முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை முதல்வர் வேட்பாளராக
அறிவித்தால் காங்கிரஸ் கட்சிக்காரன் கூட ஓட்டுப் போடமாட்டான் என்று
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாக
சாடியுள்ளார்.
சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு இன்று இளங்கோவன்
அளித்த பேட்டி:
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடபோவதில்லை என்ற
முடிவை எடுத்து இருக்கிறோம். இந்த தேர்தல் போலியானது. பணப்பலம்,
அதிகாரப்பலத்திற்கு மத்தியில் நடக்கிறது.
இதில் எங்கள் சக்தியை விரயமாக்க விரும்பவில்லை. தேர்தல் ஆணையத்தின் மீதும்
எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இளங்கோவன் அளித்த பதில்கள்:
கேள்வி: தேசிய கட்சியான பாரதிய ஜனதா இடைத்தேர்தலில் களம் காண்கிறது. ஆனால்
காங்கிரஸ் பின்வாங்குவது, பின்னடைவு இல்லையா?
பதில்: எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. நடக்கும் தேர்தல் என்பது
கண்துடைப்பு. வாக்காளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை பட்டுவாடா செய்ய
இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி கூட வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க
போகிறது. அக்கட்சி பணம் பட்டுவாடா செய்ய உதவுவதற்கு நிறைய தொழிலதிபர்கள்
இருக்கிறார்கள்.
அங்கே போட்டியிடும் மற்றொரு கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மட்டும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
அந்த தொகுதியில் உள்ள காங்கிரஸ் வாக்காளர்கள் நடுநிலை வகிப்பார்கள்.
மனசாட்சியுடன் அவர்கள் வாக்களிப்பார்கள். அவர்கள் பணம் கொடுத்தால் வாங்கிக்
கொள்வார்களா? என்றால், என்னிடம் கூட ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால்
வாங்கிக்கொள்வேன். ஆனால் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்க மாட்டேன்.
த.மா.கா.வில் சிதம்பரமா?
கேள்வி: ஜி.கே.வாசன் கட்சியில் சிதம்பரம் சேர போகிறார் என்று
கூறுகிறார்களே?
பதில்: யூகத்தின் அடிப்படையில் வெளியான தகவல். சிதம்பரம், ஜி.கே.வாசனிடம்
என்ன பேரம் நடத்தினார் என்பது எனக்கு தெரியாது.
சிதம்பரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினால் எங்களுக்கு ஒன்றும்
இழப்பு இல்லை. ஒரு கட்சியில் இருந்து கொண்டு 200க்கும் மேற்பட்டவர்களை
ஒருவர் அழைத்து தனியாக கூட்டம் போடுவது எப்படி சரியாகும்?
கார்த்தி ப.சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு அவர் விளக்கமளிக்க
நேரம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்
என்று அவர் சொல்வது, யாரை அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்பது
எல்லோருக்கும் தெரியும்.
தமிழ்நாட்டில் காமராஜருக்கு பிறகு யாரும் மக்கள் தலைவர் இல்லை. எனவே அவர்
நினைப்பவரை (ப. சிதம்பரம்) அறிவித்தால் காங்கிரஸ் கட்சிக்காரன் கூட
காங்கிரசுக்கு ஓட்டுப்போட மாட்டான்.
இவ்வாறு இளங்கோவன் பதில் அளித்தார். tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக