செவ்வாய், 28 நவம்பர், 2017

நாச்சியார் .. ஜோதிகா மீது மேலும் ஒரு வழக்கு!


நாச்சியார் வசனம்: ஜோதிகா மீது மேலும் ஒரு வழக்கு!
மின்னம்பலம் :பெண்மையை இழிவுபடுத்தும் விதமாக நாச்சியார் படத்தில் வசனம் பேசி நடித்துள்ளதாக ஜோதிகா மீது கரூர் மாவட்டக் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தியக் குடியரசு கட்சி சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலா இயக்கத்தில் காவல் துறை அதிகாரியாக ஜோதிகா நடித்துள்ள படம் நாச்சியார். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் திருடனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் நவம்பர் 15ஆம் தேதி யூடியூப்பில் வெளியானது. இந்த டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் ஆபாச வசனம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இதையடுத்து பல பெண்ணிய அமைப்புகள் இயக்குநர் பாலா மற்றும் ஜோதிகாவுக்கு எதிராக குரலெழுப்பத் தொடங்கினர். அது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் கோவை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா மற்றும் ஜோதிகா மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று (நவம்பர் 28) விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், ராஜன் கூறியுள்ள அதே விஷயத்தைக் காரணமாகக் கூறி இந்தியக் குடியரசு கட்சி சார்பில் அதன் மாநில அமைப்பாளர் பாண்டியன் என்பவர் நேற்று ஜோதிகா மற்றும் பாலா மீது கரூர் மாவட்டக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “இந்திய தண்டனைச் சட்டம் 294(பி), ஐ.டி. சட்டம் 2015 ஆகிய பிரிவுகளின் கீழ் பாலா, ஜோதிகா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை மாஜிஸ்திரேட் பாக்கியம் முன்னிலையில் நாளை (நவம்பர் 29) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: