வெள்ளி, 12 ஜூலை, 2013

உ.பி.,யில் ஜாதி மாநாடுகள், ஊர்வலங்களுக்கு தடை

லக்னோ: உத்தர பிரதேசத்தில், ஜாதியின் பெயரில் நடத்தப்படும், ஊர்வலங்கள், பேரணிகள், பொதுக் கூட்டங்களுக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றம், அதிரடி தடை விதித்துள்ளது.
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தர பிரதேசத்தில், லோக்சபா தேர்தலுக்கான, அரசியல் கட்சிகளின் பிரசாரம், கடந்த ஆண்டே துவங்கி விட்டது. லோக்சபா தேர்தல் தேதி, இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள், தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அதிர்ச்சி அளித்துள்ளன. இந்நிலையில், அந்த மாநிலத்தின் பெரும்பான்மை சமுதாயங்களில் ஒன்றான, பிராமண சமுதாயத்தினரின் ஓட்டுகளை கவர, முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான, மாயாவதி பல ஏற்பாடுகளை செய்துள்ளார். சமுதாயத்தில் நலிவடைந்த நிலையில் இருந்த, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை மேம்படுத்த, கன்ஷிராமால் துவக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியை, ஓட்டு வங்கி அரசியலுக்காக, அதன் இப்போதைய தலைவர், மாயாவதி, மாற்றி அமைத்துள்ளார்.
எப்படியும் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்து விட வேண்டும் என, அவர் துடிப்பதால், பிராமணர்களை ஈர்க்குமாறு, தன் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு கட்டமாக, 40 மாவட்டங்களில், "பிராமின் பாய்சாரா சம்மேளன்' என்ற பெயரில், பிராமணர்களை கட்சியில் சேர்க்கும் மாநாடுகள் துவங்க உள்ளன.


ஜாதி பிரச்னை:


இது போல், பிற கட்சிகளும், பிற சமுதாயத்தினரின் ஓட்டுகளை கவரும் வகையில், வியூகம் வகுத்து செயல்படுவதால், உத்தர பிரதேசத்தில் ஜாதிப் பிரச்னை அதிகமாக தலைதூக்கியுள்ளது. இந்நிலையில், மோதிலால் யாதவ் என்ற வழக்கறிஞர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், பொதுநலன் கோரும் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மாநிலத்தில், ஜாதியின் பெயரில் நடத்தப்படும் மாநாடுகள், ஊர்வலங்களுக்கு தடை கோரிஇருந்தார். வழக்கை விசாரித்த, நீதிபதிகள், உமா நாத் சிங் மற்றும் மகேந்திர தயாள், நேற்று பிறப்பித்த உத்தரவில், ஜாதியின் பெயரில் எவ்வித ஊர்வலங்களும், மாநாடுகளும் நடத்தக் கூடாது என தெரிவித்தனர். மேலும், நான்கு முக்கிய கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு, "நோட்டீஸ்' அனுப்பி, அவர்களின் கருத்துகளை கேட்டுள்ளது.dinamalar.com

கருத்துகள் இல்லை: