செவ்வாய், 28 நவம்பர், 2017

கலைஞர் - விபிசிங் நட்பு... பிடல் - சே குவேரா நட்பை போன்றது

Sankar Ganesh : வி பி சிங் அவர்களின் ஜனமோர்ச்ச்சா, லோக்தளம், ஜனதா கட்சி உள்ளிட்ட காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலையில் இருந்த பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதாதளம் கட்சி உருவாகி அக்கட்சியின் தலைவர் ஆகிறார் வி பி சிங். ஆனால் ராஜீவ் காந்தியை தோற்கடிக்க வேண்டுமானால், அதற்கு அசாத்திய பலம் வேண்டும். கலைஞரை தொடர்பு கொள்கிறார் வி பி சிங்! என் டி ராமாராவ் தலைமையிலான தெலுங்கு தேசம், அசாம் கண பரிஷத் உள்ளிட்ட தென்னிந்திய
வடகிழக்கு கட்சிகள், இடதுசாரிகள், மற்றும் வட இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளுடன் விபி சிங்கை பேச சொல்கிறார் கலைஞர், அறிவுரை மட்டும் வழங்காமல் தானும் களத்தில் இறங்கி தேசிய முன்னணி அமைக்க உதவுகிறார் கலைஞர். ஆனாலும் விபி சிங் அவர்களுக்கு காங்கிரசை வீழ்த்த இம்முயற்சி பலனளிக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. தேசிய முன்னணி அமைந்தவுடன் சந்தித்த முதல் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல். ஆம்! தேசிய முன்னணி கூட்டணியின் முக்கிய கட்சியான திமு கழகம், ஜனதாதளம், இடதுசாரிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றனர். தமிழக பொதுத்தேர்தலை தன் தன்மான பிரச்சனையாக நினைக்கிறார் ராஜீவ். வி பி சிங் மற்றும் கலைஞரை தோற்கடித்து தேசிய முன்னணியை கருவிலே கலைத்து விடலாம் என தப்பு கணக்கு போடுகிறார் ராஜீவ். சித்தப்பா நடராஜன் இந்த சூழலை சரியாக பயன்படுத்துகிறார்.
ஜெ-ராஜீவ் இருவரும் ஆழமான நட்பு கொண்டவர்கள். ஜானகி அணிக்கு தான் ஆதரவு என நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முந்தைய நாள் இரவு வரை சொல்லி, வாக்கெடுப்பு நாளில் கை விரித்து, அதிமுக(ஜா) அணி ஆட்சியை கலைக்க வைத்தது அந்த நட்பு தான்.
பிற்பாடு சின்னத்திற்காக இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தில் சண்டையிட்டு கொள்கையில் அறிவிக்கப்பட்ட பொது தேர்தல் அது. சித்தப்பா, ஜெ அவர்களை அணுகி, ராஜீவ் நட்பை பயன்படுத்தி காங்கிரஸ் மிடமிருந்து பொருளாதார உதவிகளை கேட்க சொல்கிறார். ஒருவேளை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிட்டாவிட்டால், காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்தால் அதிமுக(ஜெ), காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் என ராஜீவிற்கு வலை விரிக்க சொல்கிறார் சித்தப்பா! ராஜீவும் விசயம் தெரியாமல், அதிமுக(ஜெ) வை 'மநகூ' என நினைத்து திரைமறைவில் அத்தனை உதவிகளும் செய்கிறார். அந்த தேர்தலில், ஜெ அணியுடன் ராஜீவ் வெளிப்படையாக கூட்டணி அமைக்காததன் காரணம்,
1) எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் அரசியல் பிரவேசம் அதனால் ஏற்படும் அனுதாபம். ஜானகி உடன் கூட்டணி அமைத்தால் பயன் ஜானகிக்கு. ஜெ உடன் கூட்டணி அமைத்தால், ஜானகி கண்ணீர் ஜெவை மட்டுமில்லாமல் காங்கிரசையும் அழித்துவிடும். ( எம்ஜிஆர்-ஜானகி இணையை விட எம்ஜிஆர்-ஜெ 'திரை இணை' தான் மக்களிடத்தில் பிரபலம் என்ற கள அரசியலை அவர் மறந்துவிட்டார் )
2) எம்ஜிஆர் இல்லை, திமுக முடிந்துவிட்டது. இனி காங்கிரஸ் ஆட்சி தான் என்ற அபார நம்பிக்கை. முன்னெச்சரிக்கையாக காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டை பிரிப்பதற்காக அதிமுக(ஜெ) அணிக்கு சில பல உதவிகள் செய்கிறார்.
இருந்தாலும் போபர்ஸ் மற்றும் வி பி சிங் - கலைஞர் கூட்டணி ராஜீவ் வயிற்றில் புளியை கரைக்கிறது. இப்படி பல அரசியல் பரிசோதனைகளின் கூடம் அந்த 89 பொது தேர்தல். ராஜீவ் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் சுற்றி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். மனைவி சோனியாவுடன் கிராமங்களில் ஜீப் பயணம், குடிசையில் புகுந்து கூழ் குடிப்பது என விபி சிங் மற்றும் கலைஞரை தோற்கடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து பார்க்கிறார்.
வி பி சிங் மன குழப்பத்துடன் தமிழக பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். தேசிய முன்னணி வெற்றி பெறுமா? என்கிற தயக்கம்.
கிட்டத்தட்ட முதன் முதலில் பொது தேர்வு எழுத போகும் மாணவனின் மன நிலையில் தான் அன்றிலிருந்தார் விபிசிங்.
'நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்! கழகம் இருக்கிறது. தமிழக தேர்தலில் வெல்வதோடு தேசிய முன்னணியை மக்களவை தேர்தலிலும் வெல்ல வைப்போம்!" என நம்பிக்கை கொடுக்கிறார்..
தேர்தல் முடிவுகள் வெளிவருகிறது. கழகம் வெல்கிறது!
13 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு திமு கழகம் ஆட்சியை பிடிக்கிறது. உதய சூரியன் உதிக்கையில் வி பி சிங் மனத்தில் உற்சாகமும் உதிக்கிறது..
#vpsingh

கருத்துகள் இல்லை: