சனி, 7 அக்டோபர், 2017

சசிகலா மருத்துவ மனையில் நடராஜனை நலம் விசாரித்தார்

மாலைமலர் :பெங்களூரில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் நடராஜனை இன்று சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனையில் நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, 7 மாத சிறைவாசத்துக்குப் பிறகு நேற்று மாலை பரோலில் வெளியே வந்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தன் கணவர் நடராஜனை அருகில் இருந்து கவனிப்பதற்காக சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டிருந்தார். ஆனால், 5 நாட்கள் மட்டுமே அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது, வெளியில் எங்கும் செல்லக்கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பரோல் கிடைத்ததும் நேற்று இரவு சென்னைக்கு வந்த சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் தங்கினார்.


இன்று காலை அங்கிருந்து, தன் கணவர் நடராஜன் சிகிச்சை பெற்று வரும் பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனைக்கு புறப்பட்டார். மதியம் 12 மணியளவில் குளோபல் மருத்துவமனைக்குச் சென்ற அவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: