அந்த நபரின் பெயர் உஜ்ஜால் உபாத்யாய். இவர் ஆரம்பத்தில் படு சாதாரணமான மனிதராக இருந்தவர். அதாவது மணல் லாரி உரிமையாளராக மட்டுமே இருந்தவர். இந்திய நிலக்கரிக் கழகத்திற்கு மணல் லோடு அனுப்பி வரும் சாதாரண சப்ளையர் மட்டுமே. ஆனால் இன்று இவருடைய நிறுவனமான இஎம்டிஏ (Eastern Mineral and Trading Agency) இன்று இந்தியாவிலேயே 3வது மிகப் பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமாக திகழ்கிறது என்பது ஆச்சரியத்திலும் பெரும் ஆச்சரியமாகும்.
1981ம் ஆண்டு தனது தந்தை நிறுவிய மணல் சப்ளை நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார் உஜ்ஜால். இந்திய நிலக்கரி கழகத்திற்கு தொடர்ந்து மணல் சப்ளை செய்து வந்தார். இன்று இவரிடம் மொத்தம் 14 நிலக்கரி சுரங்கங்கள் இருக்கிறதாம். இங்கு 1.7 பில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.
இந்திய நிலக்கரி கழகம், நவீன் ஜின்டாலின் குழுமம் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில் உஜ்ஜாலின் நிலக்கரி நிறுவனம் விளங்குகிறது என்பது வியப்புக்குரிய ஒன்று.
இந்த 14 நிலக்கரி சுரங்கங்களும் பணம் காய்ச்சி மரமாக மாறியுள்ளது உஜ்ஜாலுக்கு. நிலக்கரி பிசினஸுக்கு மாறிய பின்னர் இந்த முன்னாள் மணல் லாரி உரிமையாளரின் காட்டில் பண மழைதான். 2011-12 நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் ரூ. 1000 கோடியாக இருந்தது. அதில் நிகர லாபம் ரூ. 50 கோடியாகும்.
இந்த உஜ்ஜாலுக்கு பெரும் பெரும் புள்ளிகள் எல்லாம் ரொம்பப் பழக்கம். மறைந்த முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் மகன் சந்தன் பாசுவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர், நெருக்கமானவர். மேற்கு வங்கத்தில்தான் உஜ்ஜாலின் நிலக்கரி சுரங்க வாழ்க்கை ஜெகஜோதியாக சுடர் விட்டு பிரகாசிக்க ஆரம்பித்து இன்று வியாபித்து நிற்கிறது.
இவருக்கு மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தனியாக ஒரு கார்ப்பரேட் பாக்ஸே உள்ளதாம். மேலும் கொல்கத்தாவில் லம்போர்கினி காரை வைத்திருக்கும் ஒரே நபர் இவர்தானாம்.
படு சாதாரணமான நிலையிலிருந்து மிகப் பெரிய அளவுக்கு உயர்ந்தவர் இந்த உஜ்ஜால். இதுதான் பலரையும் வியப்பி்ல் ஆழ்த்தியுள்ளது. பல கேள்விகளையும் கிளப்பியுள்ளது.
என்ன, பதில்தான் வராது...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக