புதன், 21 ஜனவரி, 2015

ராமஜெயம் சயனைட் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் ! விஷம் கொடுத்த பின்புதான் தாக்கப்பட்டார்?

ராமஜெயம் கொலை வழக்கு... திகில் ஃப்ளாஷ்பேக்! (மினி தொடர்-2)இறந்தும் ராமஜெயத்தைத் துரத்திய வழக்குகள்! ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முன்பு வரை ராமஜெயத்தின் தில்லை நகர் அலுவலகத்தில் எப்போதும் ஜெஜெயென மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கட்சிக்காரர்களுக்கு பிரச்னை என்றால்,  அடுத்த நிமிடம் போன் பறக்கும். உடனுக்குடன் சரிசெய்வார். வருடா வருடம் பள்ளி அட்மிஷன் நேரங்களில், இவரது தில்லை நகர் ஆபீஸுக்கு  தங்கள் குழந்தைகளுக்கு பிரபல பள்ளிகளில் சீட் வேண்டும் என கியூவில் நிற்பார்கள். தங்கள் ஊர்களில் கோயில் கட்ட பணம் வேண்டும் என பலர் வரிசையில் நிற்பார்கள். அவற்றையெல்ல்லாம் சட்டென முடிக்கும் ராமஜெயத்தின் பாணியே வித்தியாசமானது.; இது ராமஜெயத்தின் ஒரு முகம். அவருக்கு மற்றொரு முகமும் உண்டு. வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என பேசும் கோபக்காரர். திருச்சி ஏரியாவில் சர்ச்சைக்குரிய நிலங்கள் விற்பனைக்கு வந்தால், அதில் அங்கு அரங்கேறும்  பிசினஸ் பிரச்னை, நிலம் கொடுக்கல் வாங்கல் என அனைத்திலும் ராமஜெயம் பெயர் அடிப்படாமல் இருக்காது. இதையெல்லாம் வைத்துதான் ஒரு கட்டத்தில், திருச்சியையே இவர் வளைத்துப் போட்டுவிட்டதாகவே சாதாரணமானவர்களைக்கூட பேச வைத்தது.


அது வழக்காகவும் பாய்ந்தது. கடந்த 2011 செப்டம்பர் மாதம் நில அபகரிப்பு வழக்கில் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் ராமஜெயம், ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் உறவினர்களுக்குச் சொந்தமான சென்னை, திருச்சி, கோவை வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர்.  இதுபோன்ற வழக்குகள் அவர் இறந்த பின்னும் தொடர்ந்தது.

கொலை செய்யப்பட்ட ராமஜெயம் இறந்து 25 நாட்களுக்குப் பிறகு அவர் மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் மேற்கு சித்திரை வீதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி என்பவர், ஸ்ரீரங்கம் அருகே உள்ள தனது பசுக்கள் மடத்தை அபகரித்ததாக ராமஜெயம் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் அதற்கு முந்தைய மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார். அதுதொடர்பாக, கொலை செய்யப்பட்ட ராமஜெயம் உள்பட ஐந்து பேர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு  ராமஜெயத்தின் இறப்புச் சான்றிதழை கோர்ட்டில்  தாக்கல் செய்து, அந்த வழக்கில் இருந்து விடுவித்தனர்,

கார் விபத்தும் காவிரிக் கரையும்!

ராமஜெயம் எப்போதும் உடம்பை பலமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர். அதனால் தன் வேலைபளுவுக்கு நடுவில் தவறாமல் நண்பர்களுடன் பூப்பந்தாடுவது, வாக்கிங் போவது என உடம்பை கட்டுக்குள் வைத்திருந்தார். கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அவரின் கார் விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிந்துபோக நடக்க முடியாமல் சிரமப்பட்டார்.  கொஞ்ச நாள் வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி நடக்க முயற்சி செய்தார்.

2012 மார்ச் 29ஆம் தேதி காலை தனது தில்லை நகர் 10 கிராஸ் வீட்டில் இருந்து கையில் வாக்கிங் ஸ்டிக் இல்லாமல் மெல்ல வாக்கிங் கிளம்பினார். எதிரில் அவரது வீடு இருக்கும் தெரு முனையில் நின்று ஜட்ஜ் மணி என்பவரைச் சந்தித்து பேசிவிட்டு, 'சாஸ்திரி நகர் ஆபீஸுக்கு 7 மணிக்கு வந்துடுங்க சார்' என சொல்லிவிட்டுக் கிளம்பிய ராமஜெயத்தை, அதன் பின்னர் பிணமாகத்தான் பார்க்க  முடிந்தது.

சயனைடு கொடுத்துக் கொலை!

ராமஜெயம் கொலை செய்யப்பட்ட மார்ச் 29 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு, அவரின் உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர்கள் அவரது வயிற்றில் சிறிதளவு ஆல்கஹால் இருந்ததாகவும், அவர் கொலை செய்யப்பட்டு 12 மணி நேரத்துக்கு மேலாகி இருக்கலாம் என்பதாகவும் தெரிவித்தாக தகவல் பரவியது. ராமஜெயத்தின் குடும்பத்தினர், அவருக்கு டிரிங்ஸ் சாப்பிடும் பழக்கமே இல்லை என மறுத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம், ராமஜெயம் விஷம் கொடுத்து கொல்லப்பட்டு இருப்பதாக  தெரியவந்தது.

அந்த அறிக்கையில், ராமஜெயம் கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் கொல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு சயனைடு விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. மேலும் அவரது கழுத்தை நெரித்ததற்கான அறிகுறிகளும், அவரது பின்மண்டையில் பலமாகத் தாக்கியதற்கான அறிகுறிகளும் இருந்தன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கை, முக்கிய தடயமாக அமையும் எனக் கருதப்பட்டது.

ராமஜெயத்தைக் கொலை செய்தவர்கள், அவரது மனைவிக்கு போன் செய்து நேருவின் நம்பரை கேட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. கொலை வழக்கைத் துரிதப்படுத்தும் விதமாக ஏழு தனிப் படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கே.என்.நேரு, ராமஜெயம் குடும்பத்தினர், அவருடைய சகலையின் மகன் வினோத், ராமஜெயத்துக்கு நெருக்கமான  கட்சிக்காரர்கள், கணக்குவழக்குகளைப் பார்த்துவந்த அமுதன், லாட்டரி ராம்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் உள்ளிட்டோரிடம் மணிக்கணக்காக விசாரணை நடத்தினர். துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், 'ராமஜெயம் அன்று வீட்டுக்கே வரவில்லை, இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே கடத்தப்பட்டதாகவும், பெண் தகராறில்   கொல்லபட்டதாகவும் கிளப்பிவிட்டார்கள். ஆனால் விசாரணையில், 'காலையில் வாக்கிங் சென்றபோதுதான் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார்’ என்பது மட்டுமே உறுதிசெய்யப்பட்டது.

விசாரணையில் சிக்காத முக்கியப் புள்ளிகள்... காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகள்... ராமஜெயத்தை அச்சுறுத்திய கொலை வழக்கு உள்ளிட்டவற்றை அடுத்து வரும் நாட்களில் பார்ப்போம்...

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன் vikatan.com

கருத்துகள் இல்லை: