செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன்; செப்.1 பொதுக்குழு!


டிஜிட்டல் திண்ணை:  தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன்; செப்.1 பொதுக்குழு!
மின்னம்பலம்: “அறிவாலயத்தில் அவசர செயற்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்து எல்லோரும் எதிர்பார்த்து முன்வைக்கும் கேள்வி ஸ்டாலின் எப்போது தலைவராகிறார் என்பதுதான். அதற்கான நாளை குறித்துவிட்டார் ஸ்டாலின். செப்டம்பர் முதல் தேதி கட்சியின் பொதுக்குழுவை கூட்டி அதிகாரப்பூர்வமாக தலைவராக பொறுப்பேற்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவி காலியானால் அந்த பதவியை 60 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும் என்பது கழகத்தின் விதி. அதனால், செப்டம்பர் முதல் தேதி என்பது சரியாக இருக்கும் என ஸ்டாலின் நினைக்கிறார்.
கலைஞருக்குப் பிறகு அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மற்ற பொறுப்புகளுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஸ்டாலின் தற்போது செயல் தலைவர் மற்றும் பொருளாளர் என இரண்டு பதவிகளை வகிக்கிறார். செயல் தலைவர் என்ற பதவி ஸ்டாலினுக்காகவே உருவாக்கப்பட்டதுதான். அவர் தலைவர் ஆகும் பட்சத்தில் அந்த பதவியே கட்சியில் தேவைப்படாது. அடுத்து அவர் வகிக்கும் பொருளாளர் பதவியை வேறு ஒருவருக்கு கொடுத்தாக வேண்டும். அதாவது பொருளாளர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

ஸ்டாலினிடம் இது சம்பந்தமாக பேசியவர்கள், ‘முன்பு சாதிக் பாட்ஷா பொருளாளராக இருந்தார். அவர் இறந்த சமயத்தில், யாரை பொருளாளராக ஆக்கலாம் என ஆலோசனை நடந்தது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளாராக இருந்த நாஞ்சில் மனோகரனை பொருளாளர் ஆக்கலாம் என வீரபாண்டி ஆறுமுகமும், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனும் கலைஞரிடம் சொன்னார்கள். ஆனால், நாஞ்சில் மனோகரன் அதற்கு சம்மதிக்கவில்லை. ‘கணக்கு வழக்கு பார்க்கும் வேலை எனக்கு சரி வராது. நான் இப்படியே ஊர் ஊராகப் போய் பேசிட்டு இருந்துடுறேன். பொருளாளர் பதவியை வேறு ஒருத்தருக்கு கொடுங்க. ஆனால், கட்சியில் தலைவர், பொதுச் செயலாளருக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச் செயலாளராக என்னுடைய பெயர்தான் வர வேண்டும். அதற்கு அடுத்த நிலையில்தான் பொருளாளர் இருக்க வேண்டும்.’என சொன்னார். அதை கலைஞரும் ஏற்றுக் கொண்டார்.
பொருளாளராக யாரை நியமிக்கலாம் என அடுத்து யோசித்தபோது, தலைமை நிலைய செயலாளராக இருந்த ஆற்காடு வீராசாமியை கொண்டு வரலாம் என கலைஞர்தான் முடிவெடுத்தார். அதற்கு எல்லோருமே சம்மதம் சொன்னார்கள். நாஞ்சிலாருக்கு அடுத்து தன்னுடைய பெயர் வருவதில் எந்த வருத்தமும் இல்லை என ஆற்காடு வீராசாமியும் சொல்லிவிட்டார். அவரை பொருளாளராக நியமித்த பிறகு தலைமை நிலைய செயலாளர் பதவி காலியாக இருந்தது. அந்த இடத்தில் நியமிக்கப்பட்டவர்தான் துரைமுருகன். இப்போது முதன்மை நிலைய செயலாளராக இருக்கிறார். அந்த கணக்குப்படி துரைமுருகனை பொருளாளராக நியமிக்கலாம் எனவும் பேச்சு வந்தது. துரைமுருகனுக்கும் அந்த ஆசை உண்டு.
ஆனால், பொருளாளராக ஆக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இன்னொருவரும் உண்டு. அவர், ஸ்டாலின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான எ.வ.வேலு. இதுபற்றியும் பேச்சு வந்தபோது, ‘வேறு கட்சியில் இருந்து வந்த ஒருவரை எப்படி பொருளாளர் ஆக்குவீங்க. நம்ம கட்சியில் இல்லாதவங்களா?’ என ஸ்டாலினிடம் சிலர் கேட்டதாக சொல்கிறார்கள். அதன் பிறகு துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் ஐ.பெரியசாமி பெயரும் பொருளாளர் பதவிக்கு அடிபட்டது.
கடைசியில் ஸ்டாலினோ, முன்பு இப்படி ஒரு சிக்கல் வந்தபோது தலைவர் கலைஞர் எப்படி தலைமை நிலைய செயலாளராக இருந்த அண்ணன் ஆற்காட்டாரை நியமித்தாரோ அதேபோல இப்போதும், நாம் முதன்மை செயலாளர் துரைமுருகன் அண்ணனை நியமிப்பதே சரியாக இருக்கும் என சொல்லிவிட்டாராம். அதனால், பொருளாளர் துரைமுருகன் தான் என்பது உறுதியாகிவிட்டதாக சொல்கிறார்கள்.
பொதுச் செயலாளராக இருக்கும் பேராசிரியர் அன்பழகனுக்கு வயதாகிவிட்டதால், அவருக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று கூட பேச்சு வந்திருக்கிறது. இது சம்பந்தமாக பேராசிரியரிடமும் சிலர் பேசி இருக்கிறார்கள். அவர் எந்த பதிலும் சொல்லாமல் யோசித்த நிலையில், ‘தலைவர் கலைஞருக்கு பொதுச் செயலாளராக இருந்தவர் பேராசிரியர் தான். நான் தலைவராக இருக்கும் போதும் பேராசிரியரே பொதுச் செயலாளராக இருந்தால் அது எனக்குப் பெருமைதான். அதனால் அவரே இருக்கட்டும்...’ என சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். பேராசிரியரும், கட்சித் தேர்தல் அடுத்து 2019 ஜூன் மாதம் வரும். அதுவரை இந்த பொறுப்பில் தொடருவேன். அதன் பிறகு பார்த்துக்கலாம் என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவிட்டாராம்.
செப்டம்பர் முதல் தேதி தலைவராக பதவி ஏற்பது உறுதியானதால், ஸ்டாலின் முதலில் தொடர்பு கொண்டு பேசியது கி.வீரமணியைதானாம். ‘நீங்க வரப் போற நாட்கள்ல வெளியூர் சுற்றுப்பயணம் போவதாக விடுதலையில் பார்த்தேன். திமுகவில் சில முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் நீங்களும் இங்கே இருக்க வேண்டும். அதனால உங்க பயணத் திட்டத்தை கொஞ்சம் மாற்றி அமைக்க முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின்.
வீரமணியும் அதற்கு சம்மதம் தெரிவித்து, தமிழ்நாடு முழுக்க நடத்த திட்டமிட்டிருந்த கலைஞருக்கான இரங்கல் கூட்டத்தை ஒத்தி வைத்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டார். ஆக, திமுகவில் செயல் தலைவர் ஸ்டாலின், கட்சியின் தலைவராக செப்டம்பர் முதல் தேதி பொறுப்பேற்கிறார்!” என்று முடிந்தது ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், அப்படியே காப்பி செய்து ஷேரும் செய்தது.
தொடர்ந்து, மெசேஜ் ஒன்றையும் டைப்பிங் செய்தது வாட்ஸ் அப்,

“அழகிரி பேசியதையோ, அவர் இனி பேசப் போவதையோ ஸ்டாலின் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லையாம். சில மாவட்டச் செயலாளர்கள் அழகிரி வருவதை விரும்பினாலும், அதை வெளிப்படையாக பேசும் சூழ்நிலையில் யாரும் இப்போது இல்லையாம். ‘அழகிரி கட்சியில் இருந்தால், ஸ்டாலின் கொஞ்சம் பயப்படுவாரு...’ என்று சில மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்குள் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலினோ, நூறு சதவிகிதம் அழகிரிக்கு கட்சியில் இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். எதிர்ப்பு, மிரட்டல் என எது வந்தாலும் சமாளிக்கலாம். ஆனால் அவருக்கு பணிந்து போகப் போவதில்லை என்பதை சொல்லிவிட்டாராம்”

கருத்துகள் இல்லை: