புதன், 21 ஜனவரி, 2015

டெல்லி சட்டசபை தேர்தல்: கவர்ச்சி புயல்களின் பின்னால் சென்ற பாஜக!

புதுடெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.டெல்லியில் 2013 டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் இணைந்து அமைந்த ஆட்சி 49 நாட்களில் முடிவுக்கு வந்தது. கெஜ்ரிவால் பதவி விலகியதை அடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. வருகிற பிப்ரவரி 7ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தவற விட்ட ஆட்சியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வழக்கம் போல் தனது ஸ்டைலில் தெருவில் இறங்கி மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறது. பெரும்பான்மை பெற ஓரிரு இடங்களை தவற விட்ட பாஜ இம்முறை நட்சத்திர வேட்பாளர்களையும், அமைச்சர்களையும், எம்பிக்களையும் களமிறக்கி சூறாவளி பிரசாரம் செய்து வருகிறது.


காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணா தீரத், கெஜ்ரிவாலுடன் இணைந்த ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்திய ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ வினோத் குமார் பின்னி, மற்றொரு தலைவர் ஷாஜியா இல்மி உள்ளிட்ட எதிர் முகாம்களை சேர்ந்த பலரையும் பாஜ ஈர்த்து வந்துள்ளது. இம்முறை கூடுதல் பலத்துடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடியும் என்று பாஜ கருதுகிறது.இரு தினங்களுக்கு முன்பு வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் தேர்தல் பிரசாரத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருகிறது. இருப்பினும் டெல்லி தேர்தலில் பாஜ மற்றும் ஆம் ஆத்மிக்கு இடையே தான் போட்டி நிலவி வருகிறது.

இம்முறை ஆம் ஆத்மியை தோற்கடிக்க செய்ய வேண்டும் என்பதற்காக பாஜ தலைவர் அமித்ஷா தலைமையில் பல்வேறு தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நேற்று கூடிய உயர்மட்ட கூட்டத்தில் கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக ஒரு மனதாக அறிவிக்க பாஜ முடிவு செய்தது. மேலும் 62 வேட்பாளர்கள் பெயரும் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். இதில் 6 பேர் பெண்கள். ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜ சார்பில் நுபுர் சர்மா என்பவர் களம் இறக்கப்பட்டுள்ளார்.இவர் டெல்லி பாஜ மாணவர் அணி தலைவர் ஆவார்.  காங்கிரஸ் சார்பில் கிரண்வாலியா நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜவில் இணைந்த கிருஷ்ணா தீரத்துக்கு படேல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட மூத்த தலைவர் ஜகதீஷ்க்கு ஜானக்புரி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜவில் இணைந்துள்ள முன்னாள் எம்எல்ஏ வினோத் குமார் பின்னியை ஆம் ஆத்மியின் தலைவர் மணீஷ் சிசோடியாவை எதிர்த்து பத்பர்கஞ்சில் களம் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து பாஜ எம்எல்ஏக்களும் இம்முறையும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் கிரண்பேடி மற்றும் கெஜ்ரிவால் இடையே பிரசார போர் நடைபெற்று வருகிறது. இன்று பிரசாரம் செய்த கெஜ்ரிவால் பேசுகையில் பாஜவில் ஐக்கியமாகியுள்ள கிரண்பேடி என்னுடன் பொது மேடையில் விவாதிக்க தயாரா என்று சவால் விட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்து மற்றொரு இடத்தில் கிரண் பேடி பேசுகையில், கெஜ்ரிவால் எப்போதும் விவாதம் செய்வதிலேயே ஆர்வம் உள்ளவர். என்னை பொறுத்த அளவில் நான் சேவை செய்யவே விரும்புகிறேன் என்று திருப்பி தாக்கினார்.அதே போல் கடந்த 49 நாட்கள் ஆட்சியில் கெஜ்ரிவால் அரசு அடித்த பல்டிகள் குறித்து காங்கிரஸ் கட்சி புத்தகம் ஒன்றை வெளியிட்டு பிரசாரத்தில் மேலும் சூட்டை கிளப்பியுள்ளது. மேலும் காங்கிரஸ், பாஜ கட்சிகள் காசு கொடுத்தால் வாங்கிவிட்டு ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று பேசிய கெஜ்ரிவால் மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இதனால் டெல்லியில் ஏற்பட்டுள்ள மும்முனை போட்டி காரணமாக தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது
- See more /tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: