திங்கள், 27 நவம்பர், 2017

கோவை ரகு மரணம் ... எம்ஜியார் கட்டவுட் கம்பம் மீது மோதி ... சட்டவிரோத கட்டவுட் !

தினமலர் : கோவை: கோவையில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த 'கட் - அவுட்' கம்பம் மீது மோதி இன்ஜினியர் பலியானார். இவர் பலிக்கு யார் காரணம் என சமூக வலைதளங்களில் அதிகளவில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
'கட் - அவுட்' கோவை, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி; இவரது மகன் ரகுபதி, 32. அமெரிக்காவில், மென்பொருள் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். தன் திருமணத்துக்கு பெண் பார்க்க, இரு வாரங்களுக்கு முன் கோவை வந்தவர், நேற்று, அமெரிக்கா திரும்ப திட்டமிட்டிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை, அவிநாசி சாலை, ஹோப் காலேஜ் மேம்பாலம் மீது, பைக்கில் இவர் சென்ற போது, சாலையின் நடுவில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த, 50 அடி உயர, 'கட் - அவுட்' கம்பம் மீது, எதிர்பாராத விதமாக மோதினார். நிலைதடுமாறி சாலையில் விழுந்தவர், வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.


உத்தரவு: இது, கோவை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோவையின் அனைத்து பகுதி சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த, 'கட் -அவுட்'களை அகற்ற அதிகாரிகள் உத்தர விட்டனர். விபத்து தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு போலீசார், எதிர் திசையில் லாரி ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியதாக, பரமக்குடியை சேர்ந்த, மோகன், 31, என்பவரை கைது செய்தனர். யார் காரணம்? இதற்கிடையில், 'ரகுபதி உயிரிழப்புக்கு யார் காரணம்' என, விபத்து நடந்த இடத்தை சுட்டிக்காட்டி, சமூக வலைதளங்களில் கேள்விகள் உலா வருகின்றன. இதற்கு பலரும், 'அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தான் முழு பொறுப்பு' என, தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: