மின்னம்பலம் : தேசிய குடும்ப சுகாதார சர்வேயின் 4ஆம் கட்ட ஆய்வு 2015ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையில் நடைபெற்றது. இதில் குடும்ப சூழ்நிலை, சுகாதாரம், தூய்மை, கருவுறுதல், குழந்தை நலன், குழந்தைகள் இறப்பு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து, குழந்தைகளுக்கான சுகாதாரம், பெண்களின் நிலை பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இந்த சர்வேயின் மூன்றாம்கட்ட ஆய்வு 2005ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 4ஆம் கட்ட ஆய்வின் அறிக்கையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மார்ச் 1ஆம் தேதி டெல்லியில் வெளியிட்டது.
இந்த சர்வேயின் முடிவுகளை வைத்து குடும்ப சூழல், குடும்ப சுகாதாரம், கர்ப்பக்கால சுகாதாரம், மகப்பேறு நலப் பரிசோதனைகள் பற்றி ஏற்கெனவே நேற்று (அக்டோபர் 2) வெளியான கட்டுரையில் விவாதித்திருந்தோம். இக்கட்டுரையில் மேலும் சில தகவல்களைக் கொண்டு விவாதிக்கவுள்ளோம்.
மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள்:
மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2005-06ஆம் ஆண்டுக்குப் பிறகு 40 சதவிகித புள்ளிகள் உயர்ந்துள்ளது. அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தராஞ்சல், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் 40 சதவிகித புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவ மையங்களில் பெருமளவில் அறுவைசிகிச்சை மூலமாகவே பிரசவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை மூலமாகப் பிரசவிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 70 சதவிகிதத்தைக் கடந்துள்ளது.
தாயின் பள்ளிப் படிப்புக்கு ஏற்ப குழந்தை பிறப்புகள் வேறுபடுகிறது. படிப்பறிவு பெறாத தாய்மார்களில் 62 சதவிகிதப் பேர் மருத்துவ மையங்களில் குழந்தை பெற்றுள்ளனர். மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்த தாய்மார்களில் 90 சதவிகிதப் பேர் மருத்துவ மையங்களில் குழந்தை பெற்றுள்ளனர்.
தாய்மார்களின் குடும்பப் பொருளாதார நிலைக்கு ஏற்பவும் குழந்தை பிறப்புகள் வேறுபடுகிறது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களில் 60 சதவிகிதப் பேர் மருத்துவ மையங்களில் குழந்தை பெற்றுள்ளனர். பொருளாதார ரீதியாக உயர்நிலையில் இருக்கும் 20 சதவிகித குடும்பத்தைச் சேர்ந்த பெண்களில் 95 சதவிகிதப் பேர் மருத்துவ மையங்களில் குழந்தை பெற்றுள்ளனர்.
திருமண வயது:
இந்திய மாநிலங்களில் பெண்களின் திருமண வயதில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய குடும்ப நல சர்வே-4இன் முடிவுகள் கூறுகின்றன. 20 முதல் 24 வயது வரையிலான பெண்களில் 18 வயதுக்கு முன்பு திருமணமானோரின் விகிதம் தேசிய அளவில் 2005-06ஆம் ஆண்டுக்குப் பிறகு 21 சதவிகித புள்ளிகள் குறைந்துள்ளது. முக்கியமாக, சட்டீஸ்கர் மாநிலத்தில் 34 சதவிகிதப் புள்ளிகளும், ராஜஸ்தானில் 30 சதவிகிதப் புள்ளிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 25 சதவிகித புள்ளிகளும், மத்தியப்பிரதேச மாநிலத்தில் 23 சதவிகிதப் புள்ளிகளும், ஹரியானாவில் 21 சதவிகிதப் புள்ளிகளும், பீகாரில் 21 சதவிகிதப் புள்ளிகளும் குறைந்துள்ளன.
குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள்:
நாட்டிலுள்ள குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளில் 2005-06ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளன. கருத்தடை முறைகளைப் பயன்படுத்தும் நபர்களின் விகிதம் 2 சதவிகித புள்ளிகள் குறைந்துள்ளது. 20 மாநிலங்களில் இவ்விகிதம் சரிவைச் சந்தித்துள்ளது. மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் 25 சதவிகித புள்ளிகள் சரிந்துள்ளது. கோவா மாநிலத்தில் 22 சதவிகித புள்ளிகள் சரிந்துள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், ஒடிசா, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கருத்தடை முறைகளைப் பயன்படுத்தும் நபர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.
பாலின விகிதம்:
1,000 ஆண் குழந்தைகளுக்கு நிகராகப் பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கொண்டு பாலின விகிதம் கணக்கிடப்படுகிறது. 2005-06ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாலின விகிதம் 914 முதல் 919 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் 30 மாநிலங்களில், 14 மாநிலங்களில் குழந்தை பிறப்பின்போது உள்ள பாலின விகிதம் முன்னேற்றம் அடைந்துள்ளது. பாலின விகிதத்தில் கேரள மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கேரளாவில் பாலின விகிதம் 1,047 ஆக உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் பாலின விகிதம் மேகாலயாவில் 1,009 ஆகவும், சட்டீஸ்கரில் 977 ஆகவும் உள்ளது. கடைசி இடங்களில், சிக்கிம் மாநிலத்தில் 809 ஆகவும், டெல்லியில் 817 ஆகவும், ஹரியானாவில் 836 ஆகவும், பஞ்சாபில் 860 ஆகவும், ராஜஸ்தானில் 887 ஆகவும், உத்தராகண்டில் 888 ஆகவும் உள்ளது.
மொத்த பிறப்பு விகிதம்:
ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாகப் பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக்கொண்டே இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. தேசிய அளவில் 2005-06ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2.7இல் இருந்து 2.2 ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் அனைத்து 30 மாநிலங்களிலும் மொத்த பிறப்பு சரிவைச் சந்தித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 1.1 ஆகவும், அதற்கு அடுத்த இடங்களில் நாகாலாந்தில் 1.0 ஆகவும், அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் 0.9 ஆகவும், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் 0.8 ஆகவும் உள்ளது. தேசிய அளவில் 2005-06ஆம் ஆண்டுக்கும் 2015-16ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த விகிதம் 0.5 ஆகக் குறைந்துள்ளது. மொத்தமாக, 1992-93ஆம் ஆண்டுக்கும் 2015-16ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மொத்த பிறப்பு விகிதம் 1.2 ஆகக் குறைந்துள்ளது.
நன்றி: Economic & Political Weekly
தமிழில்: அ.விக்னேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக