அரசகவியாக இருந்தவர் வேதநாயக சாஸ்திரியார். அரச புலவராக இருந்தாலும் "அண்ணாக்கவி" என்று மன்னரால் மரியாதையாக அழைக்கப்பட்டவர்.
அழகு தமிழிசையில் சீர்திருத்தம் பேசிய வேதநாய சாஸ்திரிகள் தன 92 வது வயதில் இறந்தாலும் அவரின் ஆறாம் தலைமுறையான மற்றுமொரு வேதநாயக சாதிரிகள் வழியாக அவரின் கீர்த்தனைகள் மீண்டும் பிரபலமாயின. இன்று கூட யு டியூபில் அவரது பாடல்கள் இருக்கின்றன.கேட்டு பாருங்கள், உள்ளம் உருகும்.

மாயவரம் வேதநாய பிள்ளை 


’பிரதாப முதலியார் சரித்திரம்’ என்கிற நாவலை பற்றி கேள்விபட்டு
இருப்பீர்கள். தமிழின் முதல் நாவல். அதை இயற்றியவர்தான் இந்த வேதநாயகம் பிள்ளை. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் கொள்ளுத்தாத்தா .
1826 திருச்சி மாவட்டம் குளத்தூரில் பிறந்த இவர் கிறிஸ்தவர். தரங்கபாடியின் முன்சிபாக இருந்தவர். பின்பு மாயவரம் நகர்மன்ற தலைவராக இருந்தார். மொத்தம் 15 நூல்களை எழுதிய இவர். சாஸ்திரிய சங்கீதத்தில் தேர்ந்தவராகவும், வீணையை இசைப்பதில் ஞானியாகவும் இருந்தார்.
ஒரே தேவன் என்கிற கொள்கையை உடையவராக இருந்த இவர் கிறிஸ்தவ பாடல்கள் என்று தனியாக இயற்றாமல் சர்வ சமய ஆர்வலராக இருந்தார். இவரின் எழுத்துக்கள், குறிப்பாக தமிழிசை கீர்த்தனைகள் யாவும் சீர்திருத்தம் மட்டுமே பேசியவை. அதிலும் குறிப்பாக பெண் கல்வி.
எழுத மட்டுமா செய்தார்..? தமிழகத்தில் பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தை இவர்தான் துவங்கினார். இதெல்லாம் நமக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லி கொடுக்கவில்லை அல்லவா..? மாட்டார்கள்... உண்மை வரலாறு பார்ப்பனியத்திற்கு கேடு என்பதால் இதெல்லாம் நமக்கு வாய்க்கவில்லை .
சரி, இவர் எழுதிய ’சர்வ சமய சமரச கீர்த்தனைகள்’ என்கிற இசை இலக்கியம்தான் இவரின் மிக முக்கியம் வாய்ந்த புத்தகம். 192 கீர்த்தனைகள் கொண்ட இந்த புத்தகத்தில் உள்ள இசைப் பாடல்கள் எதுவுமே எந்த கடவுளையும் குறிப்பிடாமல் பொதுவாக இருந்ததே இதன் சிறப்பு..!
மேலும் தமிழை கர்நாடக சங்கீதத்திற்கு கொண்டு பொய் சேர்த்தது அவரின் மாபெரும் பணிகளில் ஒன்று. பட்டம்மாளில் இருந்து சஞ்சய் சுப்பிரமணியன் வரை அவர் பாடலைத்தான் பாடி கொண்டிருக்கிறார்கள்.
அவரின் புகழ் பெற்ற கீர்தனையில் ஒன்று
நினைப்படெப்போடு நெஞ்சே அய்யன் படத்தை நினப்படெப்போடு எஞ்சே  (நினப்பதேப்போடு)                                                                                                                                          Anupallavi                                                                                                
தனத்தையும் மதர் யௌவனட்டையும் உத்யோக   கனத்தையும் எண்ணிப்-பல தினத்தையும் கழித்தல்                                                                                           (நினப்படெப்போடு)
Charanams
1.பாட்டிலும் பல விளையாட்டிலும் டுர்விஸயக்-  காட்டிலும் புட்திடனை நாட்டி நாள் கழித்தல்                                                                                                   (நினப்படெப்போடு)
என்கிற கீர்த்தனையை பாடாத கர்நாடக பாடகர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
இந்த கட்டுரை எழுதி கொண்டிருக்கும்போது பாலக்காட்டு ராமா பாகவதர் பாடிய வேதநாயகம் பிள்ளையின் ’புண்ணியம் போல பாபம்’ என்கிற கீர்த்தியை கேட்டு கொண்டிருக்கிறேன் . ஆஹா..! ஆஹா..! என்று மனது சிலிர்க்கிறது கேட்க கேட்க... அமிர்தம். சம்பாதித்தை எல்லாம் தானம் தர்மம் செய்து அறவழியில் வாழ்ந்த இவரை கண்டு கோபால கிருஷ்ணா பாரதியார் உச்சி முகர்ந்து இயற்றிய கீர்த்தனைதான் ’நீயே புருஷ மேரு’ என்கிற இசைப்பாடல் .
மேலே சொன்ன இருவரின் வரலாறே உங்களுக்கு கொஞ்சம் நெஞ்சுவலியை கொடுத்திருக்கும் அடுத்து சொல்ல போகும் மனிதரோ இவர்களுக்கு எல்லாம் அப்பன். உங்கள் கால்களின் கீழே தரை பாத்திரம்.

ஆபிரகாம் பண்டிதர்


ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் பிறந்த ஆண்டு 1859. பண்டிதர் என்றால்
அப்படி இப்படி பண்டிதர் அல்ல. சித்த வைத்தியர், தமிழ் இசை கலைஞர் மற்றும் தமிழ் கவி. திருநெல்வேலியில் பிறந்த இவர் தஞ்சையில் குடிபுகுந்தார். திட்டுக்கள் சடையானை பட்டரிடம் இசை பயின்றார்; பின்பு தஞ்சையில் நாதஸ்வரம், வீணை, பிடில், ஆர்மோனியம் என்று கற்று வித்தகரானார். ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி. பிச்சைமுத்து அவர்களின் மாணவராகி மேற்கத்திய இசையையும் கற்றுத் அதிலும் சிறந்து விளங்கினார்.
அப்பொழுது கர்நாடக இசையின் தாக்கத்தால் தமிழ் மரபு இசை தமிழ்நாட்டில் துவண்டிருந்ததை கண்டு மனம் பொறுக்காத ஆபிரகாம் பண்டிதர் இசை, தமிழ் இசைப் பற்றி ஆராய்ச்சியில் இறங்கினார். இது பல வருடம் தொடர்ந்த நிலையில் தமிழகத்தில் முதமுறையாக அகில இந்திய இசை மாநாட்டை நடத்தினார். இது போன்று மொத்தம் ஆறு மாநாடுகளை தமிழகத்தில் தன் சொந்த செலவிலேயே நடத்தினார் என்பதுதான் சிறப்பு.
பின்பு தஞ்சாவூரில் இசை ஆய்வுக்கென ’சங்கீத வித்யாமகாஜன சங்கம்’ என்ற அமைப்பை உண்டாக்கினார். இதைத்தொடர்ந்து பல வருடங்களின் ஆராய்ச்சியின் விளைவாக ’கருணாமிர்த சாகரம்’ என்கிற மாபெரும் தமிழ் இசை நூலை வெளியிட்டார். 85 தமிழிசை ராகங்களை பற்றிய திறனாய்வு கொண்ட இந்த நூல் தமிழ் இசை இலக்கணங்களும் மற்றும் எப்படி இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இசை வடிவவும் தமிழ் மரபு இசையின் இலக்கணங்களில் இருந்து தோன்றி இருக்கிறது என்பதனை அறிவியியல் ரீதியாக எடுத்துரைக்கிறது.
ஸ்ருதி கணக்கியல் எனும் விஷயத்தையும் உருவாக்குகிறார். சொல்ல மறந்துவிட்டேன் இவர் ஒரு musicologist அதாவது "இசையியல் வல்லுநர். இசை எங்கிருந்து வருகிறது என்கிற கேள்விக்கு பதிலை கொடுத்தவர் ஆபிரகாம் பண்டிதர்.
(in quote )வரலாற்று புத்தகங்கள் சொல்லுகின்ற "சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கர்நாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார். இன்றைய ராகங்கள்தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார். ராகங்களை உண்டு பண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றை பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கிக் காட்டினார். அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், தமிழிசையே வடக்கே இந்துஸ்தானி இசை என்ற பெயரில் விளங்குகிறது என்று நிரூபித்தார். 1916ம் ஆண்டு, மார்ச் 20 முதல் 24 வரை பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்குச் சென்று தன் முடிவுகளைப்பற்றி உரையாற்றினார். இவரது கண்டுபிடிப்புகளை இவரது இரு மகள்கள் வீணையில் இசைத்துக் காட்டி நிரூபித்தனர்"
அவ்வளவுதான்... எந்த இசையை பிறப்பின் அடிப்படையில் ஒருவர் கற்று கொள்ள வேண்டும் இன்னொருவர் கற்றுக்கொள்ள கூடாது என்று இந்த சாதிய சமூகம் தீண்டாமையை திணித்ததோ அந்த இசையை அக்குவேர், ஆணிவேராக பிரித்து எல்லாமே தமிழ் மரபு இசையில் இருந்துதான் எடுக்கப்பட்டது என்று உண்மையைப் போட்டு உடைத்தார் ஆபிரகாம் பண்டிதர் .
அவரை யாரும் அப்பொழுது எதிர்க்கவில்லை; ஏனென்றால் அவர் எல்லாவற்றையும் ஆதாரத்தோடு நிரூபித்தார். என்னை பொறுத்தவரை ’கருணாமிர்த சாகரம்’ எனபது நூலுலகத்து பெரியார்..! எப்படி பார்ப்பனியத்தை பெரியார் பகுத்தறிவின் மூலம் உடைத்தாரோ அப்படியே கார்நாடக சங்கீதம் எனும் தேவா சங்கீதத்தின் உண்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார் பண்டிதர்.
எப்படிப் பார்த்தாலும், “தமிழ்நாட்டில் இசை என்று வரும்போது சமய பாகுபாடில்லாமல் சாஸ்திரிய சங்கீதத்தை வளர்க்கவேண்டும், அதற்கு தமிழ் வடிவம் கொடுக்க வேண்டும், அதை பாமரருக்கும் கொண்டு செல்ல வேண்டும்” என்று இம்மூவர் மட்டுமல்ல தமிழகத்தி சேர்ந்த ஹிந்து ,முஸ்லீம் ,கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள் என்று பலர் தொண்டாற்றி இருக்கின்றனர் .
இசை என்பது இயற்கை. எப்படி ஒரு மரத்திற்கு மதம், சாதி என்கிற அடையாளம் இல்லையோ அதே போல்தான் இசைக்கும். யார் கீழே நின்றாலும் மரம் நிழல் கொடுக்கும், உன்ன கனி கொடுக்கும். இசையும் அப்படிதான், கற்றவரின் கையில் விளையாடும் அழகு குழந்தை இசை.
அதற்கு மத வேறுபாடு, ஜாதிய வேறுபாடு, இன வேறுபாடு, பாலின வேறுபாடு கிடையாது. நல்ல இசை மனிதனின் வன்மத்தை குறைக்கும் சக்தியுடையது என்று வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மருந்தாகும் இசையை யார் கேட்பது, யார் பாடுவது என்று வன்மத்தோடு நிர்ணயிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது..?
பிறப்பின் அடிப்படையில்தான் அது வருமென்றால் நீங்கள் ஏன் அசைவம் உண்ணும் கிறிஸ்தவனின் கண்டுபிடிப்பான வயலினை உங்கள் இசையோடு இணைத்து கொண்டீர்கள்..?
வெளிநாட்டில் உருவான இசைக் கருவிகளை உங்கள் கார்நாடக கச்சேரிகளில் உபயோகிக்க கூடாதென தீர்ப்பு வந்தால் நீங்கள் என்ன ஆவீர்கள்..? வெறி கொண்டவர்களுக்கு இசை எதற்கு..? இந்த ஆணவத்துக்கெல்லாம் தமிழிசையை தூசி தட்டி வெளிக்கொணருவதே தீர்வு என்று உணருகிறோம் இந்த தருணம். இனி தமிழ் சீறிப் பாயும்..!
-ஷாலின் மரியா லாரன்ஸ்

கருத்துகள் இல்லை: