வியாழன், 7 ஜூன், 2012

ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவு கிளி ஜோசியம்


பாதாளத்தை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது ரூபாயின் மதிப்பு. வளர்ச்சி, வல்லரசு என்ற வெற்று ஜம்பங்களையும், முறுக்கேற்றிவிடப்பட்ட முட்டாள்தனங்களையும் நிலை தடுமாற வைத்திருக்கிறது இந்த வீழ்ச்சி. டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கடந்த 7 மாதங்களில் மட்டுமே 25% வீழ்ச்சியடைந்து, 56க்கும் 57க்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கிரீஸின் நிலைகுலைவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடியும்தான் ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணமென்றும், ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி ஜப்பானும் நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னேறினால்தான், இந்தியாவும் மீளமுடியும் என்றும் கூறியிருக்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.  இந்தியாவின் எதிர்காலம் குறித்து இதைவிட நம்பகமானதொரு விளக்கத்தை நாம் கிளி ஜோசியக்காரனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளமுடியும்.

சர்வதேச நிதிமூலதனம் ஐரோப்பிய நெருக்கடியின் காரணமாக  டாலரைத் தஞ்சமடைகிறது. இதன் காரணமாக டாலருக்கான தேவை அதிகரித்து உலகளவில் அதன் மதிப்பு உயர்வதென்பது, ரூபாயின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று. ஆனால், அது மட்டுமே காரணமல்ல. இருந்த போதிலும், பஞ்சத்தைப் பயன்படுத்தி மக்களைச் சூறையாடும் வணிகனைப் போல, இந்தியாவைச் சூறையாடுவதற்கான இன்னொரு வாய்ப்பாக இந்த சர்வதேச நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் ஏகாதிபத்திய முதலாளிகள்.
“நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைத்து டாலர் கையிருப்பை அதிகமாக்கு, வரி வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைக்க மானியங்களை வெட்டு, வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பொருளாதார சீர்திருத்தங்களை முடுக்கி விடு  இல்லையேல் இந்தியப் பொருளாதாரம் குறித்த எமது மதிப்பீட்டை (Sovereign Credit Rating) கீழிறக்க வேண்டியிருக்கும்” என்று சர்வதேச தரநிர்ணய நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்டு புவர் இந்திய அரசை எச்சரித்திருக்கிறது.
இந்த எச்சரிக்கையின் விளைவுதான் தற்போதைய பெட்ரோல் விலையேற்றம். பிற துறைகளிலான மானிய வெட்டுகள் இனித் தொடங்கும். தனியார்மய-தாராளமய நடவடிக்கைகளைப் பொருத்தவரை, “வங்கி, காப்பீடு மற்றும் பென்சன் நிதி தனியார்மயம் தொடர்பான நிதிச் சீர்திருத்த மசோதாக்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விடும்” என்று அமெரிக்க நிதித்துறை செயலருக்கு வாக்களித்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, டீசல்,எரிவாயு மானியங்களை முற்றாக வெட்டுவது போன்றவற்றை ஆறு மாதங்களில் முடித்து விடுவதாகக் கூறியிருக்கிறார் நிதித்துறை ஆலோசகர் கௌசிக் பாசு. அந்நிய முதலீட்டாளர்களுக்கான சலுகைகளை அதிகரிப்பது, மக்கள் எதிர்ப்பால் தாமதப்படுத்தப்படும் சுரங்கங்கள், தொழிற்சாலைகள் போன்ற திட்டங்களை அதிரடியாக முடுக்கிவிடுவது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் டாலர் முதலீட்டைக் கவர்ந்திழுக்கச் சொல்கிறார்கள் இந்தியத் தரகு முதலாளிகள். சர்வதேச நிதி நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் டாலர் முதலீட்டைக் கவர்ந்து, அதன் மூலம் ரூபாயின் மதிப்பை உயர்த்திக் கொள்வதுதான் இந்த அரசின் நோக்கமேயொழிய, இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அல்ல.  இப்பொருளாதாரக் கொள்கையின் அரசியல் மொழிபெயர்ப்புதான் அமெரிக்காவின் காலை நக்கி வல்லரசாவது என்ற கனவு.
பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனம் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை. அதன் ஆலோசனைப்படி கிரீஸ் அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் அந்நாட்டைப் படுகுழியில் வீழ்த்தின. இந்தியாவும் அதே படுகுழியை நோக்கித்தான் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்த உண்மை சராசரி ஐ.பி.எல். இந்தியர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, என்.ஆர்.ஐ இந்தியர்களுக்குப் புரிந்திருக்கிறது. அவர்கள் இந்திய வங்கிகளில் போட்டிருக்கும் டாலர் முதலீடுகளுக்குக் கூடுதல் வட்டி தருவதாக  அரசு ஆசை காட்டியும் மயங்காமல், தமது முதலீடுகளை அமெரிக்காவுக்கு கொண்டு செல்கிறார்கள் இந்த இந்தியர்கள். நாட்டை நெருங்கிவரும் அபாயத்தினை அறிவிக்கின்ற எச்சரிக்கைச் சங்காக இதை எடுத்துக் கொள்ளலாம். ‘வல்லரசுக் கனவுக்கு சங்கு’ என்றும் இதனை விளங்கிக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: