வியாழன், 30 நவம்பர், 2017

இளவரசர் ஹரி ! மேகன் மார்க்... வெள்ளை தந்தைக்கும் கறுப்பு தாய்க்கும் பிறந்தவர்


அண்மைக்காலத்தில், அரச குடும்பத்துக்கான எதிர்ப்பென்பது கணிசமானளவு அதிகரித்திருக்கிறது என்ற போதிலும், கருத்துக்கணிப்புகளின்படி, சுமார் 68 சதவீதமான பிரித்தானிய மக்கள், அரச குடும்பமென்பது நாட்டுக்கு நல்லது என்று கருதுகிறார்கள். வெறுமனே 9 சதவீதத்தினர் தான், அது கெட்டது என்கின்றனர். தவிர, இன்னும் 100 ஆண்டுகளில் அரச குடும்பமென்பது காணப்படுமா என்ற கேள்விக்கு, ஆம் என 62 சதவீதத்தினர் பதிலளிக்கின்றனர்.
தற்போதைய அரசியின் கீழ், 16 நாடுகள் காணப்படுகின்றன. நேரடியான அரசாட்சி, சம்பிரதாயபூர்வமான அரசாட்சி உள்ளிட்ட வகைக்குள் இவை உள்ளடங்குகின்றன. இந்நாடுகளின் தலைவியாக, அரசியே இருக்கிறார். அதேபோன்று, 52 நாடுகளைக் கொண்ட பொதுநலவாய அமைப்பு, இன்னமும் பலமிக்க அமைப்புகளுள் ஒன்றாக இருக்கிறது.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பிரித்தானிய அரச குடும்பமென்பது, தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது என்பதைக் காண முடிகிறது. அக்குடும்பத்துக்கான எதிர்ப்புகளைத் தாண்டி, உலகளாவிய இயங்கியலில், இன்னமும் தாக்கஞ்செலுத்துகின்ற குடும்பகமாக, இக்குடும்பம் இருக்கிறது.
மிகவும் முன்னேற்றமடைந்த நாடுகளில் அல்லது மிகுந்த சுயாதீனத்தை விரும்பும் நாடுகளில் அல்லது சமூகங்களில், அரச குடும்பத்தை அதிகமாக முன்னிறுத்தும் நடவடிக்கைகள் எதிர்க்கப்படுகின்றன. குறிப்பாக, இளவரசர் வில்லியமுக்குக் குழந்தைகள் பிறந்தபோது, அச்சம்பவத்துக்கு ஏன் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டுமென எதிர்ப்புக் குரல்கள், சில பிரிவினரிடமிருந்து எழுந்திருந்தன.
இவற்றையெல்லாம் தாண்டி, அரச குடும்பத்தின் இன்னொரு செய்தி, உலகளாவிய ஊடகங்களை எல்லாம் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. அரச குடும்பத்துக்குத் தேவையற்ற முக்கியத்துவத்தை வழங்குவதை எதிர்ப்பவராக இப்பத்தியாளர் இருந்தாலும் கூட, தற்போதைய செய்திக்கு முக்கியத்துவம் வழங்குவதில் தவறில்லை என்பது தான், இப்பத்தியாளரின் வாதமாக இருக்கிறது.
இளவரசர் சார்ள்ஸின் மகனான இளவரசர் ஹரி, திருமண நிச்சயதார்த்தத்தை மேற்கொண்டிருக்கும் செய்தி தான் அது. இளரவசர் ஹரியின் சகோதரர் வில்லியமுக்குக் குழந்தைகள் கிடைக்கும் போது, அதை ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கிச் செய்தி வெளியிட்டால் தவறு, ஆனால் இளவரசர் ஹரியின் திருமண நிச்சயதார்த்தம் மாத்திரம் முக்கியமானதா என்ற கேள்வி எழலாம். நியாயமான கேள்வி. ஆனால், இளவரசர் ஹரி, யாரைத் திருமணம் முடிக்கப் போகிறார் என்பதில் தான், இது ஏன் முக்கியமானது என்பதே வெளிப்பட்டு நிற்கிறது.

இளவரசர் ஹரியைத் திருமணம் முடிக்கப் போகும் பெண்ணின் பெயர், மேகன் மார்க்கில். ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை இவர். பெயரில் ஒன்றும் புதுமை இல்லைத் தான், ஆனால் பெண்ணில் தான் இருக்கிறது.
முதலாவதாக, இவர் வெள்ளையினப் பெண் கிடையாது. வெள்ளையினத் தந்தைக்கும் கறுப்பினத் தாய்க்கும் பிறந்தவர் இவர். இவரைப் போன்றவர்களை, கலப்பினத்தவர்கள் என்று கூறுவார்கள். பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில், கலப்பினப் பெண்ணொருவரை, இளவரசர் ஒருவர் மணமுடிக்கப் போகும் சந்தர்ப்பம், இதுதான் முதலாவதாக இடம்பெறப் போகிறது.
இரண்டாவதாக, மேகன் மார்க்கில், ஏற்கெனவே திருமணம் முடித்து, விவாகரத்துப் பெற்ற ஒருவர். இளவரசர் ஹரியை விட, 3 வயது மூத்தவர். இந்த இரண்டு விடயங்களும் தான், இத்திருமணத்தை முன்னேற்றகரமான ஒன்றாக மாற்றுகின்றன.
இதுவரை அப்படியான திருமணங்களே நடந்ததில்லையா, இதை மாத்திரம் எதற்காகத் தூக்கிப் பிடிக்க வேண்டும்? அரச குடும்பம் செய்கிறது என்பதற்காக, சாதாரணமான விடயங்களுக்காகவும் பாராட்டுகளையும் அதிகரித்த கவனத்தையும் வழங்குவது, அவர்களுக்கு விசேடமான இடத்தை வழங்குவது போலாகும் என்ற விமர்சனம் முன்வைக்கப்படலாம்.
அந்த விமர்சனத்துக்கான பதில், அந்த விமர்சனத்தில் தான் இருக்கிறது. இது, சாதாரணமாக ஆங்காங்கே நடக்கின்றது என்றாலும் கூட, அரச குடும்பத்தில் நடக்கும் விடயம் என்ற அடிப்படையில், உலகளாவிய கவனம், அதன் மீது காணப்படும், அதனால் இவ்விடயங்கள் மேலும் பொதுவானவையாக மாறும் என்பது தான், இத்திருமணத்தை வரவேற்க வேண்டிய தேவையாக இருக்கிறது.
இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி, ஏராளமான தெற்காசிய நாடுகளிலும் சரி, “சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்” என்ற சொற்றொடர்களின் உருவாக்கத்தின் பின்னால், இதே பிரித்தானிய அரச குடும்பம் தான் இருக்கிறது என்பதை, நாம் அனைவரும் அறிவோம். பிரித்தானியாவின் கொலனித்துவத்தின்போது, எமது நாடுகளின் வளங்களைச் சுரண்டிய அவர்கள், தமது கலாசாரத்தையும் மதத்தையும் பழக்கவழக்கங்களையும் எங்களிடத்தில் விட்டுச் சென்றனர். அதில் மிக முக்கியமானதான ஒன்றாக, “வெள்ளைத் தோல் என்பது உயர்ந்தது. கறுப்புத் தோல் என்பது தாழ்ந்தது” என்பது முக்கியமானது.
இன்றைக்கு வரைக்கும், இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும், தோலை வெள்ளையாக்கும் உற்பத்திப் பொருட்களுக்கு மிகப்பெரிய சந்தை இருப்பதற்கு, கொலனித்துவ ஆட்சியில் விதைக்கப்பட்ட “வெள்ளைத் தோல் சிறந்தது” என்ற கருத்தோட்டம் தான் காரணம்.
இந்நிலையில் தான், அதே “தூய வெள்ளை இனத்தில்”, கலப்பினப் பெண்ணொருவர் வாழ்வதென்பது, கொலனித்துவச் சிந்தனைகளை இன்னமும் விதைத்துக் கொண்டிருக்கும் நபர்களின் முயற்சிகளுக்கு, முக்கியமான எதிர்ப்பாக அமையும்.
இளவரசர் ஹரி, அடுத்த அரசராகுவதற்கு, தற்போது இருக்கும் அரசர் உட்பட 5 பேராவது இறக்க வேண்டிள்ள நிலையில், கலப்பின அரசியொருவர் உருவாகுவதற்கான வாய்ப்புக் கிடையாது என்றே கூறலாம். ஏனென்றால், 2ஆவது இடத்திலுள்ள இளவரசர் வில்லியம், 1984ஆம் ஆண்டில் பிறந்தவர். 3ஆவது இடத்திலுள்ள இளவரசர் ஜோர்ஜ், 2013ஆம் ஆண்டில் பிறந்தவர். 4ஆவது இடத்திலுள்ள இளவரசரி சார்லட், 2015ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர்களின் பின்னர் தான், 1984ஆம் ஆண்டில் பிறந்த இளவரசர் ஹரி இருக்கிறார். எனவே, அரசர் ஹரி என்பதற்கான வாய்ப்பு, மிக அரிதாகவே உள்ளது.
ஆனால், இளவரசியாகக் கலப்பினத்தவர் ஒருவர் இருப்பது, நிச்சயமாகவே உதவும். அதுவும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கான பிரசாரங்களிலும் அதன் பின்னரான கருத்துகளிலும், “உண்மையான பிரித்தானியாவுக்குச் சொந்தமானவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி, வெள்ளையினத்தவரே பிரித்தானியாவில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் அதிகரிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. உலகம் முழுவதிலும் அதிகரிக்கும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சியின் ஓர் அங்கமாகவே இது உள்ளது.
இந்நிலையில் தான், இளவரசியாகக் கலப்பினத்தவர் ஒருவர் வருவதென்பது, சிறுபான்மையினர் மீதான கவனத்தை அதிகரிப்பதற்கு உதவக்கூடும். அவர்களை வேண்டா விருந்தாளிகள் போன்று, ஓர் ஓரத்தில் தள்ளிவைப்பது, சிறிதளவுக்காவது தவறெனத் தோன்றக்கூடும்.
அதேபோல், அவர் நடிப்புப் பின்புலத்தைக் கொண்டவர் என்பதால், ஹொலிவூட்டிலும் சரி, பிரித்தானியத் திரைப்படங்களிலும் சரி, கறுப்பினத்தவர்களுக்கும் கலப்பினத்தவர்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களுக்கும், சிறிதளவாவது முக்கியத்துவம் வழங்கப்படும் வாய்ப்பை, எதிர்காலத்தில் பார்க்கக்கூடியதாக இருக்கலாம். இதுவும், முக்கியமான ஒரு விடயமாகும்.
அடுத்த விடயமாக, இவர் விவாகரத்துப் பெற்றவர் என்பதும், அதிகமாகக் கவனிக்கக்கூடியது. மேலைத்தேய நாடுகளில், விவாகரத்துப் பெற்றவர்கள் மீளவும் திருமணம் முடிப்பதென்பது வழக்கமென்றாலும், அரச குடும்பத்தில் அது பெருமளவுக்கு வழக்கமாக இருந்திருக்கவில்லை. அதுவும், முதலாவது திருமணமாக, விவாகரத்துப் பெற்ற ஒருவரை, இளவரசர் ஒருவர் திருமணம் முடிப்பதென்பது, அண்மைக்கால வரலாற்றில் அறிந்திராத ஒன்றாகும்.   இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில், விவாகரத்துப் பெற்ற பெண்கள், சமூகத்தால் ஒரு வகையில் ஒதுக்கப்படும் வரலாற்றைப் பார்த்துவந்திருக்கிறோம். சமூகத்தின் இந்த வகையான நடவடிக்கை காரணமாக, விவாகரத்துப் பெற வேண்டிய திருமணங்களிலிருந்து கூட வெளியேறாமல், ஏராளமான பெண்கள், தங்களது வாழ்க்கையைத் தொலைத்ததையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.
ஆனால், மேகன் மார்க்கிலுக்குக் கிடைத்திருக்கும் அங்கிகாரமென்பது, தவறான அல்லது பொருந்தாத் திருமணத்தில் காணப்படும் பெண்கள், அதிலிருந்து வெளியேறுவதென்பது, எந்த வகையிலும் அவர்களைத் தவறானவர்களாக மாற்றப் போவதில்லை என்பதையும், விவாகரத்துக்குப் பின்னரான வாழ்க்கை என்பது, சுபீட்சமானதாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதையும் காட்டிநிற்கிறது.
விவாகரத்து விடயத்தில், பெண்களை மதிப்பதற்கும், அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கும், தமிழ்ச் சமூகம் போன்ற பழைமைவாதச் சமூகத்துக்கான உந்துதலாக, இவ்வாறான திருமணங்கள் அமைய வேண்டுமென்பது தான், முன்னேற்றத்தை விரும்புவோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே, அரச குடும்பத்தை வெறுப்பவராக நீங்கள் இருந்தாலும், இளவரசர் ஹரிக்கும் மேகன் மார்க்கிலுக்கும் இடையில் இடம்பெறவுள்ள திருமணத்தை, இருகரம் கூப்பி வரவேற்பதிலும் அதைக் கொண்டாடுவதிலும் பின்னிற்கத் தேவையில்லை என்பது தான், இங்கு சொல்ல வேண்டிய விடயமாக இருக்கிறது.
tamilmirro.lk

கருத்துகள் இல்லை: