வெள்ளி, 1 டிசம்பர், 2017

ஒக்கி புயல் வலுவடைந்தது: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும்

மாலைமலர் :அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த ஒக்கி புயல் வலுவடைந்திருப்பதால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 சென்னை: அரபிக்கடலில் கன்னியாகுமரி அருகே  மையம் கொண்டிருந்த ஒக்கி புயல் காரணமாக, தென் தமிழகம் மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனற எச்சரிக்கப்பட்டுள்ளது.  மீட்பு மற்றும் நிவரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஒக்கி புயல் வலுவடைந்து லட்சத்தீவுகளை நோக்கி நகரத் தொடங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி அரபிக்கடலில் மினிகாயில் இருந்து (லட்சத்தீவு) சுமார் 110 கி.மீ.  வடக்கு-வடகிழக்கே மையம் கொண்டிருந்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து லட்சத்தீவு பகுதியை கடக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் லட்சத்தீவு, கேரளம் மற்றும் தமிழக பகுதிகளில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையைப் பொருத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மற்ற ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.


அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழக கடலோர பகுதிகளில் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இக்கடலோரப் பகுதிகளில் கடலின் சீற்றம் வெகுவாக இருக்கும். இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் குமரி பகுதியை ஒட்டிய கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை: