திங்கள், 19 ஜனவரி, 2015

திபெத் அகதிகளுக்கு குடியுரிமை!

புதுடில்லி:இந்தியாவில் வாழும் திபெத் அகதிகள், வரும் டில்லி சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. வாக்காளர் அடையாள அட்டை பெறுவதன் மூலம் திபெத் அகதிகள், இந்திய குடியுரிமை பெறுவார்கள். ஆனால், இதற்கு திபெத் அகதிகள் இடையே பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, திபெத் அகதிகள் குழுவின் தேசிய அமைப்பாளர் என்.கே. திரிக்கா
''சீன ஆக்கிரமிப்பில் இருந்து திபெத் விடுதலையாகும் நாளுக்காக, அகதிகளாக இங்கு வாழ்கிறோம். இந்திய குடியுரிமை பெற்றால், இந்த அடிப்படை நோக்கமே பாழாகிவிடும்'' என்றார்.


திபெத் போராளியும், எழுத்தாளருமான டென்சின் டிசுன்டே கூறும்போது, ''திபெத்தியர்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை தந்த மத்திய அரசுக்கு நன்றி. ஆனால், இது திபெத் விடுதலை போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து, தீவிர செயல்பாட்டை குறைத்து விடும்'' என்றார்.

ஆனால், இந்த கருத்தை ஒரு சிலர் மறுக்கின்றனர். இந்திய குடியுரிமை பெறுவது, அவரவரின் தனிப்பட்ட விருப்பம். இதனால், திபெத் விடுதலை போராட்டம் பிசுபிசுத்துவிடும் என்று கூற முடியாது என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

1இந்தியாவில், 94,203 திபெத்தியர்கள் வசிக்கின்றனர்.
2இந்திய குடியுரிமை சட்டப் படி, 1950ம் ஆண்டு, ஜன., 26 முதல் 1987ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி வரை, இந்தியாவில் பிறந்தவர்கள், இந்திய குடிமகன்களாக கருதப்படுவர்.
3இந்த காலகட்டத்தில் திபெத் அகதிகளுக்கு பிறந்தவர்கள், சட்டப்படி, இந்திய குடிமகன்களாக
கருதப்படுவர்.
4ஆனால் இதை ஏற்க, திபெத்தியர்கள் மறுக்கின்றனர். இந்தியாவில் தங்க, ஒவ்வொரு திபெத்தியருக்கும் பதிவு சான்றிதழும், வெளிநாடு செல்ல தனி அடையாள
அட்டையும் வழங்கப்படுகிறது.
5இது தவிர, தலாய்லாமா தலைமையில் வெளிநாட்டில் இருந்து செயல்படும் திபெத் அரசு, திபெத்தியர் என்பதற்கு அடையாளமாக, 'பச்சை புத்தகம்' ஒன்றை
வழங்குகிறது.6திபெத்தியர்களுக்கு இந்தியாவில் நிலம் வாங்க அனுமதி இல்லை. dinamalar.com

கருத்துகள் இல்லை: