டெல்லி: ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜெட் ஏர்வேஸின் நரேஷ்
கோயல் ஆகியோரை சகட்டுமேனிக்கு வெளுத்துவாங்கிவிட்டார் ஏர் ஏசியா
நிறுவனத்தின் தலைவரான டோனி பெர்னாண்டஸ்.மலேசியாவை
சேர்ந்த ஏர் ஏசியா நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் குறைந்த
கட்டண விமான சேவையில் ஈடுபட இருக்கிறது. ஏர் ஏசியாவின் நிறுவனரும்
தலைவருமான டோனி பெர்னாண்டஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் கடந்த
வாரம் இந்தியா வருகை தந்திருந்தார். டெல்லியில் தங்களது விமான சேவை
அறிமுகம் பற்றிய செய்தியாளர் கூட்டத்தையும் நடத்தியிருந்தார்.
அப்போது இந்தியாவில் உள்நாட்டு விமான நிறுவனங்கள் 5 ஆண்டுகால சேவையை நிறைவு
செய்வதுடன் 20 சொந்த விமானங்களை வைத்திருந்தால்தான் வெளிநாட்டுக்கான
சேவையை தொடங்க முடியும் என்ற விதியைக் குறிப்பிட்ட டோனி பெர்னாண்டஸ், அது
அனேகமாக நரேஷ் கோயலோ அல்லது வேறு சிலரோ தங்களைக் காப்பாற்றிக் கொள்ள
உருவாக்கிய விதி தான் இது என்றார்.
அதேபோல் ஏர் ஏசியா- டாடா குழும ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்து வரும்
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியையும் விடவில்லை டோனி.
"இந்தியாவில் வெளிநாட்டு நலனுக்காக சிந்திக்கின்றவர்கள் ஏராளமானோர்
இருக்கின்றனர். அவர்கள் இந்தியாவுக்கு என்ன தேவை என்பதைப் பற்றி
சிந்திப்பதே இல்லை.. இது அவமானமாக இருக்கிறது என்று சாடிவிட்டார்.
மேலும், 8 ஆண்டுகளுக்கு முன்பு இனி இந்தியாவுக்குள்ளேயே வரக்கூடாது என்று
நினைத்தேன். ஏனெனில் சிலர் (விஜய் மல்லையா?) விமான சேவையில்
ஈடுபட்டிருந்தனர்.. அப்போது அவர்கள் ஏராளமான பணத்தை வாரி இறைத்துக்
கொண்டிருந்தனர். இப்போது அவ்வளவு பணத்தையும் இழந்து போய் நிற்கின்றனர்
என்று மறைமுகமாக பெயர் குறிப்பிடாமல் விமர்சனம் செய்தார்.
இந்த சந்திப்பில் ஜப்பான் விமான சேவை நிறுவனத்துடனான ஏர் ஏசியாவின் இணைந்து
செயல்பட்டது தோல்வி அடைந்தது பற்றி பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க,
நீங்கள் நிறைய மனிதர்களை சந்தித்திருப்பீர்கள்..அவர்கள் நல்லவர்கள் என்று
நினைத்திருக்கலாம். ஆனால் பின்னால்தான் தெரியும்.. அந்த நபரால் எவ்வளவோ
பெரிய இழப்பு என்பதை.. ஜப்பான் நிறுவனமும் அப்படித்தான்..
ஒரு அழகான இளம் பெண்ணைப் போல்தான் தெரியும்.. ஆனால் படுக்கை அறைக்குப்
போனால் மோசமான அனுபவம்தான்.. அதனால்தான் விரைவிலேயே டைவர்ஸ் வாங்கிவிட்டோம்
என்றார்.
தொடர்ந்து ரத்தன் டாடா பற்றி கேள்வி எழுப்ப, நல்ல மனிதர்.. அவருடன் இணைந்து செயல்படுவது நல்ல அனுபவம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக