செவ்வாய், 20 ஜனவரி, 2015

ஓட்டுக்கு 2,000 ரூபாயாம்...களைகட்டும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்!

இடைத்தேர்தல் என்றாலே குவார்ட்டர் பாட்டில், பிரியாணி மற்றும் தாராள கரன்சி சப்ளை என தொகுதி முழுவதும் அமர்க்களப்படும். தற்போது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைய தொடங்கிவிட்ட நிலையில், இந்த தேர்தலிலும் ஓட்டு ஒன்றுக்கு 2,000 வரை கொடுத்து வாக்குகளை அள்ள முக்கிய கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியோடு சேர்த்து, எம்எல்ஏ பதவியையும் இழந்துவிட்டார். இத்தொகுதிக்கு அடுத்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் எஸ்.வளர்மதி. திருச்சி மாவட்ட அதிமுக இணை செயலாளரான வளர்மதி, திருச்சி மாநகராட்சி  58 ஆவது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். திக் திக்  அள்ளணும்  அள்ளணும்  மொத்தமாக அள்ளணும்  கொஞ்சம் குறைஞ்சாலும்  ஹீல்ஸ் செருப்பால அடிவாங்கணுமோ? ஏற்கனவே  வாங்கினவிங்கதானே?


கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில், சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த நெப்போலியனும், காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்பூவும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படும் விஜயகாந்தின் தேமுதிகவும் தனித்துப்போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க திமுக வேட்பாளருக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவளிக்க வேண்டும் என கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், போட்டி கடுமையாக இருக்குமோ என்ற இலேசான அச்சம் அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் திமுகவில் கருணாநிதி, மு.க. ஸ்டாலின், கனிமொழி, காங்கிரஸுக்கு குஷ்பு, பா.ஜனதாவுக்கு அண்மையில் அக்கட்சியில் இணைந்த நெப்போலியன், கங்கை அமரன், காயத்ரி ரகுராம் என நட்சத்திர பிரமுகர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.
ஆனால் ஆளும் கட்சியான அதிமுகவின் முகமான ஜெயலலிதாவுக்கு இந்த தேர்தலில் பிரசாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ளதால் பிரசாரத்திற்கு செல்லக்கூடாது. ஜெயலலிதாவைப்போன்றே ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வந்த ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா, தேர்தல் பிரசாரத்திற்கு சென்றதால் அவரது ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. எனவே தனக்கும் அந்த மாதிரி நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் ஜெயலலிதா எச்சரிக்கையாக உள்ளதால் அவர் பிரசாரத்திற்கு செல்ல மாட்டார்.

அதே சமயம் இந்த இடைத்தேர்தல் அதிமுகவை பொறுத்தமட்டில் கவுரவ பிரச்னையான ஒன்று. இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெறுவது வழக்கமான ஒன்றுதான் என்றபோதிலும், இத்தொகுதி ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்ற பின்னர் சந்திக்கும் தேர்தல் என்பதாலும் அதிக வாக்குகளில் வெற்றி வித்தியாசத்தை காட்டி, மக்கள் மன்றத்தில் ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபித்துவிட வேண்டும் என்ற துடிப்பில் இருக்கிறார்கள் அதிமுகவினர்.
ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியை இழந்த உடனேயே, இடைத்தேர்தலை மனதில் வைத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை அசுர வேகத்தில் செயல்படுத்த அரசு எந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டன. மேலும் மின் விசிறி, கிரைண்டர் மற்றும் மிக்ஸி ஆகிய விலையில்லா பொருட்கள் பெருமளவில் வழங்கப்பட்டன.

இதுதவிர அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் அனைத்து அமைச்சர் பட்டாளங்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு ஒன்றை அமைத்து களமிறக்கி விட்டுள்ளது. ஒன்றியம் வாரியாக தனித்தனி பொறுப்புகள் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி, நேற்றே வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு, பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.
இதனிடையே ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்தம் 2,70, 129 வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்களை 'கவர்' செய்ய முக்கிய கட்சி, ஓட்டு ஒன்றுக்கு ரூ. 2000 வீதம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதனை வாக்குப்பதிவு தினத்திற்கு முந்தைய தினம் வரை இழுக்காமல்,  விரைவில் பட்டுவாடா செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு வார்டு மற்றும் தெரு வாரியாக உள்ள வாக்காளர்களில் நேரடியாக கொடுத்தால் பிரச்னை ஏற்படாத வாக்காளர்கள், மாற்று கட்சிகளுக்கு வாக்களிக்க கூடியவர்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு, கரன்சி பட்டுவாடாவை கச்சிதமாக அரங்கேற்ற வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எனவே இன்னும் சில தினங்களில் ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்கள் வீட்டு வாசலில் அதிகாலை அல்லது இரவில் கரன்சி நோட்டுக்கள் கிடந்ததாக செய்தி வெளியானால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இருக்காது.

ஆனால் ஓட்டுக்கு பணம் சரியா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது வாக்காளர்கள்தான்! விகடன்.com

கருத்துகள் இல்லை: