வியாழன், 21 ஜனவரி, 2016

Arun Mo: இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாடல்....தலித் தற்கொலைகளை கண்டுகொள்ளாத திரையுலகம்

 பீப் பாடலும், கிளாமர் பாடலும்...
இட ஒதுக்கீடு பற்றி தமிழ் திரைப்பட வியாபாரிகளுக்கு மத்தியில் இருக்கும் புரிந்துணர்வு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஷங்கர் தொடங்கி முருகதாஸ் வரை, இப்போது விஜய் ஆண்டனி என எல்லாரும் இட ஒதுக்கீட்டை ஏதோ மாபெரும் குற்றமாக, சமூக அவலமாக பார்க்கிறார்கள். அல்லது இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத்தான் நாம் கருத்து சொல்கிறோம் என்கிற சுய சிந்தனை கூட இல்லாமல் கருத்துகளை திரைப்படங்களை திணிக்கிறார்கள். எந்த அளவிற்கு இவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் என்பதை இட ஒதுக்கீடு பற்றிய இவர்கள் பார்வையே எடுத்துரைக்கிறது. இத்தனைக்கும் இந்த மூவரும் (ஷங்கர் பற்றி தெளிவாக தெரியவில்லை) இட ஒதுக்கீட்டு பயன்களை ஏதோ ஒருவகையில் அனுபவித்துதான் வந்திருப்பார்கள். தான் வாழும் சமூகம் பற்றி எவ்வித அக்கறையும் இல்லாத ஒரு பெரும் வியாபாரக் கூட்டத்தை தமிழ்நாடு இன்னமும் கலைஞர்கள் என்றே பெயரிட்டு அழைக்கிறது. நடிகர் சங்க நண்பர்கள் எல்லாரும், தலித் படுகொலை, தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். பீப் பாடலுக்கு எதிராக கூட திரைப்படத் துறையை சார்ந்த பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால் இது போன்ற நஞ்சை கக்கும் பாடல்களுக்கு எதிராக யாருமே வாய் திறப்பதில்லை. சினிமாகாரர்கள் அப்படித்தான் என்றால், எந்த அரசியல் தலைவர்களும் கூட இது போன்ற விசக்கிருமிகளுக்கு எதிராக குறைந்தது அறிக்கை கூட விடுவதில்லை.

இதெல்லாம் அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுமளவிற்கு பெரிய விஷயம் இல்லை என்று ஒதுங்கிவிட முடியாது. சினிமா ஏற்படுத்தும் ஒவ்வொரு அதிர்வும் பெரும் அலையாக மாறி, காற்றில் தொடர்ந் இயங்கிக் கொண்டே இருக்கும். இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் அது அணுக்கதிர் வீச்சை விட மோசமான ஆபத்தை சமூகத்தில் தோற்றுவிக்கும். இட ஒதுக்கீட்டிற்கு எதிரான அந்த வரிகளை நீக்கி, இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என எல்லாரும் அதற்காக வருத்தமும் தெரிவிக்க வேண்டும்  www.facebook.com/ArunThamizhstudio?fref=nf&pnref=story


வெப்துனியா.com பிச்சைக்காரன் பாடலில் சர்ச்சையை எழுந்ததைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட வார்த்தை மாற்றப்பட்டுள்ளது என நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
'பாழா போன உலகத்துல காசு பணம் பெருசு' என்ற சமூக விழிப்புணர்வு பாடலை, பிச்சைக்காரன் படத்தின் விளம்பர பாடலாக கவிஞர் லோகன் எழுதியுள்ளார். அந்த பாடலில், பண பலம் படைத்த கல்வித் தகுதி இல்லாத சிலர், தன் பண பலத்தை உபயோகித்து, தனியார் கல்வி நிறுவனங்கள் சிலவற்றுக்கு லட்சத்தையும், கோடிகளையும் கொடுத்து, மருத்துவர்களாகி, நல்ல மருத்துவ சமுதாயத்துக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் என்பதைத்தான், 'கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுரான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த டாக்டர்களை அவமதித்து, லோகன் இந்த பாடலை எழுதவில்லை. கவிஞர் லோகனும், பாடலை பாடிய வேல்முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து சாதனைப்படைத்தவர்கள்.
ஒரு வரியை கொண்டு எங்கள் மீது களங்கம் கற்பிக்க வேண்டாம். பாடலை முழுமையாக கேட்டால்தான் பாடல் எழுதப்பட்ட நோக்கம் என்ன, யாருக்காக எழுதப்பட்டது என்பது புரியும். இந்த பாடல் மூலம் சமுதாயத்தில் ஓடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளைத்தான் சொல்லுகிறோம். யாரையும் புண்படுத்தவில்லை.
ஒரு நல்ல மருத்துவன் எப்படி வாழ வேண்டும் என 'சலீம்' திரைப்படம் மூலம் வாழ்ந்து காட்டியவன் நான்.
பாடலின் அர்த்தம் சிலருக்கு சரியாக புரியவில்லை என்பதால், கோட்டா என்ற வார்த்தையை நீக்கிவிட்டு காசு கொடுத்து என மாற்றிவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.
முன்னதாக "பிச்சைக்காரன்' திரைப்படத்தின் விளம்பர பாடல் வரிகள் மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது.
பாடல் வரிகளில் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வி பயின்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த டாக்டர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு மூலம் படித்த டாக்டர்கள் தவறாக ஊசியைப் போட்டு நோயாளிகளைக் கொல்கிறார்கள் என்ற பொருளில் அமைந்துள்ள வரிகள் சமூக நீதிக்கு எதிரானது என கூறியிருந்தனர்.

கருத்துகள் இல்லை: