புதன், 6 ஜூன், 2012

இந்த படம் நன்னா போகலையாமே? சேறு வீசும் திரை வியாபாரிகள்

வயசுப் பிள்ளைகளோடு பெற்றோரும் பார்க்க வேண்டிய வழக்கு எண் : 18/9

 சமா.இளவரசன்

தப்பித்தவறி ஒரு நல்ல படம் வந்துவிட்டால், அதை மக்கள் ரசித்து வெற்றி தந்துவிட்டால், அதைத் தொடர்ந்து அது டிரண்ட் என்று உருவாகி எங்கே நமது கமர்சியல் படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் எப்போதுமே தமிழ் சினிமா வியாபாரிகளுக்கு உண்டு. திடீரென்று நடிகர்கள் நல்ல படங்களில் நடிக்கத் தொடங்கி அது தொடர்ந்து விட்டால் என்னாவது? நமக்குத் தெரிந்த மசாலாக்களை எப்படி மக்கள் மண்டையில் அரைப்பது என்ற கவலையெல்லாம் அவர்களை வாட்டி வதைக்கும். அதனால் தான் 1987களில் ரஜினியும், கமலும் நல்ல படங்களைத் தேடி கொஞ்சம் நகர்ந்த பொழுதும், பின்னாளில் விக்ரம் அது போல் செய்யத் தொடங்கியபோதும் தெளிவாக அவர்களை கமர்சியல் பக்கம் நகர்த்தி வைத்துக் கொண்டது. இந்தச் சதிச் சிந்தனையின் கோரத்தை நம்மால் வழக்கு எண் 18/9  திரைப்படத்தின் மீதான கருத்துப் பரப்பலில் புரிந்துகொள்ள முடிந்தது. மாற்றுசினிமாவை நோக்கிய தடத்திலும், மக்கள் ரசிக்கத்தகுந்த சில இனிப்புகளைத் தடவி தெளிவாக மக்களைச் சேரும் விதத்தில் வழங்குவதிலும், அதனையும் மிகக் குறைந்த செலவில் படமாக்கிக் காட்டுவதிலும் திறமையோடிருக்கும் பாலாஜி சக்திவேலின் மீதும், அவரது படைப்புகளின் மீதும் அத்தனை வன்மம் இருக்கிறது திரைப்படத்தைக் கலையாகப் பார்க்காத தமிழ் சினிமா வியாபாரிகளுக்கு!
 இந்த படம் நன்னா போகலையாமே சேறு வீசும் திரை வியாபாரிகள் 

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இப்படம் ஒன்னும் விக்கல போலிருக்கே..., தேறலையாமே, படு மோசமா இருக்காம்.. சுத்தமா தேறலையாம் செகண்ட் ஹாஃப்.. காசை வீணடிச்சிட்டாங்க என்றும், படம் வெளிவந்து மக்கள் வரவேற்பைப் பெற்ற பிறகும் கூட அதெல்லாம் ரொம்ப நாள் ஓடாதுங்க... என்றும் இவர்கள் செய்த பிரச்சாரத்தை தேர்தல் பிரச்சாரத்தில் கூடப் பார்க்க முடியாது. இந்த வியாபாரிகள் வீசிய சேறுகளையெல்லாம் பற்றி கவலைபடாமல் தன் பாணியில் பிறருக்கும் வழிகாட்டும் வண்ணம் படம் தந்திருக்கிறார் வழக்கு எண் 18/9 -ன் இயக்குநர்.

*****
அன்றாடம் செய்தித்தாள்களில் பார்ப்பதனால் கிட்டத்தட்ட சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்ட செய்திகளைத் தான் உறைக்கும்படி சொல்லியிருக் கிறார் பாலாஜி சக்திவேல். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றினுள் ஆசிட் வீச்சினால் கொடூரமாகத் தாக்கப்பட்ட ஓர் இளம்பெண் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுகிறாள். அவளுக்கு சிகிச்சை நடந்துகொண்டிருக்கும் அதே நேரம் அப்பெண்ணின் தாயாரிடம் விசாரணை செய்கிறது காவல்துறை. பிளாட்பாரக் கடையில் வேலை பார்க்கும் ஒரு பையன் தான் அடிக்கடி தன் பெண்ணிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறான் என்று அந்த பெண்ணின் தாய் சொல்ல, அவனை மெதுவாக அழைத்து விசாரிக்கத் தொடங்குகிறது போலீஸ். நடந்தது என்னவென்றே தெரியாத வேலு என்ற அந்த இளைஞன் தன் வாழ்க்கையைச் சொல்ல படம் விரிகிறது.

பிளாட் போட்டு விற்கப்பட்டுவிட்ட விவசாய நிலங்களுக்கு மத்தியில்,  கடன் வாங்கி விவசாயம் செய்து நட்டப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழை விவசாயியான தன் தந்தையின் கடனை அடைப்பதற்காக குழந்தைத் தொழிலாளியாக வட இந்தியாவில் பணியாற்றியவன் வேலு. பெற்றோர் இறந்த தகவலும் கூட தன்னிடம் மறைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டதை அறிந்து அங்கிருந்து தப்பி, சென்னை வந்து சேர்கிறான். ஒரு பாலியல் தொழிலாளியின் உதவியுடன் தெருவோர சாப்பாட்டுக் கடையில் வேலைக்குச் சேர்ந்து அங்கேயே தங்கி, தன் பிழைப்பை நடத்தும் வேலுவுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீட்டுவேலைக்குச் செல்லும் இளம்பெண் ஜோதிக்கும் நிகழும் யதார்த்தமான மோதலும், பின்னர் ஜோதியின் நற்குணம் கண்டு வேலுவுக்கு ஒரு தலையான காதலும் உருவாகிறது. எதற்காக அழைக்கப்பட்டோம் என்றே தெரியாமல் தன்னுடைய வாழ்க்கையை காவல்துறை விசாரணையில் சொல்லிவிட்டு வேலு காத்திருக்க, அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பள்ளி மாணவி ஆர்த்தி, இவ்வழக்கு தொடர்பாக, தான் சொல்ல வேண்டியிருப்பதாகக் கூறி சில தகவல்களைச் சொல்லுகிறாள்.
இப்போது கதை பன்னிரண்டாம வகுப்புப் படிக்கும் ஆர்த்தி, அவள் இருக்கும் குடியிருப்பில் வசிக்கும் மற்றொரு இளைஞன் தினேஷ் ஆகியோரை மய்யப்படுத்திச் செல்கிறது. தனியார் பள்ளி உரிமையாளரான பெண் ஒருவரின் மகன் தினேஷ், தனது பகட்டு, பணக்காரத்தனம் இவற்றைக் காட்டியும், செல்போன் பரிசளித்தும் ஆர்த்தியை மடக்க முயற்சிக்க, உடன் படிக்கும் வட இந்திய மாணவியோ, பணக்காரப் பையன்னு சொல்ற... இப்போதைக்கு ஓகே சொல்லு.. பிடிச்சிருந்தா கண்டினியூ பண்ணு... இல்லைன்னா கட் பண்ணிடு என்று அவனைக் காதலிக்கச் சொல்லி தூண்டிவிட்டும் மாட்டாமலிருக்கிறாள் ஆர்த்தி. பின்னர் தனிமையில் கடற்கரைக்கு அழைத்துச் சென்று, தான் நேர்மையானவன் என்பது போல் தினேஷ் செய்யும் பாவனைகளில் மயங்கும் ஆர்த்தி, தானும் காதலிப்பதாகச் சொல்ல யத்தனிக்கிறாள். அப்போது தினேஷின் செல்பேசியில் தான் ஆபாசமாகப் படம் பிடிக்கப்பட்டிருப்பதும், அதேபோல் பல காட்சிகள் இருப்பதையும் கண்டு நடுங்கி, அவனிடமிருந்து உடனடியாக விலகுகிறாள். அவளிடம் தன்னுடைய செல்பேசியின் நினைவு அட்டை மாட்டி விட்டதையும், தன்னைப் பற்றி அவள் தெரிந்து கொண்டுவிட்டாள் என்பதையும் உணரும் தினேஷ் அவளைக் கொல்ல முயற்சிக்கிறான். ஓரிரு முயற்சிகளில் அவள் தப்பிவிட, ஆசிட் வீசி தாக்குகிறான். இந்தத் தாக்குதலில் தான் ஆர்த்திக்கு பதிலாக தவறுதலாக ஜோதி மாட்டிக் கொள்கிறாள்.
இந்தத் தகவல்களை ஆர்த்தி காவல்துறையிடம் விவரித்து தினேஷ் தான் உண்மைக் குற்றவாளி என்பதை எடுத்துக் கூறுகிறாள். ஆனால் அரசியல்வாதிகளின் அனுசரணையும் பணமும் படைத்த தினேஷின் அம்மாவிடமிருந்து பணத்தைக் கறந்து, தினேஷை விடுவிக்கத் திட்டமிடுகிறார் காவல்துறை அதிகாரி குமரவேல். ஜோதிக்கு ஏற்பட்டுள்ள தாக்குதலைக் கண்டு கதறும் வேலுவிடம், ஜோதிக்கு மருத்துவம் செய்ய ஆகும் செலவை தினேஷிடமிருந்து தான் பெற்றுத் தந்து அவளைக் குணப்படுத்துவதாகவும், அதற்குப் பிரதிபலனாக குற்றத்தை வேலு ஒப்புக் கொள்ளவேண்டும் என்று நயவஞ்சகமாகப் பேசி வேலுவைக் குற்றவாளியாக்கி சிறைக்கு அனுப்பிவிடுகிறார் காவல்துறை அதிகாரி.
தமிழ் சினிமாவின் கமர்சியல் படங்கள் என்று சொல்லப்படுவனவற்றிற்கு ஏற்ற கதை. ஒன்றுக்கு இரண்டாகக் காதல். அதுவும் இளமை துள்ளும் பள்ளி வயதினரின் காதல். போதாக்குறைக்கு செல்பேசியில் ஆபாசப்படம், கிளுகிளு எம்.எம்.எஸ். என்று கவர்ச்சிக்கும் பஞ்சமில்லாத கதைக் களம். இதை வைத்துக் கொண்டு அள்ளிவிடலாம் காசை! அவிழ்த்துவிடலாம் அனைத்தையும்! அதற்குக் காரணம் இருக்கவே இருக்கிறது கதையில்! கதைக்கு தேவையென்றால் நான் எப்படியும் நடிப்பேன் என்று நடிகையையும் பேச வைத்து விளம்பரம் செய்துவிடலாம். இத்தனை வசதிகள் இருந்தும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற இடத்தில் தான் முழுநிறைவான கைத்தட்டலைப் பெறுகிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். அவரது இந்த முயற்சிக்கு தன்னுடைய முதலைப் போட்டு, பொறுமையாகக் காத்திருந்து நல்ல படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு நிச்சயம் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களைச் சொல்லவேண்டும். ஒரு படத்தில் சமூகத்திற்கு தேவையான இத்தனை செய்திகளா? பட்டா போடப்படும் விவசாய நிலங்கள், கடன் தொல்லையால் சிறுநீரகத்தை விற்கும் அவலம், குழந்தைத் தொழிலாளர் கொடுமைகள், அழிந்து வரும் கூத்துக்கலை, நசிந்து வரும் கூத்துக் கலைஞர்கள்,  இளம் பிராயத்தினரின் பாலியல் ஈர்ப்பு, கையில் செல்பேசியுடனே அலையும் பிஞ்சுகளின் மனதில் தோன்றும் விபரீதம், செல்பேசி அவசியம் எனக் கருத வைக்கும் உலகமயமாக்கல் உருவாக்கியிருக்கும் நடுத்தரவர்க்க மனநிலை, காதல் என்ற கவர்ச்சியான வார்த்தை, அது உருவாக்கும் மாயத்தோற்றம், தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளை, அரசியல் ஆதிக்கம், எளிய மக்களின் மீது பொய் வழக்குகளப் போட்டு அவர்களைக் குற்றவாளிகளாக்கும் காவல்துறையின் கேடுகெட்ட போக்கு... இன்னும் துளித்துளியாய் நறுக்கென்று ஊசி போல் எத்தனை செய்திகள்! ஆனால் இதில் எதுவும் திணிக்கப்பட்டது போல் தெரியாமல், கருத்து சொல்வது போல் அமையாமல் வெகு இயல்பாக நம் மனதில் பதியவைக்கும் வண்ணம் உருவாக்கியிருப்பதில் தெரிகிறது திரைக்கதையின் வலு. பள்ளிக் கொள்ளை பெண்ணின் அறையில் பின்புறத்தில் இருக்கும் சாமியார் நித்தியின் படம் மங்கலாகக் காட்டப்பட்டாலும், ஒரே புகைப்படத்தை வைத்து அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்திவிட்டார்கள். காதலை மறுக்கும் பெண்ணா? அடிறா அவள... உதை டா அவள.. விட்றா அவள... என்றோ, வேணாம் மச்சான்... வேணாம் இந்த பொண்ணுங்க காதலு... என்றோ தண்ணியடித்து திட்டிவிட்டு மட்டையாவதும், ஒய் திஸ் கொலவெறி என்று பெண்ணின் மீது குற்றங்களைச் சுமத்தித் திரிவதும் பெண்களைக் காயப்படுத்தி இளைஞர்களைக் குஷிப்படுத்த, (வேறு வழியில்லாமல்) திரைத்துறையினர் செய்யும் மினிமம் ஆசிட் வீச்சுகள். ஆனால் தமிழகத்தின் அன்றாட செய்திகளில் காதலை மறுத்த பெண்ணுக்குக் கத்திக்குத்தி, கழுத்தறுப்பு, ஆசிட் வீச்சு என்று வருபவை எல்லாம் கொஞ்சம் சீரியஸ் அட்டெம்ப்ட், அவ்வளவுதான். மற்றபடி இவற்றுக்கும் அவற்றுக்கும் என்ன வித்தியாசம்? காதலிப்பதும், காதலை மறுப்பதும் ஏன் என்பதையோ, அது தனிப்பட்ட விருப்பம் என்பதையோ, அதற்கான காரணிகள் குறித்தோ என்றுமே தமிழ் சினிமா பேசியதில்லை. அவற்றை நாமும் இளைஞர்களுக்கு சொல்லித் தருவதில்லை. இப்போதெல்லாம் 25, 30 வயதினரின் காதல், கல்லூரிக் காதல்கள் கூட சொல்லபப்டுவதில்லை படங்களில். அதெல்லாம் பழையதாகிவிட்டது.
பள்ளிக் காலத்து காதல் தான்! அது ஏற்படுத்தும் விளைவு எப்படியிருக்கும் என்பதை நாம் செய்திகளின் வழியாக உணரமுடிகிறதல்லவா? இந்த அவலங்களையும், அது குறித்து நாம் கொள்ள வேண்டிய கவலைகளையும் தான் எடுத்துக் காட்டுகிறது இந்தப் படம். மண்ணின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறேன். மண்ணின் மைந்தர்களைப் பதிவு செய்கிறேன் அந்தந்த பகுதிகளின் உயர்ஜாதி என்று தங்களை நம்பிக் கொண்டிருப்போரின் வாழ்க்கை தான் இது வரை தமிழ் சினிமாவில் பதிவுசெய்யப்பட்டி ருக்கிறது. அதேபோல சென்னையைப் பதிவு செய்கிறேன்.. வட சென்னை மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறேன் என்று வெறும் கத்தி, கபடா, சைக்கிள் செயின் அளவிலான கழுத்துச் சங்கிலிகளைப் பதிவு செய்துவிட்டு, சென்னை மீதான பயத்தைத் தோற்றுவித்திருக் கிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். ஆனால் அவர்கள் பதிவு செய்யத்தவறியது சென்னையில் அருகருகே அமைந்திருக்கும் இரு வேறுபட்ட மக்களின் வாழ்நிலை. பிளாட்பார வாழ்க்கை என்பது சென்னையின் மிக முக்கியமான அங்கம். தமிழகத்தின் ஏதேதோ பகுதிகளிலிருந்து வேலைக்காக வந்து, பிளாட்பாரங்களையே வசிப்பிடமாகக் கொண்டவர்களும், அதே பிளாட்பாரங்களையொட்டியே பளிங்கு மாளிகைகளுக்குள் சொகுசாக வாழ்பவர்களும் நிறைந்த விசித்திரக் கலவைதான் சென்னை. தனது காதல் திரைப்படத்தில் மதுரையினை வெகு இயல்பாக பதிவு செய்த இயக்குநர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண்: 18/9 சென்னையின் இந்த விசித்திரக் கலவையைப் படமாக்கியிருக்கிறது. ஆனால் கடந்த படத்தைப் போலவே களத்தைப் பதிவு செய்தல் என்பது இயக்குநரின் முக்கியமான குறிக்கோளாக இல்லாவிட்டாலும், இயல்பான கதையோட்டத்தினாலும், அதற்கேற்ற பின்புலங்களைத் தெளிவாக உருவாக்கியிருப்பதாலும் தானாகவே களம் சரியாகப் பதிவாகிவிடுகிறது.
திரைப்படம் என்றாலே பலமுறை பார்த்த முகங்களுக்குள் புதிய கதாபாத்திரங்களைப் பொருத்திக் கொண்டு பார்க்கும் கஷ்டம் இருக்கும். ஆனால் நாயகன், நாயகி தொடங்கி படத்தின் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் புதுமுகங்களைத் தேர்வு செய்து, அவர்களைத் திறம்பட நடிக்கவும் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகரும் அவர்களுக்குரியதை தெரிந்து செய்திருக்கிறார்கள். குறிப்பாக கூத்துக் கலைஞன் சின்னச்சாமியாக வரும் சிறுவன், இன்ஸ்பெக்டர் குமாரவேல், ஜோதியின் தாய், பாலியல் தொழிலாளி ரோஸி என்று துணைக் கதாபாத்திரத் தேர்விலும் அத்தனை நேர்த்தி. படத்தை இன்றைய புதிய தொழில்நுட்ப வசதிகளோடு டிஜிட்டல் முறையில் தெளிவாக பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன், உறுத்தாத பாடலையும் பொருத்தமான பின்னணி இசையையும் வழங்கிய பிரசன்னா ஆகியோரோடு, படத்தொகுப்பாளராக அறிமுகமாகியிருக்கும் கோபி கிருஷ்ணாவும் படத்தின் மிரட்டலான புதுமையான ஆக்கத்திற்கு பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். பாலாஜி சக்திவேல் என்ற இந்த இயக்குநரின் மீது தமிழ்த்திரை ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு. காதலைக் கொண்டாடியவர்கள் இந்த வழக்கு எண்ணையும் நம்பிக்கையோடு எதிர் கொண்டார்கள் என்பதைத் தான் இப்படத்தின் வெற்றி நமக்கு உணர்த்துகிறது. நல்ல படங்களைத் தர போராடலாம்; காலம் எடுத்துக் கொள்ளலாம்; மக்கள் காத்திருப்பார்கள் என்பதை நமது படைப்பாளிகளுக்கும் இப்படம் சொல்கிறது.
ஊருக்கு உழைச்சு உழைச்சு வீணாப்போனது தான் மிச்சம் என்று ஜோதியின் தந்தை குறித்து அவளது தாய் சலித்துக் கொள்ளும்போது, தந்தையின் படத்துக்கருகில் கம்யூனிசப் புத்தகங்கள் காட்டப்படுகின்றன. இது எதற்கு என்று தொடக்கத்தில் ஒன்றும் புரியாதவர்களுக்கு, கடைசியில் ஜோதியின் செயலுக்கு அடிப்படை உணர்வான போராட்ட குணத்துக்குக் காரணம் இதுவே என்பதை உணர்த்துவதும் இயக்குநரின் சிந்தனையை நமக்குக் காட்டுகிறது. அதைவிட இன்றைய சூழலில் ஏன் முற்போக்குக் கருத்துகளும், போராட்ட உணர்வும் அடித்தட்டு மக்களுக்கு அவசியமாகிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக பதின் பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் இவ்விசயங்களைப் பேசத் தயங்கும் பெற்றோர் இருக்கும் நம் சமூகத்தில் அவசியம் அழைத்துச் செல்ல வேண்டிய படம். இனிமேலாவது அத்தகைய மௌனங்களைக் கலைத்து விட்டு அவர்களிடம் இயல்பாகப் பேசிட வேண்டும் என்று நேரடியாகச் சொல்லாவிட்டாலும் அதன் அவசியத்தை உணர்த்தும் படம்.
 http://www.unmaionline.com/new/

கருத்துகள் இல்லை: