வியாழன், 21 ஜனவரி, 2016

இயற்கை விதிகளை அறியாமல் நாம் இயற்றிய விதிகள்......

சுய சிதைவை நோக்கி மனித இனம்: பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை
Stephen Hawking says humanity is inching closer to demise, and we are to blame.
We are not going to stop making progress, or reverse it, so we have to recognize the dangers and control them. I'm an optimist, and I believe we can,"  he said.
எமது வாழ்வும் இந்த பிரபஞ்சத்தின் வாழ்வும் ஒன்றில் ஒன்று தங்கியே உள்ளன. இந்த பிரபஞ்சம் என்று நான் குறிப்பிடுவது எம்மை சுற்றி உள்ள இந்த உலகத்தைத்தான்.
எமக்கும் இந்த பிரபஞ்சதிற்கும் உள்ள இயற்கை விதிகள் ஒன்றுதான்.
எமக்கு முன்பாக நடந்து செல்லும் ஒரு வழிப்போக்கனும் நானும் பிரிக்கவே முடியாத படி இணைந்துதான் இருக்கிறோம்.
விஞ்ஞான ரீதியாக மட்டும் அல்ல  மெய்ஞானம் என்று கூறுபவர்களின் கூற்றுப்படியும் இதுதான் உண்மை.
உண்மையில் நான் வேறு அவன் வேறு அல்ல ... அல்லது அவன் வேறு அது வேறு அல்ல.
சற்று முன்பு கூட அவனின் ஒரு அங்கமாக இருந்த பல நுண் அணுக்கள் எனது அங்கமாக சுழற்சி வேகத்தில் மாறிவிடுகிறது.
இது விஞ்ஞான ரீதியான உண்மையாகும்.
இந்த நுண் அணுக்கள் வெறும் பௌதீக சமாசாரம் மட்டும் அல்ல.
அவை ஒவ்வொன்றிலும் செய்திகள் உணர்வுகள் உள்ளன.
அவற்றில் உள்ள செய்திகள் , உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் என்பன சதா ஒரு பொருளில் இருந்து இன்னொரு பொருளுக்கு அல்லது இன்னொரு
ஜீவராசிக்கு மாறிக்கொண்டே இருக்கின்றன.

மிகவும் நுட்பமாக ஒருவரின் உணர்ச்சிகள்  அவருக்கு  எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதவர்களுக்கும்  வந்து சேரும்.
யார் யாருக்கு என்ன தொடர்புகள் அல்லது சம்பந்தம்  இருக்கும் என்பது எமது சாதாரண அறிவுக்கு இலகுவில்  தெரியக்கூடியது அல்ல.
இந்த பிரபஞ்சத்துக்கு உள்ள நோக்கம் அல்லது இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் உள்ள படைப்பின் நோக்கம் என்பவற்றை பொறுத்தே அது இருக்கும்.
இயற்கை விதிகள் எது என்பதை பற்றி பலவிதமான கருத்துக்கள் இருக்கின்றன.
 உயிரினங்கள் தங்கள் இருப்பை தக்கவைத்து கொண்டு உயிர்வாழ்தல்  என்பதுதான் உயிரினங்கள் எல்லாவற்றிக்கும் இயற்கை விதியாக அல்லது அடிப்படை நோக்கமாக இருக்கிறது.
இந்த நோக்கம் ஒன்றேதான் உண்மையில் உலகை வாழவைத்து கொண்டிருக்கின்றது. 
எப்பொழுதெல்லாம் இந்த நோக்கம் அடிபட்டு போகிறதோ அப்பொழுதே அழிவு ஆரம்பம்.
இது வரலாறு காட்டும் உண்மையாகும்.
உயரிய உயிர் வாழும்  நோக்கத்துக்கு எதிராக மனிதகுலம் பல அழிவு
கோட்பாடுகளை அவ்வப்போது வரலாற்றில் உருவாக்கி இருக்கிறது.

தற்போதும் இதுதான் ஓரளவு நடந்து கொண்டிருக்கிறது .

மனிதர்களின் பேராசை மனிதர்கள் உருவாக்கிய சமயங்கள் சார்ந்த கோட்பாடுகள் ஆகிய  இரண்டும்தான் இன்றைய பேரழிவு சக்திகளாக தெரிகிறது.
பேராசையும் மூட நம்பிக்கைகளும் இயற்கை விதிகளை கொஞ்சம் கூட சிந்திக்காமல் முழு உலகையும் அழிவுப்பாதையில் தள்ளி கொண்டு போகின்றது.
மனிதர்கள் தாங்கள் வாழும் வாழ்வின் அடிப்படை இயற்கை விதிகளை அடியோடு மறந்து விட்டார்கள். மறக்கடிக்க பட்டு விட்டார்கள்.

அதன் பலனாக யாருக்குமே இந்த உலக வாழ்வு அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை.

மனிதர்களின் சிந்தனை போக்குகளை உருவாக்குவது பெரும்பாலும் வியாபார நிறுவனங்களாகி விட்டது,
கல்வியும் ஒரு வியாபார ஸ்தாபனம்தான்.

அடுத்த பெரும் ஆபத்து சமயங்கள் சார்ந்த கோட்பாடுகளால் விளைந்தவை.

சமயம் சார்ந்த கோட்பாடுகள் ஒருபோதும் இயற்கை விதிகளை பற்றி கவலை பட்டவையே அல்ல.
 இவர்களுக்கும் வாடிக்கையாளர்கள்தான் தேவை.
உயிரனங்களின் இயற்கை விதிகளை பற்றி சமயங்களுக்கு அக்கறை கிடையாது.
மிகவும் குறுகிய கால அற்ப இலாபங்களுக்காக இயற்கை விதிகளை புறந்தள்ளியதில் இவர்கள் இருவருக்குமே பெரிய பங்கு இருக்கிறது.

இன்று தனி மனிதர்களின் மகிழ்ச்சியையும் சகல உயிர்னங்களின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கியவர்கள் இவர்கள்தான்.

இயற்கை விதிகளின் படி வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்வை கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டும்.

மனிதர்களின் மகிழ்சியை முதலில் பறித்த பெரிய ஸ்தாபனங்கள் மதங்கள்தான்.
இன்றைய மதங்கள் எல்லாமே ஆக கூடி சில ஆயிரம் வருஷங்கள்தான் பழமையானவை .
இவை ஒன்றும் அனாதிகாலமாக இருப்பவையோ அல்லது கல்தோன்றி
மண்தோன்றா காலத்தில் முன் தோன்றியதோ அல்ல.
இந்த சமயங்கள் தோன்றி மூளை சலவை செய்ய முன்பு மனிதர்கள் கொஞ்சம் நன்றாகவே வாழ்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஏனெனில் அவர்கள் வாழ்ந்து  விட்டு போகையில் எங்களுக்காக இந்த
உலகத்தை நல்ல ஷேப்பில் தான் விட்டு வைத்திருக்கிறார்கள்.
அதனால்தான் நாம் வாழக்கூடிய விதமாக இந்த உலகம் இருக்கிறது.

கடந்த சில நூறாண்டுகளாக கம்பனிகளின் வரவும் சேர்ந்து  உலகை மீள
முடியாத அளவு அழிவுக்கு இட்டு செல்கிறார்கள்.

உலகம் வெப்பமாகி வருவதும் உறவினர்கள் வெப்பமாகி வருவதும் இரண்டு வேறுபட்ட காரியங்கள் என்று உங்களுக்கு தோன்ற கூடும். உண்மையில் இரண்டும் ஒன்றுதான்.

கம்பனிகளால் ஏற்பட்ட கொடுமை உலக வெப்பம்.
சமயங்களால் ஏற்பட்ட கொடுமை உறவுகளிடையே வெப்பம்.

குறுகிய இலாபத்திற்காக  உலகின்  வாழ்வு சமநிலையை சிதைத்து  மொத்த உலகே அழியும் நிலைக்கு வந்துள்ளதை பற்றி இன்னும் கூட பெரிய  வியாபாரிகள் உணரவில்லை.
உலகம் அழிந்தாலும் தாங்கள் மட்டும் தப்பிவிடுவோம் என்று எண்ணுகிறார்களோ தெரியவில்லை.
எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியத்தை பெரிய மனிதர்கள் அல்லது பெரிய கம்பனிகள் அல்லது பெரிய நாடுகள் எல்லாம் செய்து
கொண்டிருக்கின்றன என்பதை நான் பட்டியல் போட தேவை இல்லை.
இந்த உண்மைகள் எல்லாம் தற்போது எல்லாருக்குமே தெரிகிறது.
ஆனாலும் மாற்றம் இல்லை. ஏன்? பதில் தேடவேண்டிய கேள்வி.

இதற்கு கொஞ்சம் கூட குறையாத அளவு அறியாமையில் தனிமனிதர்களின் வாழ்க்கையும் அமைத்துள்ளது என்பது மிகவும் வேதனைக்கு உரிய
விடயமாகும்.

மனிதர்கள் ஒவ்வொருவரும்  தமது எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் தங்களுக்கு மட்டுமே உரித்தானது என்று எண்ணுகிறார்கள்.
ஒவ்வொரு தனிமனிதரின் எண்ணங்களும் செய்கைகளும் நிச்சயமாக பிறரையும் பாதிக்கிறது.
பிறருக்கு நாம் செய்யும் அல்லது எண்ணும் எண்ணங்கள் எல்லாம் நம்மையும் பாதிக்கிறது என்ற உண்மை பலருக்கும் விளங்குவதில்லை.
எல்லா மனிதர்களும் சாதாரண கண்களுக்கு புரியாத ஒரு அலைகளால் பிணைக்க பட்டு உள்ளார்கள்.  அங்கே அடித்தால் இங்கேயும் வலிக்கும் . இங்கே அடித்தால் அங்கேயும் வலிக்கும்.
மனிதர்களுக்கிடையே  இருக்கும் பிணைப்பு அலைகளின் வலிமை
மனிதர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இந்த அவலம் எப்படி உருவானது?
எல்லாம் சமயங்கள் செய்த கூத்துதான்.
மனிதர்களுக்கு இடையில் கடவுள் அல்லது குரு அல்லது தேவன் போன்ற  சமாச்சாரங்கள் வந்து புகுந்து விட்டன.
சகமனிதருக்கு காட்டவேண்டிய அன்பு பாசம் அல்லது கருணை எல்லாவற்றையும் இடையில் வந்த சாமி கடத்தி கொண்டு போய்விட்டது.
மனிதர்கள் பக்தியாக இருக்கிறேன் பேர்வழி என்று எண்ணிக்கொண்டு சக மனிதர்களை மறந்து விட்டார்கள்.
சகமனிதர்களை கீழே தள்ளி விட்டு சாமியை தூக்கி மேலே வைத்துவிட்டான்.
கண்ணுக்கு தெரியாத சாமியை எண்ணிக்கொண்டு கண்ணுக்கு தெரிந்த மனிதரையும் சகல ஜீவராசியையும் ஏன் முழு உலகத்தையும் அப்படி கைவிட்டுவிட்டான்.
மனிதன் மனிதர்களை கைவிட்டதும் மனிதர்களும் மனிதனை கைவிட்டுவிட்டனர்.
விளைவு எல்லோரும் அதோ கதியாகிவிட்டனர்.
மகிழ்ச்சியை தொலைத்து விட்டனர்.
எதையோ நோக்கி மனிதர்கள் எல்லோரும் ஓடுகிறார்கள்.
அவர்களுக்கு எதுவேண்டும் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை.
பெரும்பாலான மக்கள் நிம்மதியை மகிழ்ச்சியை எப்படி மீண்டும் பெறுவது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.
உண்மையாக  வழி மிகவும் எளிதானதுதான்.
ஆனால் கடந்து வந்த பாதையில் மேல் உள்ள பழக்க தோஷம் அல்லது பயம் சுதந்திரமாக சிந்திக்க விடாமல் தடுக்கிறது.
மாத்தி யோசிக்க முடியாத ஒருவித இருட்டில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள்.
மனிதர்களின் மோசமான ஒரு இருட்டு குகைதான் Comfort Zone என்று கூறபடுவது. பழகிப்போன அறியாமை சுகம்.
Comfort Zone  ஒரு தீர்வு அல்ல. வெறும் தற்காலிக தங்குமிடம்தான்.
அதிலேயே தங்கி விட்டால் சேரவேண்டிய இடத்துக்கு ஒருபோதும் போய்  சேர முடியாது.
பெரிதாக ஒன்றையும் சிந்தித்து குழம்ப வேண்டியதில்லை.
 கொஞ்சம் கண்ணை திறந்து முன்பாக தெரியும் மனிதர்களையும் மரம் செடி கொடி மற்றும் பிராணிகளையும் கொஞ்சம் அன்பாக கவனித்து பாருங்கள்.
 உங்களுக்கு பிரபஞ்சத்தின் இயற்கை விதிகளை இங்கே காணலாம்.
நமது கண்களுக்கு தெரியும்  இந்த உலகத்தை விடவா பெரிய வழிகாட்டி இருக்கிறார்?   namathu.blogspot.com

கருத்துகள் இல்லை: