சனி, 14 அக்டோபர், 2017

டெங்கு - அரசுக் கட்டமைப்பின் ஒட்டுமொத்தத் தோல்வி .. மாயையும் உண்மையும்! :

காவிரி வினவு : நியூஸ் என்னும் செய்தி தொலைக்காட்சியில் ‘8 திசை’ என்னும் நிகழ்ச்சியில் நடந்த விவாதமிது. “டெங்கு: நிலவேம்பு நிவாரணமா?” என்ற பெயரில் அந்த விவாத நிகழ்ச்சியை நெறியாளர் தமிழினியன் ஒருங்கிணைத்தார்.
டெங்கு மற்றும் நிலவேம்புக் குடிநீர் ஆகியவை குறித்த இந்த விவாதத்தில் பொதுநல மருத்துவர் ராஜேந்திரன் (அலோபதி), மருத்துவர் சக்திவடிவேல் (கொசுக்கள் மற்றும் அதன் மூலம் பரவும் நோய்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்பவர், அலோபதி), குழந்தைகள் நல மருத்துவர் ரெக்ஸ் (அலோபதி), மருத்துவர் சாம்ராஜ் (சித்த மருத்துவர்) ஆகியோர் பங்கேற்றனர்.

நெறியாளர் தமிழினியன்
இந்த விவாதம் சாராம்சமாக,  நிலவேம்பு போன்ற சித்தமருத்துவ முறைகளின்  உண்மைத் தன்மை, நவீன மருத்துவத்தின் சிகிச்சை முறை, டெங்கு கொசு வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு – உடல் மாற்றங்கள், டெங்கு மரணங்களுக்கான காரணங்கள், டெங்கு பரவுவதற்கான் காரணங்கள்,  தடுப்பு மருந்து குறித்த நிலவரங்கள்  ஆகியவற்றை அறிவியல் ரீதியில் அலசியிருக்கிறது.

வாட்ஸ்அப்பில் வதந்திகளும், அறைகுறை உண்மைகளும் மக்களைக் குழப்பி வரும் நிலையில் இந்த விவாதம் பெருமளவில் டெங்கு குறித்த மாயைகளை அகற்றி உண்மைகளை எடுத்து வைக்கிறது எனலாம்.
டெங்கு கொசுக்கள் – புரளிகளும் உண்மைகளும் :
கொசுக்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் மருத்துவர் சக்திவடிவேல், டெங்கு கொசுவான ஏடிஸ் எஜீப்பியா கொசுக்கள் குறித்து பரப்பப்படும் புரளிகள் குறித்து சில விளக்கங்களை முன் வைத்தார்.
தேங்கிய நீரில் பிளீச்சிங் பவுடர் போடுவதல், ஏடிஸ் எஜிப்பியா வகைக் கொசுக்கள் வீரியம் அடைந்து அதன் வாழ்நாள் 21 நாட்களிலிருந்து 40 நாட்களாக அதிகரித்துவிட்டது என்று கூறப்படுவதில் துளியும் உண்மையில்லை என்பதையும், இந்தக் கொசுக்களுக்கும் ஆயுள் 21 நாட்கள் தான் என்றும் தெரிவித்தார். அதே போல, ஏசியில் இருந்தால் கொசு வராது, மேல்மாடிக் குடியிருப்புக்கு கொசு பறந்து வராது ஆகிய கருத்துக்கள் தவறானவை என்றார்.
ஏடிஸ் வகைக் கொசுக்கள், கொசு வகைகளிலேயே மிகவும் சோம்பேறியானவை என்றும் அது உற்பத்தியாகும் பகுதியில் இருந்து அதிகபட்சம் 100 மீட்டர் தூரம் மட்டுமே அது பயணிக்கும் என்றார். மேலும், ஏடிஸ் எஜிப்பியா வகைக் கொசுக்களின் முட்டைகள் ஒரு வருடம் வரை, அதாவது அடுத்த சீசன் வரும் வரை உயிர்ப்போடு இருக்கும் தன்மை கொண்டவை என்றும் கூறினார்.

மருத்துவர் ராஜேந்திரன்
இவ்வகைக் கொசுக்கள்  சிறு அளவில் தேங்கியிருக்கும் தண்ணீரில் கூட முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக் கூடியவை என்றும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து (ஏசி) நீர் வடியும் இடத்தில் கூட அதனால் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய முடியும் என்கிறார்.
ஒரு ஏடிஸ் எஜிப்பியா கொசு தனது வாழ்நாளில் 400 முதல் 600 முட்டைகள் வரை இடும். மற்ற மலேரியா கொசுக்களைப் போல், இவை நீரின் மேற்பரப்பில் முட்டையிடாமல், நீர் தேங்கியிருக்கும் பாத்திரம் அல்லது இதர கொள்கலனின் ஓரப் பகுதியில் முட்டையிடுக்கின்றன. இதன் காரணமாகவே அவற்றால் பல மாதங்களுக்கும் உயிர்ப்போடு இருக்க முடிகின்றது என்கிறார். இதன் காரணமாகத் தான் சமீபகாலங்களில் கோடைகாலத்திலும் டெங்குக் காய்ச்சல் வருவதைச் சுட்டிக் காட்டினார். ஆகவே திறந்து வைக்கப்படும் தண்ணீரை காலி செய்வதோடு சம்பந்தப்பட்ட பாத்திரங்களை தேய்த்து கழுவ வேண்டுமென்றார்.
சித்த மருத்துவமுறை – தீர்வைத் தருமா?
தமிழக அரசின் சுகாதாரத் துறை டெங்குவை ஒழிக்க அனைத்து இடங்களிலும் நிலவேம்புக் குடிநீர் கொடுப்பதாகவும், 45,000 சுகாராதரப் பணியாளர்கள் பணியில் இருப்பதாகவும் கூறுகிறது. அந்த நிலவேம்புக் குடிநீரை / கசாயத்தை டெங்குவிற்கு மருந்தாகவோ, தடுப்பு மருந்தாகவோ உபயோகிக்க முடியுமா? நிலவேம்புக் கசாயத்தை மட்டும் மருந்தாக எடுத்துக் கொண்டால் போதும் என சித்தமருத்துவர்களால் உறுதியாகக் கூற முடியுமா? நிலவேம்புக் கசாயத்தின் மருத்துவத்தன்மை அறிவியல் ரீதியில் சர்வதேச மருத்துவத்துறையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா ? டெங்கு காய்ச்சலுக்கான சித்த வைத்திய முறை அறிவியல்ரீதியில் பல மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டதா?  அது ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா ?   நிலவேம்புக் கசாயம் குறித்த மேற்கண்ட கேள்விகளை சித்த மருத்துவர் சாம்ராஜிடம் முன்வைத்தார் நெறியாளர்.

மருத்துவர் சாம்ராஜ்
அதற்குப் பதிலளித்த மருத்துவர் சாம்ராஜ், நிலவேம்புக் கசாயம் என்பது வெறும் நிலவேம்பு மட்டுமல்லாது வேறு சில 8 மூலப் பொருட்கள் கலந்து உருவாக்கப்படுவதே என்றார். மேலும் நிலவேம்புக் கசாயம் டெங்குவின் பாதிப்பால் குறையும் இரத்தவட்டுக்களை அதிகரிக்கிறது என்பதையும், பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை மனப்பாகு ஆகிய மருந்துகளும் இரத்தவட்டுக்களை அதிகரிக்க உதவுகிறது என்றும் கூறினார்.
நிலவேம்புக் கசாயத்தை நோயின் நிலையறிந்து தான் தாங்கள் பரிந்துரைப்பதாகவும், நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அலோபதியோடு இணைந்தே சித்தமருத்துவத்தை பரிந்துரைப்பதாகவும் சாம்ராஜ் கூறினார்.
நிலவேம்பு குறித்து அறிவியல் ரீதியில் மத்திய சித்த மருத்துவக் கழகத்தால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, அதில் வைரஸ் விரோத,  காய்ச்சல் விரோதத் தன்மைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மருத்துவத் தன்மை குறித்து, கேஸ் கண்ட்ரோல் ஸ்டடி மற்றும் பைலட் ஸ்டடி (Case control Study and Pilot Study) உள்ளிட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு அவை ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடப்ப்பட்டுள்ளன என்றார். இதற்கு அடுத்த கட்டமான ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்றார். ( இந்த ஆய்வுகளை நவீன மருத்துவத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுயேச்சையான ஆய்வு நிறுவனம் சுயேச்சையாக ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட வேண்டும்.)
நவீன மருத்துவத்தைப் போன்று (அலோபதி )போன்ற ஒரு ஆய்வு முறையும் ஆவணப்படுத்துதல் முறையும் சித்தா மருத்துவத்தில் இல்லாதது ஒரு பெரும் குறை தான் என்பதை ஏற்றுக் கொண்ட மருத்துவர் சாம்ராஜ், அதனை முறைப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுத்து வரப்படுவதையும் குறிப்பிட்டார்.
மேலும் உலக சுகாதார நிறுவனம், இரண்டு சித்த மருத்துவ மருந்துகளை அங்கீகரித்திருப்பதையும், மேலும் பல மருந்துகள் அவ்வாறு அங்கீகரிக்கப்பட ஆய்வகச் சோதனைகளும், ஆவணப்படுத்தப்படுதல்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
விவாதத்தில் சில அலோபதி மருத்துவர்கள் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்காத நிலையில் நிலவேம்பு கசாயத்தை பரிந்துரைக்க முடியாது என கூறிய பதிவுகள் காட்டப்பட்டன. விவாதத்தில் கலந்து கொண்ட அலோபதி மருத்துவர் சக்திவடிவேல், ஆராய்ச்சி இதழில் நிலவேம்பு குறித்த கட்டுரைகளை படித்திருப்பதாகவும் அதை மருந்து என்பதற்கு பதில் கூடுதல் ஊக்கச் சக்தியாக (டானிக் – வைட்டமின் போல) பயன்படுத்தலாம் என விளக்கம் அளித்தார்.
டெங்கு வந்தால் – உடனே மரணமா ?
டெங்கு வந்தால் இறப்பதற்கான வாய்ப்பு அதிகம் என மக்கள் மத்தியில் ஒரு தேவையற்ற பீதி நிலவுகிறது என்கிறார் மருத்துவர் ராஜேந்திரன். “சாதாரண காய்ச்சல் வந்தாலும் அது டெங்குவாக இருக்குமோ என பீதி அடைகின்றனர்.  மக்கள் முதலில் தைரியத்தோடு இருக்கவேண்டும். டெங்குவிற்கென்று தனிச்சிறப்பான மருந்துகள் இல்லை. ஆனால் டெங்குவிற்கு சிகிச்சை மூலம் தீர்வு இருக்கிறது என்றார். இரத்தத்தில் நீர்ச் சத்து குறைவதைத் தடுத்து நீர்ச்சத்தை அதிகரிப்பதன் மூலம் தான் டெங்குவை குணப்படுத்த முடியும் என்றார்.
மேலும் அனைத்துக் காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல. டெங்கு கொசு கடித்த நூறில் இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் வரலாம். அவர்களையும் உரிய முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். டெங்கு காய்ச்சல் ஆட்கொல்லி நோய் அல்ல என்றார்.

மருத்துவர் சக்திவடிவேல்
டெங்குக் காய்ச்சலின் போது உடலில் உள்ள இரத்தவட்டுக்கள் வெகுவாகக் குறைகின்றது. இரத்தவட்டுக்கள் 10000 -க்கும் கீழ் குறையும் போது இரத்தவட்டுக்களை வெளியில் இருந்து உட்செலுத்தப்படும். இயல்பாகவே இரத்தவட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்” என மருத்துவர் இராஜேந்திரன் கூறினார்.
குழந்தைகள் நல மருத்துவர் ரெக்ஸ் இது குறித்துக் கூறுகையில், “குழந்தைகளுக்கு இரத்தவட்டுக்களின் எண்ணிக்கை 10,000 கீழ் போகும் போது அது ‘டெங்கு அதிர்ச்சி நோய்க்குறியை’ (Dengue Shock Syndrome) வெளிப்படுத்துகிறது.
டெங்கு அதிர்ச்சி நோய்க்குறி (Dengue Shock Syndrome) என்பது இரத்தநாளங்கள் உடைந்து இரத்தம் வெளியேறுவது ஆகும். குறிப்பாக இரத்தநாளங்களில் உள்ள  நீர் வெகுவாகக் குறையும், இதனைப் போக்கவே தொடர்ச்சியாக நீராகாரங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு அதிர்ச்சி அறிகுறிகள் இரத்த வட்டுக்கள் 3000த்திற்கும் குறைவாக போகும் போது கூட ஏற்படலாம். அப்போதும் உரிய சிகிச்சை இருக்கிறது. அது கொடுக்கப்படவில்லை என்றால் இரத்தநாளங்களில் ஏற்படும் கசிவால், நீர் வெளியேறி மூளை மற்றும் நுரையீரலில் போய் சேருகிறது. இத்தகைய உள்ளர்ந்த நீர்க் கசிவு காரணமாக மரணம் ஏற்படுகிறது. குறிப்பாக இந்த நீர்க்கசிவால் இரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து விடும். அசூழலில் வெளியில் இருந்து இரத்தவட்டுக்களை உட்செலுத்துவதும் சிரமமாகிவிடும்” என்று கூறினார்.
அரசுக் கட்டமைப்பின் ஒட்டுமொத்தத் தோல்வி – டெங்கு :
டெங்குவை சரி செய்ய வீட்டிற்குள் நீர் தேக்கி வைப்பதை மட்டுமே காரணமாக அரசு கூறுகிறது. வீதியில் சாக்கடை உடைந்து ஓடுவதையும், வீதிகளில் நீர் தேங்கிக் கிடப்பதையும் மக்கள் மட்டும் சரி செய்து விட முடியாது. அதோடு டெங்குவைத் தடுப்பது சுகாதாரத்துறையால் மட்டுமே செய்யக் கூடிய காரியமும் அல்ல. பொதுப்பணித்துறை, மெட்ரோ, நெடுஞ்சாலைத்துறை, கழிவுநீரகற்றுவாரியம், போன்ற பல்வேறு அமைப்புகளும் இதில் பங்கு செலுத்த வேண்டியது உள்ளது. தற்போது இவை அனைத்தின் தோல்வியே டெங்கு பரவுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது என்றார் மருத்துவர் ரெக்ஸ். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்புப் பிரிவுகள் திறக்க வேண்டும் என்றார்.

குழந்தைகள் நல மருத்துவர் ரெக்ஸ்
மருத்துவர் இராஜேந்திரன் இது குறித்துக் கூறுகையில், டெங்கு வெகுவாக ஏழைகளுக்குத் தான் வருகிறது. ஏனெனில் அவர்களால் தான் சத்தான ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே ஏழைகள் அதிகமாக பலியாகிறார்கள்.
இந்தியாவில் ‘வகை 3’ (Type 3) இரக டெங்குக் காய்ச்சலே வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், வகை 3 , வகை 4 இரக டெங்குக் காய்ச்சலுக்கு தடுப்புமருந்துகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் அதனை நம்மால் அவ்வளவு சாதாரணமாக வாங்கி உபயோகிக்க முடியாததற்கான காரணம் அதன் விலை அதிகம் என்பது தான். 3 டோஸ்(Dose) தடுப்பு மருந்தின் விலை 207 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பிப்படி ரூ.13,443).
டெங்குவைப் பொறுத்தவரையில் நோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சையை வகை பிரித்து அதற்கான நமது மருத்துவ வரைமுறையை (medical protocol) முதல் நிலை முதல் நான்காம் நிலை வரை பிரித்து எந்த நிலைக்கு என்ன மருத்துவம் கொடுக்க வேண்டும் என நிர்ணயிக்க வேண்டும். ஆனால் இங்கு டெங்கு நோய்க்கு அரசாங்கம் இப்படிப்பட்ட வரைமுறை எதையும் வகுக்கவில்லை என்று கூறிய மருத்துவர் இராஜேந்திரனிடம், “உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவ மாநாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் இந்திய அளவில் டெங்குவிற்கு அது போன்று எதுவும் நடைபெறவில்லையே ஏன்?” என நெறியாளர் தமிழினியன் கேட்டார்.
டெங்கு சமீபமாகத் தான் வந்திருக்கிறது, அது குறித்து இனி தான் ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும் என்று கூறிய மருத்துவர் இராஜேந்திரனிடம், டெங்கு மரணத்தை ஏற்படுத்தத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன என நெறியாளர் கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட மருத்துவர் இராஜேந்திரன், “நமது நாட்டில் மருத்துவத் துறையில் ஆராய்ச்சி என்பது மிகக் குறைவு அதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறினார்.
இது டெங்குவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கான ஒட்டு மொத்தப் பிரச்சினை. இந்த வீடியோவைப் பாருங்கள்! டெங்கு குறித்த நமது கேள்விகள் பலவற்றுக்கு மருத்துவ நிபுணர்கள் விடையளிக்கிறார். அரசை எதிர்த்துப் போராடுவதோடு அறியாமையையும் எதிர்த்துப் போராடுவோம்.
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

கருத்துகள் இல்லை: