சனி, 14 அக்டோபர், 2017

இஷ்ரத் ஜஹான்: நீதிபதி ஜெயந்த் படேல் – வழக்கறிஞர் துஷ்யந்த் தவே-வைப் பழி வாங்கும் மோடி அரசு !

வினவு :பல்கலைக் கழகங்கள், வரலாற்று ஆய்வு நிறுவனங்களில் தொடங்கி நீதிமன்றங்கள் வரை எல்லா அமைப்புகளிலும் காவிப்படையினரை நிரப்புவதன்மூலம் மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் நடைமுறையில் இல்லாமல் ஆக்கும் திசையில்தான் மோடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்திருக்கிறது.
குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் என்ற இளம் பெண்ணை போலி மோதல் படுகொலை செய்த காவல் துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நேர்மையான நீதிபதி  ஜெயந்த் படேல் தலைமை நீதிபதியாகிவிடாதபடி மத்திய அரசால் பழிவாங்கப்பட்டதையும், அதை தட்டிக்கேட்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் துஷ்யந்த் தவே-விற்கு பார் கவுன்சில் நோட்டிஸ் அனுப்பி மிரட்டுவதையும் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 10.10.2017 ‍ செவ்வாய்கிழமையன்று மதியம் ஒரு மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் நீதிமன்றங்களை காவிமயமாக்க விரும்பும் இந்துத்துவ கும்பலை அம்பலப்படுத்தும் வகையில் வழக்கறிஞர்கள் மத்தியில் பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.

சென்னை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி “ஜெயந்த் பட்டேல்” ராஜினாமா சொல்லும் செய்தி என்ன ?
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது நிலையில் இருந்த குஜராத்தைச் சேர்ந்த நீதிபதி ஜெயந்த் படேல் கடந்த செப்டம்பர் மாதம் 25 -ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.கே. முகர்ஜி பணி மூப்பு அடையும் நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாகவோ அல்லது பொறுப்பு தலைமை நீதிபதியாகவோ பொறுப்பேற்க வேண்டிய இவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு 3-வது நிலை நீதிபதியாக பணிமாற்றம் செய்த உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் உத்தரவை ஏற்க முடியாமல் ராஜினாமா செய்துள்ளார் நீதிபதி பட்டேல்.

நீதிபதி “ஜெயந்த் படேல்”
உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் உத்தரவு முறையற்றது என்று நியாயமானதொரு விமர்சனத்தை முன்வைத்ததற்காக, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே அவர்களுக்கு விளக்கம் கோரும் நோட்டீசு அனுப்பியிருக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில்.
குஜராத் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்கள், நீதிபதி ஜெயந்த் படேலுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கடும் கண்டனத்தை பதிவு செய்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்துள்ளன. தமிழகத்தில் ஜாக்(JAAC) சார்பில் தமிழகமெங்கும் ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பு நடைபெற்றுள்ளது.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் அசிம் பாண்டியா, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் கொலீஜிய நடைமுறையில் உள்ள ரகசிய முறை, அரசமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை வெற்றுக் காகிதமாக ஆக்கியுள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். படேலின் இந்த மாற்றல் உத்தரவை உச்ச நீதிமன்ற கொலீஜியம் எந்த அடிப்படையில் எடுத்தது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பதை மனுவாக தயாரித்து உச்சநீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பியும் வைத்துள்ளார். இதற்கு எந்த பதிலும் இல்லை.
நீதிபதி ஜெயந்த் படேலுக்கு அநீதி இழைக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2001 -இல் நீதிபதியாக நியமனம் பெற்று, 2015 -ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். அவர் தலைமை நீதிபதியாக ஆக்கப்பட வேண்டிய சமயத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மூன்றாம் நிலை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். சமீபத்தில் உச்சநீதிமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 5 நீதிபதிகளில் 4 பேர் இவருக்கு இளையவர்கள். தற்போது கொலீஜியத்தால் 9 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதியாக பணி உயர்த்தப்பட்ட 9 பேரும் இவருக்கு இளையவர்கள். இப்படி தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டது மட்டுமின்றி, இன்னும் 10 மாதங்களில் அவர் ஓய்வு பெறவிருக்கும் சூழலில், அவரை அவமதிக்கும் விதத்தில் இந்த மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
படேல் இவ்வாறு குறி வைத்து தாக்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது. 2004 -ம் ஆண்டில் இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணும் சில தீவிரவாத இளைஞர்களும் மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் என்று கூறி, அவர்களை போலி மோதலில் கொலை செய்தது குஜராத் போலீஸ். அன்று குஜராத் மோடி அரசு இந்த வழக்கை அமுக்கிவிடுவதற்கு செய்த முயற்சிகளை முறியடிக்கும் விதத்தில், இவ்வழக்கை சிபிஐ -க்கு மாற்றி உத்தரவிட்டது மட்டுமின்றி, வழக்கு விசாரணையையும் கண்காணித்தார் அன்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய ஜெயந்த் படேல். பல ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிறை சென்றனர். மோடி மற்றும் பாஜக-வின் சதித்தனமான செயல்பாடுகள் அம்பலமாகின. அதற்கு பழிவாங்கதான் இந்த நடவடிக்கை.

வழக்கறிஞர் துஷ்யந்த் தவே
இது தொடர்பாக துஷ்யந்த் தவே தெரிவித்திருக்கும் கருத்துகள் நம் அனைவரின் கவனத்துக்கும் உரியவை. “நீதிபதி ஜெயந்த் படேலின் பெயர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியலில் இருந்தால், எந்தக் கோப்பும் நகராது என்று முன்னாள் தலைமை நீதிபதிகளிடம் பிரதமர் மோடி தொடர்ந்து கூறிவந்திருக்கிறார். செப் 15 அன்று கூடிய கொலீஜியம், ஜெயந்த் படேலை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றல் செய்வது என்று முடிவு எடுத்த பின்னர்தான் பல உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்கள் அரசால் ஏற்கப்பட்டிருக்கின்றன. “கொலீஜியம் சுதந்திர நீதித்துறை பற்றி இடி முழக்கமாக பேசலாம். ஆனால் நடப்பது வேறு. அமித் ஷா-வை உச்சநீதிமன்ற வழக்குகளில் காப்பாற்றியவர்களுக்கு நல்ல சன்மானம் கிடைக்கிறது. நீதிபதி சதாசிவம் கவர்னராகிவிட்டார். நீதிபதி சௌகான் சட்ட ஆணையத்தின் தலைவராகிவிட்டார்”
“அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தற்கொலை குறிப்பு மற்றும் CBI வழக்குகளில் முன்னாள் தலைமை நீதிபதி கெஹர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தன. அவர் சமரசமாகிவிட்டார். ஆனால் கொலீஜியத்தில் உள்ள மற்ற நான்கு நீதிபதிகளும் இப்படி முடிவு எடுப்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.” என்று கூறியிருக்கிறார் துஷ்யந்த் தவே. தான் கூறியிருக்கும் அனைத்தும் உண்மை என்றும், உண்மையை சொல்வது எப்படி நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் தவே.
நேற்று தமிழக வழக்கறிஞர்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் இன்று துஷ்யந்த் தவே -வுக்கு நடந்திருக்கிறது. உண்மை பேசும் வழக்கறிஞர் சமூகத்தை ஒடுக்குவதற்குத்தான் 34(1) சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அன்று நாம் போராடியது வழக்கறிஞர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, மக்களின் நீதி பெறும் உரிமையைப் பாதுகாப்பதற்காக!
இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணின் மரணத்துக்கு நீதி வழங்க முயன்ற குற்றத்துக்காகத்தான் நீதிபதி படேல் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இது அவருக்கு மட்டும் இழைக்கப்பட்டுள்ள அநீதி அல்ல. மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி.
மோடி அரசின் கீழ் படேல் மட்டும் இவ்வாறு தண்டிக்கப்படவில்லை. குஜராத் இனப்படுகொலையில் அன்று முதல்வராக இருந்த மோடியின் மீது கிரிமினல் குற்றம் சாட்டுவதற்கு முகாந்திரம் இருக்கிறது என்று கருத்து தெரிவித்தார் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம். உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமிகஸ் கியூரே என்ற முறையில் நேர்மையாக தனது கருத்தை தெரிவித்த காரணத்தினால், அவரை உச்சநீதிமன்ற நீதிபதி ஆகவிடாமல் தடுத்தது மோடி அரசு. குஜராத் படுகொலைக்கு மோடி மீது குற்றம் சொல்ல முடியாது என்று விசாரணையை முடித்த முன்னாள் சிபிஐ இயக்குநர் ராகவனுக்கு சைப்ரஸ் நாட்டு தூதர் பதவி வழங்கப்படுகிறது.
ஜார்கண்ட் மாநில அரசைக் கலைத்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தியதற்கு எதிராக தீர்ப்பளித்த குற்றத்துக்காக, ஜார்கண்ட் மாநிலத்தின் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் உச்ச நீதிமன்றத்திற்கு பணி உயர்த்தப்படவில்லை.
அதானி குழுமம் குஜராத்தில் ஏற்படுத்திய சூழலியல் பேரழிவை எதிர்த்து வழக்கு நடத்தி வென்றார் கிரீன்பீஸ் அமைப்பை சேர்ந்த பிரியா பிள்ளை. இதற்குப் பழிவாங்குவதற்காக இவருக்கு எதிராக மத்திய உளவுத்துறை கொடுத்த லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்ததற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிவ் சக்தர் டெல்லி உயர்நீதிமன்றத்திலிருந்து சென்னைக்கு தூக்கியடிக்கப்பட்டார்.
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அபே திப்சே, மாவட்ட நீதிபதியாக இருந்தபோது குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் 9 பேருக்கு தண்டனை வழங்கினார். இந்துவாக நடந்துகொள் என்று வந்த மொட்டை கடிதங்களுகெல்லாம் அஞ்சாமல் தீர்ப்பு வழங்கிய குற்றத்துக்காக ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அலகாபாத்துக்கு மாற்றல் செய்யப்பட்டார்.
நீதித்துறையை முற்றிலுமாக தனது கைப்பாவையாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் NJAC-யை திணிக்க முயன்றது மோடி அரசு. அந்த முயற்சியை உச்சநீதிமன்றத் தீர்ப்பு முறியடித்துவிட்ட காரணத்தினாலேயே நீதித்துறை சுதந்திரமாக ஆகிவிடவில்லை. NJAC என்ற ஏற்பாடு இல்லாத நிலையிலேயே நீதித்துறையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
பல்கலைக்கழகங்கள், வரலாற்று ஆய்வு நிறுவனங்களில் தொடங்கி நீதிமன்றங்கள் வரை எல்லா அமைப்புகளிலும் காவிப்படையினரை நிரப்புவதன்மூலம் மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் நடைமுறையில் இல்லாமல் ஆக்கும் திசையில்தான் மோடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்திருக்கிறது. இது நீதிபதிகளின் நியமனம் – பதவி உயர்வு – மாற்றல் குறித்த பிரச்சினை அல்ல.
இந்த நிலை தொடர்ந்தால், இஷ்ரத் ஜஹான்களுக்கு நீதி கிடைக்காது. அனிதாக்களுக்கு நீதி கிடைக்காது. நீட் தேர்வில் தொடங்கி காவிரி வரை எந்தப் பிரச்சினையானாலும் மோடி அரசு என்ன விரும்புகிறதோ அதுதான் நீதி என்ற நிலை ஏற்படும். இதை வழக்கறிஞர் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். நீதிபதிகள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் அனைவருக்கும் நாம் புரிய வைக்க வேண்டும்.
வழக்கறிஞர் துஷ்யந்த் தவே -வுக்கு தரப்பட்டிருக்கும் நோட்டீசு என்பது நம் அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் நோட்டீசு. படேலுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி என்பது நேர்மையான நீதிபதிகள் அனைவருக்கும் இழைக்கப்பட்ட அநீதி. கவுரி லங்கேஷ் என்ற வயது முதிர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளரை, அவர் தங்களை எதிர்த்து கருத்து கூறினார் என்பதற்காக கொலை செய்யவும் தயங்காதவர்கள் காவிப்படையினர்.
நீதிபதி ஜெயந்த் படேல் வெறுமனே கருத்து கூறவில்லை. இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினார். இந்துத்துவ பாசிஸ்டுகள் அவரைக் கொல்லத்தான் விரும்பியிருப்பார்கள். உயர்நீதிமன்ற நீதிபதி என்பதால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகை – மாற்றல் உத்தரவு. துஷ்யந்த் தவே-வுக்கு பார் கவுன்சிலின் நோட்டீசு.
விழித்துக் கொள்வோம்!
நீதித்துறை காவிமயமாவதை தடுப்போம்!
குஜராத், கர்நாடக வழக்கறிஞர்களோடு போராட்டத்தில் கைகோர்ப்போம்!!
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்,
சென்னை
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை. தொடர்புக்கு – 90946 66320.

கருத்துகள் இல்லை: