திங்கள், 4 ஜூன், 2012

Bhawal சமஸ்தானத்து ராஜகுமாரன் திரைப்படத்தை விட மர்மம் நிறைந்த இளவரசனின் உண்மை கதை


மர்ம சந்நியாசி – 


ராஜ்குமார் இறந்துவிட்டார் என்று டார்ஜிலிங்கிலிருந்து பாவல் சமஸ்தானத்துக்கு தந்தி அனுப்பப்பட்டது. குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிக்கச் சென்ற பாவல் ஜமீனின் இரண்டாவது ராஜகுமாரன். ராஜ்குமார் ராமேந்திர நாராயண ராய் என்பது முழுப்பெயர்.  மேஜோ குமார் என்றும் அழைக்கப்படுவார். பாவல் ஜமீன் டார்ஜிலிங்கிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜமீனைச் சேர்ந்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என்று யாரும் இன்னும் வந்து சேரவில்லை. இன்னும் அவர்களுக்குத் தந்தியே கிடைக்கவில்லை. இருப்பினும் இறந்த இராஜ்குமாரை அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
1909ம் ஆண்டு, மே மாதம் 8ம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் அவர் இறந்துபோனார். அக்கம் பக்கத்தில் யாராவது பிராமணர்கள் இருக்கிறார்களா என்று விசாரித்து வர, மேஜோ குமாரின் சிப்பந்திகள் அனுப்பப்பட்டனர். இறந்தவர் பிராமணர் என்பதால், பிராமண முறையில் சடங்குகள் செய்யவேண்டும். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. அதனால் என்ன, பிணம் அடக்கம் செய்யப்பட்டாகவேண்டும். இரவு 9 மணி. உடல் பாடையில் ஏற்றப்பட்டது. அடக்கம் செய்ய செல்லவிருந்த கும்பலில் சுமார் 20 பேர் இருந்தனர். பங்களாவின் ஒரு அறையில் மேஜோ குமாரின் மனைவி பிபாவதி தேவி ஆற்றமுடியாமல் அழுதுகொண்டிருந்தாள். அவளுக்கு 19 வயதுதான் ஆகியிருந்தது.

மேஜோ குமார் இறக்கும் போது அவனுக்கு 25 வயது. இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மற்றும் வைசிராயான மிண்டோ பிரபு வரும் நேரம் அது. அதனால் டார்ஜிலிங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தடபுடலாக இருந்தன. ஆங்கிலேயர்களால் இந்தியாவின் கோடை வெப்பத்தை தாங்கமுடியவில்லை. அருகிலிருந்த மலைவாசஸ்தலத்திற்குச் சென்று கோடைகாலத்தை கழித்தனர். அவர்களுடன் அரசாங்க ஊழியர்களும் சென்றனர். ஏன் ராஜ்ஜியத்தின் அரசாங்கமே கோடைகாலங்களில் மலைவாசஸ்தலங்களில்தான் நடைபெற்றது. முக்கிய சாலைகளில் கூட்டமாக செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் (சுதந்தரப் போராளிகள் ஆங்காங்கே ஆங்கிலேயர்கள் மீதும், அவர்களின் நிர்வாகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியால் இந்த சிறப்பு ஏற்பாடு), மேஜோ குமாரின் உடல் இடுகாட்டுக்கு வேறொரு வழியில் எடுத்துச் செல்லப்பட்டது. அது சுற்று வழி, மேலும் தூரமும் கூட. ஆனால் மேஜோ குமாரை அன்றே தகனம் செய்யவேண்டும் என்பதில் கும்பல் உறுதியாக இருந்தது. அந்த கும்பலுக்கு தலைமைதாங்கி, அனைத்து காரியங்களையும் மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்தவர் மேஜோ குமாரின் மைத்துனர் மற்றும் பிபாவதி தேவியின் அண்ணனான சத்தியேந்திர பானர்ஜி (சத்திய பாபு என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்).
நகர்புறத்தைத் தாண்டி மேஜோ குமாரின் இறுதி ஊர்வலம் சென்றது. டார்ஜிலிங் இமயமலைத் தொடர்ச்சியில் பயணம் தொடர்ந்தது. பச்சைப் பசேல் என்ற புல்வெளி. அதைத் தொடர்ந்து அடர்ந்த காடுகள். மேகங்கள் மலைகளுடன் எப்பொழுதும் உரசியும் வளைந்தும் சென்று கொண்டிருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் மழை வரும். இரவு நேரம் என்பதால் குளிர் அதிகமாக இருந்தது.  இடுகாட்டுக்கு அருகில் வரும் தருவாயில், சீற்றத்துடன் புயல்காற்று வீசத் தொடங்கியது. அதற்குமுன் கண்டிராத பெருங்காற்று. கையில் எடுத்து வந்த விளக்குகளும், ஏற்றிவந்த தீப்பந்தங்களும் அணைந்துவிட்டன. அடிக்கின்ற காற்றில் ஒருவராலும் திடமாக நிற்கமுடியவில்லை. காற்றைத் தொடர்ந்து ஜோவென்று மழையும் கொட்டியது. ஒருவருக்கொருவர் தன் பக்கத்தில் மற்றவர் இருக்கிறாரா இல்லையா என்று கூட பார்க்கமுடியவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு கூச்சலும் குழப்பமும் நிலவியது.
உடனே சத்திய பாபு முடிவெடுத்தான். அங்கிருந்தவர்களிடம் தாங்கள் ஏந்தி வந்த மேஜோ குமாரின் உடம்பை பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்துவிட்டு, மழை நிற்கும் வரை பாதுகாப்பாக ஒதுங்கி கொள்ளுமாறு கூச்சல் போட்டான். சிப்பந்திகளும் அப்படியே செய்தனர். மேஜோ குமாரின் உடல், அந்த இயற்கைச் சீற்றத்தின் நடுவே பாதுகாப்பான இடம் என்று கருதப்பட்ட பகுதியில் கிடத்தப்பட்டது. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினார்கள். அங்கு தொலைவில் சில குடிசைகள் தென்பட்டன. அவையெல்லாம் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகளின் வீடுகள். ஆனால் அனைத்து வீடுகளும் பூட்டியே இருந்தன. அதனால் ஊர்வலத்தினர் அனைவரும் ஒரு பாறையின் தாழ்வாரத்தின் அடியில் ஒதுங்கிக் கொண்டனர்.
அடித்துப் பெய்த மழையுடன் அவ்வப்போது இடியும் மின்னலும் தாக்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மழை சற்று ஓய்ந்தது. எங்கும் மயான அமைதி. மழைநீர் மலைகளின் பாறைகளின் இடையே சிற்றோடையாக ஓடிக்கொண்டிருந்தது. அந்த நிசப்தத்தின் இடையில் மரக்கிளைகளிலிருந்து மழைநீர்த் துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன. தொப்பலாக நனைந்த இறுதி ஊர்வலத்தினர் அனைவரும் ஒன்று திரண்டனர். மேஜோ குமாரின் உடலைத் தேடினர்.
என்ன ஆச்சர்யம்! மேஜோ குமாரின் உடல் கிடைக்கவில்லை. செய்வதறியாமல் களைப்புடன் வீடு திரும்பினர். மேஜோ குமாரின் உடலை அடக்கம் செய்யவேண்டும் என்று தான் எடுத்த முயற்சி வீணாகிப்போனதை நினைத்து மனம் வருந்தினான் சத்திய பாபு. பங்களாவின் மேற்தளத்தில் உள்ள ஒரு அறைக்கு சத்திய பாபு சென்றான். கூடவே அவனுடைய நம்பிக்கைக்குரியவர்கள் நால்வரும் சென்றனர். அறைக்கதவு தாழிடப்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் நால்வரும் வெளியே வந்தனர்.
மே மாதம் 9 ஆம் தேதி, காலை 9 மணி அளவில் பங்களாவின் வாயிலில் ஒரு பாடை தயாராக கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் முழுதும் துணியால் சுற்றப்பட்ட ஒரு உடல் கிடத்தப்பட்டது. பங்களாவில் இருந்தவர்களும், அக்கம்பக்கத்தினரும் கிடத்தப்பட்ட உடலுக்கு மலர்வளையம் வைத்து நினைவு கூர்ந்தனர். பாடை தூக்கப்பட்டது. சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கூடவே 30 நபர்கள் சென்றனர். அதில் சில முக்கியஸ்தர்களும் இருந்தனர். குறிப்பிடும்படியாக பர்தவான் சமஸ்தானத்தின் ராஜாவும் அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். பர்தவானும் பாவலைப் போல ஒரு பெரிய ராஜ்ஜியம். இறுதி ஊர்வலம் செல்லும் வழியெல்லாம் ஏழைகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் தானம் வழங்கப்பட்டது. சீருடை அணிந்த கூர்காக்கள் ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றனர். சமுதாயத்தில் உயர்ந்த மனிதர் ஒருவர் இறந்துவிட்டார் என்பதைக் காட்டுவதற்காக ஒரு மணி நேரத்துக்கெல்லாம் மேஜோ குமாரின் உடல் இடுகாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
மேஜோ ராஜாவின் உடல் தீக்கிரையாக்கப்படுவதற்கு முன்னர் செய்யப்படவேண்டிய சடங்குகளெல்லாம் சரியாகச் செய்யப்படவில்லை.  உடல்மீது சுற்றப்பட்ட துணி கடைசிவரை அகற்றப்படவில்லை. மேஜோ ராஜாவின் முகத்தை அங்கு குழும்பி இருந்தவர்கள் யாரும் பார்க்கவில்லை. உடல் குளிப்பாட்டப்படவில்லை. உடலில் நெய் பூசப்படவில்லை. உடலுக்கு புதிய துணி அணிவிக்கப்படவில்லை. சிதைக்கு தீ மூட்டுவதற்கு முன்னர், அங்கு உள்ளவர்களுக்கு பிண்டம் வழங்கவேண்டும். அதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், மேஜோ ராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. குறிப்பிடப்படவேண்டிய விஷயங்கள், இறுதிச் சடங்கை புரோகிதர் நடத்தவில்லை; மேஜோ குமாரின் அஸ்தியும் எடுத்துச்செல்லப்படவில்லை.
வீடு திரும்பிய சத்திய பாபு, ‘மேஜோ குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது’ என்று ஜெய்தேபூருக்கு தந்தி அனுப்பினான். கல்கத்தாவிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிக்கையான ஸ்டேஸ்மெனில் மேஜோ குமாரின் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது. மேஜோ குமாரின் சொந்த ஊரில் நடக்க வேண்டிய ஏனைய சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு, டார்ஜிலிங்கிலிருந்து அனைவரையும் புறப்படச் செய்தான் சத்திய பாபு. ஜெய்தேபூருக்குச் சென்றவர்களில் அஷுதோஷ் கோஷ் என்ற மருத்துவக் கல்லூரி மாணவனும் ஒருவன். அவன் பாவல் அரண்மனையின் ஆஸ்தான மருத்துவரின் மகன். மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். மேஜோ குமார் டார்ஜிலிங் செல்லும் போது, அவனுடன் சென்ற கூட்டத்தில் அஷுதோஷ் கோஷும் ஒருவன். அவனுக்கும் இந்த வழக்கில் முக்கியப் பங்கு இருக்கிறது. அதைப் பின்னர் பார்ப்போம். இப்பொழுது பாவல் ராஜ்ஜியத்தைப் பற்றி பார்த்துவிடுவோம்.
0
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த வளமான மாகாணம் வங்கதேசம். சிப்பாய் கலகத்துக்குப் பிறகு, ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியை ஆரம்பித்துவைத்து, அதிகளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வங்காளிகள்தான். புரட்சியை ஒடுக்கவேண்டியே, அப்போதைய இந்திய கவர்னராக இருந்த கர்ஸன் துரை, 1905ம் ஆண்டு மத அடிப்படையில் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தான். இந்துக்கள் அதிகமாக இருந்த மேற்குப் பகுதியை மேற்கு வங்காளமாகவும், முஸ்லீம்கள் அதிகமாக இருந்த கிழக்குப் பகுதியை கிழக்கு வங்காளமாகவும் பிரித்துவைத்தான். மேற்கு வங்காளம் மற்றும் இந்தியாவின் அப்போதைய தலைநகரம் கல்கத்தா. கிழக்கு வங்காளத்தின் தலைநகரம் டாக்கா.
பாவல் ராஜ்ஜியம் கிழக்கு வங்காளத்திலேயே உள்ள ஒரு பெரிய ஜமீன். சுமார் 1500 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதன் தலைநகரம் ஜெய்தேபூர். டாக்காவிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ளது இந்த ஜெய்தேபூர். சுமார் 2300 கிராமங்களை உள்ளடக்கியது. இந்த ஜமீனில் சுமார் 5 லட்சம் மக்கள் வசித்து வந்தனர். பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். இவர்களுக்குப் பிரதான தொழில் விவசாயம். மக்கள் ஆண்டொன்றுக்கு ஜமீனுக்கு செலுத்தி வந்த வரி 10 லட்சம் ரூபாய்க்கும்மேல். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தத் தொகை அளப்பரியது. மக்களுக்கு தங்கள் ஜமீன் தான் கோயில், அதை நிர்வகித்து வரும் ராஜாதான் தெய்வம்.
பாவல் அரண்மனையைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள், நூற்றுக்கணக்கான பழத்தோட்டங்கள், அடர்ந்த காடுகள், வளைந்து நெளிந்து ஓடும் ஆறுகள், போலோ மைதானம், கிரிக்கெட் மைதானம், கால்பந்து மைதானம், குதிரை கொட்டம்,  யானைகள் என ஒரு ராஜ்ஜியத்துக்கே உரித்தான அனைத்து சங்கதிகளும் இருந்தன.
பாவல் அரண்மனையின் பெயர் ராஜ்பாரி. இந்த அரண்மனை சுமார் 30,000 நீட்டளவில் கட்டப்பட்டது. இந்த அரண்மனை இரண்டு தளங்களைக் கொண்ட பத்து தொகுப்புகளைக் கொண்டது. ஏகப்பட்ட அறைகளை உள்ளடக்கியது. ஐரோப்பிய விருந்தாளிகள் வந்தால், அவர்களைத் தங்க வைப்பதற்காகவே தனியே அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. பாவல் ராஜ்ஜியத்துக்கு ஆங்கிலேய துரைகள் வேட்டையாடுவதற்காக அடிக்கடி வருவது வழக்கம். அவர்களை வேட்டைக்கு அழைத்துச் செல்வது மேஜோ குமார்தான். அரண்மனையில் நடனம், நாட்டியம் மற்றும் இன்ன பிற கலைநிகழ்ச்சிகள் நடப்பதற்காக இரண்டடுக்கு கட்டடம் கட்டப்பட்டது. அரண்மனையில் பல அடுப்பங்கறைகள் உள்ளன. அசைவம் சமைப்பதற்கென்றே தனியாக ஒரு பெரிய அடுப்பங்கறை உண்டு. அரண்மனையைச் சுற்றி ராஜ்ஜிய நிர்வாகத்துக்கான அலுவலகங்கள், கருவூலம், அரண்மனைக்கான மருத்துவமனை, சிப்பந்திகள் தங்கும் விடுதி என பலவும் இருந்தன. அரண்மனையை நிர்வாகம் செய்ய ஏகப்பட்ட அலுவலர்கள் இருந்தனர். வெள்ளைக்கார அலுவலர்களும் இருந்தனர். இவர்களைத் தவிர, சேவை செய்வதற்காக ஆயிரக்கணக்கான சிப்பந்திகள், பாதுகாவலர்கள் மற்றும் இன்ன பிறர் நியமிக்கப்பட்டிருந்தனர். ஜமீனின் ராஜா ராஜேந்திர நாராயண ராய் 1901ம் ஆண்டு வாக்கில் இறந்துவிட்டார்.
ராஜாவின் மனைவியான ராணி பிலாஸ்மனியும் 1907ம் ஆண்டு இறந்துவிட்டார். மேஜோ ராஜாவுடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். சகோதரிகள் திருமணமாகிச் சென்றுவிட்டனர். தந்தை, தாய் இறந்த பிறகு, மூன்று சகோதரர்களும் ராஜ்ஜியத்திற்கு சொந்தக்காரர்களானார்கள். ராஜகுமாரர்கள் ஒவ்வொருவருக்கும் ராஜ்ஜியத்தில் மூன்றில் ஒரு பங்கு கிடைத்தது. மேஜோ ராஜாவிற்கு ஒரு அண்ணன், பெயர் ரானேந்திரா (சுருக்கமாக பாரா குமார் என்று அழைக்கப்பட்டான்). மேஜோ குமாரின் தம்பி ரபிந்திரா (சுருக்கமாக சோட்டா குமார் என்று அழைக்கப்பட்டான்).
நாம் வழக்கு விவகாரத்துக்கு மறுபடியும் வருவோம்.
0
ஜமீன் குடும்பத்தை நிர்வகிக்க, பேருக்குத்தான் மூன்று குமார்கள் இருந்தனர். மூவரும் பொறுப்பர்வர்கள். யார் சொல் பேச்சும் கேட்க மாட்டார்கள். முரட்டு சுபாவம் கொண்டவர்கள். படிப்பு சுத்தமாக ஏறவில்லை. ஊதாரிகளும்கூட. வாழ்க்கையை எப்பொழுதும் இன்பகரமாக கழிப்பதே தங்கள் கடமை என்று வாழ்ந்து வந்தவர்கள்.
மூவரில், மேஜோ குமாரைத்தான் அரண்மனையிலிருந்த அனைவருக்கும் பிடிக்கும். அவன் முரடனாக இருந்தாலும், சில நற்குணங்கள் படைத்தவனாக இருந்தான். அவனை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ளமுடியாது. தன்னுடைய மூன்று சகோதரிகளிடமும் அவன் பிரியமாக இருப்பான். அவனிடம் தலைமைப் பண்புகள் காணப்பட்டன. மேஜோ குமாரிடம் உறுதியான தன்மையும், அனைவரையும் வசீகரிக்கும் தோற்றமும் இருந்தது.
மேஜோ குமாருக்கு மிருகங்கள்மீது அலாதிப் பிரியம். அதனால் தன்னுடைய அரண்மனையிலேயே தனியாக ஒரு மிருகக்காட்சிசாலையை தோற்றுவித்து அதை திறம்பட நிர்வகித்து வந்தான். அந்த மிருகக்காட்சி சாலையில் புலி, சிறுத்தை, கரடி, நரி, குரங்கு, நெருப்புக் கோழி மற்றும் ஏனைய காட்டு மிருகங்களும் இருந்தன. மேஜோ ராஜாவின் செல்லப் பிராணி ஃபுல்மாலா என்ற பென் யானை. மேஜோ குமார் பிரமாதமாக குதிரை சவாரி செய்வான். அவன் காட்டு மிருகங்களை வேட்டையாடுவதில் வல்லவன். திறமையாக போலோ விளையாடுவான். பாரம்பரிய இந்திய சங்கீதம் மிகவும் பிடிக்கும். அதுவும் வங்காள மொழியில் உள்ள ஆன்மிகப் பாடல்கள் என்றால் மேஜோ குமாருக்கு உயிர். தபலா, சித்தார் மற்றும் கிளாரினெட் வாசிப்பதிலும் வல்லவன்.
மேஜோ குமார் ஒரு அற்புதமான அலங்கார ரதம் வைத்திருந்தான். அதில் அவன் தன் குதிரையைப் பூட்டி ராஜ்பாரி மைதானத்தை வலம் வருவான். அதைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஒருமுறை மேஜோ குமாருக்கும், டாக்காவின் நவாப் சலீமுல்லாஹ்வுக்கும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களின் ஆரவாரத்துக்கிடையே ரதப் போட்டி நடைபெற்றது. அதில் மேஜோ குமார் சர்வ சாதாரணமாக வெற்றி பெற்று, போட்டிக்கான 1000 ரூபாய்க்கான பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றான்.
இன்பமயமான வாழ்க்கை மேஜோ குமாருடையது. பகலில் போட்டி, வேடிக்கை, விளையாட்டு என்றால் இரவில் களியாட்டம். மேஜோ குமாருக்கு 16 வயது இருக்கும்போதுதான் அவனுக்குப் பலான அனுபவம் கிடைத்தது.  டாக்காவில் உள்ள ஒரு பிரபல விலைமகள் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டான். அவளுக்கு மேஜோ குமாரை விட இரண்டு மடங்கு வயது அதிகம். அவள், மேஜோ குமாருக்கு காமக்கலைகள் அனைத்தையும் கற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டாள். அவளும் மேஜோ குமாருக்கு ஐயம் திரிபுர கற்றுக்கொடுத்தாள். மேஜோ குமார் அனைத்தையும் சீக்கிரமாக கற்றுக்கொண்டுவிட்டான். விளைவு அவன் பெண் பித்தனாகிப் போனான். மேஜோ குமார் நித்தம் ஒரு விலை மாதரிடம் சென்றான். அரண்மனை முழுவதும் அரசல் புரசலாக மேஜோ குமாரின் நடவடிக்கையை பற்றித்தான் பேச்சு. இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று மேஜோ குமாரின் பாட்டி முடிவெடுத்தாள். கால்கட்டு போடுவதுதான் ஒரே வழி என்று அரண்மனையில் முடிவெடுக்கப்பட்டது.
கல்கத்தாவுக்கு அருகே உள்ள உத்தர்புரா என்ற ஒரு பிரபல ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பெண் பிபாவதி தேவி. அவளுக்கும் மேஜோ குமாருக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, வெகு விமரிசையாக 1902ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அரண்மனையே விழாக்கோலம் பூண்டது. திருமணம் முடிந்த பிறகும், மூன்று நாள்களுக்குக் குறையாமல் விருந்து பரிமாறப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வந்து விருந்தில் கலந்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு, பிபாவதி அதிகமாக தன் பிறந்த வீட்டில்தான் இருந்தாள். மேஜோ குமாரின் மூர்க்ககுணம் பிபாவதியை மிகவும் பயத்துக்குள்ளாக்கியது.
அரண்மனைக்கு நாட்டிய மங்கைகள் வருவதும், அவர்கள் தங்கள் நாட்டியத்தையும் இதர சாகசங்களையும் வெளிப்படுத்துவதும் தொடர்ந்தது.  அப்படியொரு நாட்டிய நிகழ்ச்சியில், மேஜோ ராஜாவைத் தன்னுடைய நளினத்தால் அதிகமாக கவர்ந்தவள் எலோகேஷி. அவளுக்கு 17 வயது. நல்ல அழகு. தாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு அவள் பிரமாதமாக ஆடினாள். மேஜோ குமாரும் அவளது நடனத்தால் சுண்டி இழுக்கப்பட்டான். பிறகென்ன, எலோகேஷிக்கு அரண்மனையிலேயே ஒரு அறை ஒதுக்கப்பட்டது. மேஜோ ராஜாவின் இதயத்தில் இடம்பிடித்த எலோகேஷிக்கு, ராஜாவின் அரண்மனையில் இடம் கிடைக்காதா என்ன? எலோகேஷி அரண்மனையில் குடியேறியதால், அரண்மனையில் ஒரே சலசலப்பு, கூச்சல், குழப்பம். வேறுவழியில்லாமல் மேஜோ குமார், எலோகேஷியை டாக்காவில் உள்ள பேகம்பசாரில் தங்க வைத்தான். பாவம் மேஜோ குமார், எலோகேஷியை பார்ப்பதற்காக 20 மைல் செல்லவேண்டியிருந்தது.
மேஜோ குமார் 1905ம் ஆண்டு சத்திய பாபுவின் தொந்தரவு தாங்கமுடியாமல் 30,000 ரூபாய்க்கு ஒரு ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்தான். அந்த பாலிசியில் தன்னுடைய மனைவியான பிபாவதி தேவியை நாமினியாக நியமனம் செய்தான். மேஜோ குமாருக்கு காப்பீடு வழங்கிய நிறுவனம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தது. அந்நிறுவனத்தின் தலைமையகம் எடின்பரோவில் இருந்தது. 30,000 ரூபாய்க்கு காப்பீடு எடுப்பது என்பது அந்தக் காலத்தில் பெரிய விஷயம். காப்பீட்டு பாலிசியை பெறுவதற்கு முன்னர் மேஜோ குமார் மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார். பாலிசி எடுப்பவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காக நடத்தப்படும் ஆய்வு இது. மேஜோ குமாரை பரிசோதித்தவர் டாக்டர் காண்டி. மருத்து சோதனையில் மேஜோ குமாரின் உடலில் உள்ள மச்சம் மற்றும் இதர அறிகுறிகள் எல்லாம் குறிப்பெடுக்கப்பட்டன.
1906ம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் ஜார்ஜ் கல்கத்தாவுக்கு வருகை தந்தார். அவரை வரவேற்க வங்கதேசத்தில் உள்ள ராஜாக்கள், நவாப்புகள் மற்றும் ஜமீன்தார்கள் கல்கத்தாவில் குழுமினர். பாவல் ராஜ்ஜியத்தை சேர்ந்த மூன்று ராஜகுமாரர்களும் கல்கத்தாவுக்குச் சென்றனர். கல்கத்தாவுக்குச் சென்ற மேஜோ குமார் தன்னுடைய லீலைகளை அங்கு தொடங்கினான். அங்கு அவனுக்கு பலதரப்பட்ட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மங்கைகள் கிடைத்தனர். மேஜோ குமார் எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாகப் பெண்கள் கிடைத்தனர். கூடவே அவன் எதிர்பார்க்காத ஒன்றும் கிடைத்தது. சிப்பிலிஸ் (syphilis) – மேக நோய். விரைவில், நோய் முற்றிப்போய் உடம்பெல்லாம் புண்ணாகி சீழ்பிடித்து அறுவறுப்பான ரணமாகிவிட்டது.
அந்த காலத்தில் சிப்பிலிஸை குணமாக்க பிரத்தியேக மருத்துவ சிகிச்சை முறையில்லை. இருக்கும் மருந்தை எடுத்துக்கொண்டால், குணமாக சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகும். சிப்பிலிஸ் நோயிலிருந்து மீண்டாலும் அது உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உடம்பிலுள்ள கொப்பளங்கள் ஆறினாலும், அந்த இடத்தில் நீங்கா வடு ஏற்படும். வடுக்கள் ஏற்பட்ட இடத்தில் இருக்கும் எலும்புகள் மற்றும் தண்டுவடம் கடினமாகி புறந்தள்ளியிருக்கும். மருத்துவர் ஒருவர் இம்மாதிரி வடுக்களைப் பார்த்தால், அது சிப்பிலிஸ் நோயால்தான் ஏற்பட்டிருக்கிறது என்று சரியாகக் கூறிவிடுவார். உடம்பில் காயம் ஏற்பட்டு அதனால் உண்டான வடுவுக்கும், சிப்பிலிஸ் நோயால் உருவான வடுவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சிப்பிலிஸ் கண்டவர்களுக்கு உடம்பின் பல பகுதிகளில் வெள்ளைத் தழும்புகள் ஏற்படும். குறிப்பாக கண்ணத்தில், வாய்ப்பகுதியில், நாக்கில் மற்றும் பிறப்புருப்பில்.  மூக்கின் இரண்டு நாசிகளுக்கும் இடையில் இருக்கும் எலும்பு கடினமாகி மூக்கு கருடமூக்கு போல காட்சியளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, சிப்பிலிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைப்பையில் (testicles) எவ்வித உணர்ச்சியும் இருக்காது. விரைப்பைக்கு அழுத்தம் கொடுத்தாலும் வலி எதுவும் இருக்காது.
மேஜோ குமாருக்கு சிசிக்சைகள் ஆரம்பிக்கப்பட்டன.
0
1909ம் ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்திலிருந்து கிச்சனர் துரை (இவர் இராண்டாம் உலக யுத்தம் நடந்த போது, இங்கிலாந்து அரசின் Secretary of State for war ஆக நியமிக்கப்பட்டார்). கல்கத்தாவுக்கு ஒருமுறை வருகை தந்தார். ஒரு ராயல் பெங்கால் புலியை எப்படியாவது வேட்டையாடவேண்டும் என்று அவருக்கு ஆசை. புலி வேட்டை என்பது பெரும் சாகசம் என்பதால் அதை முயன்று பார்க்கவிரும்பினார்.
ராயல் பெங்கால் டைகரை வேட்டையாடவேண்டும் என்றால், பாவல் ராஜ்ஜியத்தில் உள்ள கானகத்துக்குத்தான் செல்லவேண்டும். உடனே இந்திய அரசாங்கம் பாவல் அரண்மனைக்கு கிச்சனர் துரை வரவிருப்பதாக தகவல் அளித்தது.
செய்தி கிடைத்ததும், ராஜ்பாரி அரண்மனையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கிச்சனர் பிரபு வருவது அரண்மனைக்குப் பெருமை என்பதால் அவர் வருகையை சிறப்பிக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.  கிச்சனர் வேட்டையாடச் செல்லும்போது யாரை அவருடன் அனுப்புவது? புலி வேட்டையில் புலியாகத் திகழ்ந்த மேஜோ குமாரைவிட சிறந்த வீரன் அகப்பட்டுவிடுவானா என்ன?
(தொடரும்)

கருத்துகள் இல்லை: