செவ்வாய், 20 ஜனவரி, 2015

Chennai சுரங்கம் தோண்டும் பணியால் பூமிக்குள் இறங்கிய வீடு!



சென்னை,ஜன.19 (டி.என்.எஸ்) மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை தோண்டும் பணியால், சென்னையில் இரண்டு அடுக்கு வீடு ஒன்றை பூமியில் இறங்கிய சம்பவம் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை தோண்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. திருமங்கலம் ஷெனாய் நகர் இடையே 5 கிலோ மீட்டர் தூர சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் தண்டவாளம் அமைக்கும்பணி நடந்து வருகிறது. அவசரகால வழி அமைத்தல் மின்சார உபகரணங்கள் பொருத்துதல் போன்ற வேலைகள் நேற்று இரவு நடந்தது. ஏராளமான மெட்ரோ ரயில் ஊழியர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர். இரவு 11.30 மணியளவில் ஷெனாய்நகர் பில்லா அவென்யூ சாலையும், 8–வது குறுக்கு தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள ஒரு கட்டிடம் திடீர் என்று 2 அடி மண்ணுக்குள் இறங்கியது. இதனால் அருகில் உள்ள வீடுகளும் அதிர்ந்தன.
பூமி அதிர்ச்சி ஏற்பட்டது போல இருந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்தனர். அப்போது ஒரு கட்டிடம் மட்டும் கீழே இறங்கி இருந்தது. அதன் சுவர் மற்றும் அடித்தளம் சேதம் அடைந்திருந்தது.

கட்டிடத்தின் தரை பகுதி முழுவதும் பூமிக்குள் இறங்கி இருந்தது. இந்த தரை மட்டத்தில் 4 கடைகளும், மேல் தளத்தில் கட்டிட உரிமையாளரின் வீடும் உள்ளது. 2400 சதுர அடி உள்ள இந்த கட்டிடத்தின் பெரும் பகுதி சேதம் அடைந்துள்ளது.

வீட்டின் மேல் பகுதியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடைகள் அமைக்கும் பகுதியில் சுற்றுச்சுவர் கூண்டோடு சரிந்து காணப்படுகிறது. இதனால் இன்று அந்த கடைகள் திறக்கப்படவில்லை.

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கட்டிடம் புதைந்த இடம், சேதம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.

அந்த தெருவை சீல் வைத்து போக்குவரத்தையும் தடை செய்தனர். சேதம் அடைந்த கட்டிடத்தை சரி செய்யவும் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உறுதி அளித்தனர்.

கட்டிடம் தரை இறங்கியது பற்றி தகவல் இன்று காலை வேகமாக பரவியது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று கட்டிடத்தை பார்வையிட்டனர். பெருமளவு கூட்டம் சேர்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வீட்டு உரிமையாளர் மாடியில் உள்ள வீட்டில் தொடர்ந்து குடும்பத்துடன் இருக்கிறார்.

ஏற்கனவே இதே தெருவில் உள்ள மற்றொரு வீடும் இது போல் சேதம் அடைந்துள்ளது. அதை மெட்ரோ ரயில் நிர்வாகம் சரி செய்துகொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டிடம் சேதம் அடைந்ததால் அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை: